கடிமணப் படலம் - 1248

bookmark

மனத்தொடு கூறல்

1248.    

கரு நாயிறு போல்பவர் காலொடு போய்.
வரு நாள். அயலே வருவாய்;- மன்னே!-
பெரு நாள். உடனே. பிரியாது உழல்வாய்;
ஒரு நாள் தரியாது ஒழிவார் உளரோ?
 
மன்னே!-என் மனமே!;கரு நாயிறு போல்பவர் காலொடு போய்-
கரிய  நிறமுடைய ஒரு சூரியனைப் போன்ற  இராமனின்  திருவடியோடு
கூடவே  சென்று;  வரு  நாள் அயலே  வருவாய் - அவன் திரும்பி
வருகின்ற  நாளில்  (அவன்   காலோடேயே  திரும்பி)  என்  அருகில்
வருவதாக  இருக்கிறாய்!;பெருநாள்  உடனே  பிரியாது உழல்வாய்!-
நான்  பிறந்த  நாள்  தொட்டுப்  பலநாட்களாய்  என்னோடயே சுற்றித்
திரிந்து  வந்த  நீ!;ஒருநாள் திரியாது உழல்வார் உளரோ? (இன்னும்
ஒரு நாளில் நினைத்த பலன் கைகூட இருக்கையில்.  அந்த)  ஒரு நாள்
பொறுத்திருக்கமுடியாமல்(இத்தனை  நாள்.   கூட   வாழ்ந்திருந்தாரைக்)
கைவிட்டு   நீங்குவார்    (உன்னையன்றியுலகில்   வேறு   எவரேனும்
உளரோ?.  

‘ஆத்திரக்காரர்க்குப்  புத்தி மட்டு’ என்பாராதலின். ஒரு நாள்தரியாது
உழல்வதாக  மனத்தைச்  சாடினாள்   பிராட்டி.  உலகத்துப்பொருள்கள்
இராமன் திருமேனிக்கு ஒவ்வாமையுணர்ந்து. “கரு  ஞாயிறு  போல்பவர்”
என்று        இல்பொருளை       உமையாக்கினாள்.    இராமனைக் 
“கைவளை        திருத்துபு        கடைக்கணின்        உணர்ந்த”
காலந்தொட்டு.   அவள்   நெஞ்சு     அவளைத்   துறந்து  இராமன்
திருவடியைத்   தொடர்ந்து   சுற்றிதிரிவதாயிற்று.  இதனால்.   இராமன்
திருவடியழகு.     சீதை     நெஞ்சிற்பதிந்து    நின்ற     நிலையைக்
கவிச்சுவையொடு கவிஞர்பிரான் அறிவித்தவாறு. நான்   தோன்றிய நாள்
தொட்டு என்னோடிருந்த நீ. இடையே ஒரு நாள்  அவரைக்கண்டவுடன்
என்னைக்  காணாது  அவரோடு  ஏகினாயே!   என்று இரங்குகின்றாள்.
நாளை    அவர்    என்னருகில்    வருவார்.     அவர்     காலைச்
சுற்றிக்கொண்டிருக்கிற  நீ.  அப்போது  என்னிடம்  வந்து தானே ஆக
வேண்டும்   என்பாள்.   “வரு  நாள்  அயலே   வருவாய்  மனனே!”
என்றாள்.  ஆக்கப்பொறுத்தும் ஆறப்பொறாதது போல்.   இன்னும் ஒரு
நாள் பொறாமல் அவர் உடன் ஓடிவிட்ட உன்னைப்போல்  யாருளார்?”
ஒரு  நாள்  தரியாது  ஒழிவார் உளரோ?” என்றாள். “மண்வழி  நடந்து
அடி  வருந்தப் போனவன்” (கம்ப. 535) எனவும். “நடந்தது    கிடந்தது
என் உள்ளம் நண்ணியே” (கம்ப. 537) எனவும் பிராட்டி.   பெருமானின்
திருவடிக்கும் நடைக்கும் மனம் பறிகொடுத்ததை முன்பும் கூறினார்.    4