கங்கை காண் படலம் - 2411
2411.
‘நின்ற கொடைக் கை என்
அன்பன் உடுக்க நெடுஞ் சீரை
அன்று கொடுத்தவன் மைந்தர் பலத்தை,
என் அம்பாலே
கொன்று குவித்த நிணம்கொள் பிணக் குவை
கொண்டு ஓடி,
துன்று திரைக் கடல்,
கங்கை மடுத்து இடை தூராதோ?
அன்று- (முடிசூட்டு விழா நிகழ இருந்த) அந்நாள்; கொடை நின்ற
கை - (முடிசூட்டுவதற்கு முன்பு செய்யவேண்டிய தானம் முதலியவற்றைச்
செய்து) நின்ற திருக்கரங்களை உடைய;என் அன்பன்-என் அன்பிற்குரிய
இராமன்; நெடுஞ் சீரை உடுக்க - பெரியமரவுரியைஉடுக்குமாறு;
கொடுத்தவள் - (அவனுக்குக்) கொடுத்தவளாகிய கைகேயியின்; மைந்தர்
பலத்தை - மகனார் ஆன பரதன் சேனையை; என்அம்பால் கொன்று
குவித்த - என்னுடையஅம்பினால் கொன்று குவியல் செய்த; நிணம்கொள்
பிணக்குவை - கொழுப்பு மிகுதிகொண்ட பிணங்களின் திரட்சியை;
கங்கை - இந்தக் கங்கா நதி; கொண்டுஓடி - இழுத்துக் கொண்டு
விரைந்து சென்று; துன்று திரைக்கடல் - நெருங்கியஅலைகளை உடைய
கடலில்; மடுத்து - அவற்றைச் சேர்த்து;இடை தூராதோ?- அக்கடல்
இடத்தைத் தூர்த்து விடாதோ? (தூர்த்துவிடும்)
‘நின்ற கொடைக் கை’ என்பதற்கு என்றும் வள்ளலாக நின்ற எனவும்
பொருள் உரைக்கலாம்.சீரை - மரவுரி. அதன் பொல்லாங்கு கருதி நெடுஞ்
சீரை என்றான். குகன் தன் ஆற்றாமையால்.‘மைந்தா’ என்றது பரத சத்துருக்
கனர்களையும் ஆம். சத்துருக்கனன் கைகேயியின் மகனல்லன்ஆயினும்
பரதன் துணையாதலின் ‘மைந்தர்’ என ஒன்றாக்கிக் குறித்தான் குகன் எனல்
அமையும்என்க. ‘பலம்’ என்றது சேனையை. 21
