கடிமணப் படலம் - 1245

bookmark

சனகன் வரவேற்பால் யாவரும் மகிழ்தல்

1245.    

இடம் படு புகழ்ச் சனகர் கோன் இனிது பேண.
கடம் படு களிற்று அரசர் ஆதி. இடை கண்டோர்.
தடம் படு புயத்த சிறு தம்பியர்கள்காறும்.
உடம்பொடு துறக்க நகர் உற்றவரை ஒத்தார்.
 
இடம்படு புகழ்ச் சனகர் கோன் இனிது பேண-  பரந்து  விரிந்த
புகழையுடைய  சனக  மன்னன்  இனிமை  தவழ உபசரித்த பாங்கினால்;
கடம்படு   களிற்று   அரசர்   ஆதி  -   மதம்   பொழி   ஆண்
யானைகளையுடைய   மன்னர்கள்  முதலாக;  தடம்படு  புயத்த  சிறு
தம்பியர்கள்  காறும்  -  அகன்ற  தோள்களையுடைய அம்மன்னர்கள்
முதல்  இளவரசர்கள்  வரையில்  உள்ளோரும்;  இடை   கண்டோர்-
இவ்விரு  பாலோர்க்கும் இடை வரிசையிலே காணப்பட்டோரும்  ஆகிய
அனைவரும்; உம்பொடு   துறக்க   நகர்   உற்றவரை  ஒத்தார் -
(இவ்வுலகத்திற்குரிய உடம்பை விடாமல்)  இவ்வுடம்போடேயே  சொர்க்க
உலகின்   தேவேந்திரன்   தலைநகரான   அமராவதி   நகரையடைந்து
விட்டவர்கள்      போன்ற     மகிழ்ச்சியை    மிதிலை    நகரத்தில்
அடைந்தார்கள்.  

விண்ணுலகத்து  இன்பத்தை  மண்ணுலகிலேயே  அடைய  வைத்தது
சனகரின்   இனிய    விருந்து   உபசரிப்பு  எனச்  சனக   மன்னனின்
விருந்தோம்பலின் பெருமை தெரிவித்தவாறு. “உடம்பொடு  துறக்க  நகர்
உற்றவரை  ஒத்தார்”  என்பதனால்  அவ்வாறு  அடைதலின்  அருமை
தெரிவித்தார்.  நாவாரச்  சிறந்த அமுதுண்ணல்.  கண்கள் ஆரக்  கலை
நிகழ்ச்சிகள்  காண்டல்.  செவிகளார இனிய இசை  கேட்டல்  முதலியன
விண்ணுலகத்திலிருப்பதுபோல்   மிதிலையிலும்   நிகழ்ந்தன  என்பதாம்.
தவம்  புரிவோர்.  இம்மையிலே  துறக்க  இன்பம்   உறுவர்   என்பது.
“தவஞ்செய்   மாக்கள்  உடம்பு  இடாது  -  அதன்   பயன்  எய்திய
அளவைமான”   (பொரு.  91-92)   என்னும்   தொடரால்  அறியலாம்.
இவர்களை.  “சீவன் முக்தர்” என்பர். உடம்பொடு  துறக்கம்  உறுதலை.
“மெய்யினோடு  அருந்துறக்க  முற்றார் என  வியந்தான்”  (கம்ப. 10106)
எனவும்  “உடல்  உறு  பாசம்  வீசாது  உம்பர் செல்வாரும்  ஒத்தார்”
(கம்ப.  4750)  எனவும்  மேலும்  உரைப்பார். இதனைச் ‘சதேக  முத்தி’
என்பர்.                                                    1