கங்கை காண் படலம் - 2431
பரதன் இலக்குவன் இரவை எங்கே கழித்தான்? எனக்
குகன் கூறல் (2431-2432)
இலக்குவன் யாது செய்தனன் எனப் பரதன் குகனை வினாவுதல்
2431.
தூண்தர நிவந்த தோளான்
பின்னரும் சொல்லுவான்! ‘அந்
நீண்டவன் துயின்ற சூழல்
இதுஎனின், நிமிர்ந்த நேயம்
பூண்டவன், தொடர்ந்து பின்னே
போந்தவன், பொழுது நீத்தது
யான்டு?’ என, இனிது கேட்டான்;
எயினர்கோன், இதனைச் சொன்னான்;
தூண்தர - தூணை ஒப்பாக; நிவந்த தோளான் - உயர்ந்த
தோள்களை உடையபரதன்; பின்னரும் சொல்லுவான் - மீண்டும்
குகனைப் பார்த்துப் பேசுவான்; ‘அந்நீண்டவன் துயின்ற சூழல் இது
எனின் - அந்த நெடியவனாகிய இராமன் உறங்கிய இடம்இது என்றால்;
நிமிர்ந்த நேயம் பூண்டவன் தொடர்ந்து பின்னே போந்தவன்- (அவ்
இராமனிடத்தில்) மேற்சென்ற மிகுந்த அன்பு கொண்டு அவனைத் தொடர்ந்து
அவன் பின்னேயேவந்தவனாகிய இலக்குவன்; பொழுது நீத்தது - இரவுப்
பொழுதைக் கழித்தது; யாண்டு?’- எவ்விடத்தில்?; என - என்று; இனிது
கேட்டான் - இனிமையாக வினாவினான்;எயினர்கோன் - வேட
வேந்தனாய குகன்; இதனைச் சொன்னான் - இந்த விடையைக்கூறினான்.
நெடியோன் என்று இராமனைப் பலவிடங்களிலும் கம்பர் குறிப்பர்.
அதனால் நீண்டவன்என்றார். நிமிர்தல் மேல் செல்லுதல் ஆதலின் உயர்ந்த
அன்பு என்றாகும். இலக்குவனைப்பற்றிவினாவுகிறபோது பரதனுக்கு ஏற்படும்
உள்ள நெகிழ்வைப் புலப்படுத்தவே ‘இனிது கேட்டான்’என்றார். 41
