கங்கைப் படலம் - 2078
இராமன் குகனிடம் சித்திரகூடத்துக்குச் செல்லும்
நெறி வினவுதல்
சித்திர கூடத்திற்குச் செல்லும் வழியைக் குகனிடம் இராமன் வினாவல்
2078.
அத் திசை உற்று, ஐயன்,
அன்பனை முகம் நோக்கி,
‘சித்திர கூடத்தின்
செல் நெறி பகர் என்ன,
பத்தியின் உயிர் ஈயும்
பரிவினன் அடி தாழா,
‘உத்தம! அடி நாயேன்,
ஓதுவது உளது’ என்றான்.
ஐயன் - இராமன்; அத்திசை உற்று - கங்கையின் அக்கரையை
அடைந்து; அன்பனை முகம் நோக்கி - குகனைப் பார்த்து; ‘சித்திர
கூடத்தின் செல் நெறி பகர்’என்ன - சித்திரகூடத்திற்குச் செல்லும்
வழியைக் கூறுக என்று கேட்க; (குகனும்) பத்தியின் உயிர் ஈயும்
பரிவினன் - இராம பக்தியால் தன்னுயிரையும் இராமனுக்கு ஈநதுவிடும்
அன்புடையனாகி; அடி தாழா - இராமன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி;
‘உத்தம! அடிநாயேன் ஓதுவது உளது’ என்றான் - எல்லோரிலும்
மேம்பட்டவனே! நாய்போல் கடைப்பட்டஅடிமையாகிய யான் சொல்லுவது
உளது’ என்று சொன்னான்.
“ஆணல்லன் பெண்ணல்லன்” என்னும் திருவாய்மொழியில் ‘இவன்
உலகத்துக் காணும் ஆண்களுள்ஒருவன் அல்லன்; புருஷோத்தமன்
என்பதாயிற்று’ என்னும் ஈட்டுரையை இங்குக் கருதுக. (திவ்ய.3062)
தன்னைத் தாழ நினைத்துக் கூறுவார் நாயை உவமையாக் கோடல் வழக்கு.
குகன் பலஇடங்களிலும் தன்னை ‘நாய்’ எனக் கூறல் காண்க. 37
