கங்கைப் படலம் - 2068
இராமனிடம் குகன் வேண்டுகோள் (2068-2072)
குகன் இராமனைத் தன் இருப்பிடத்திலே தங்க வேண்டுதல்
சந்தக் கலிவிருத்தம்
2068.
ஏவிய மொழிகேளா,
இழி புனல் பொழி கண்ணான்,
ஆவியும் உலைகின்றான்,
அடி இணை பிரிகல்லான்,
காவியின் மலர், காயா,
கடல், மழை, அனையானைத்
தேவியொடு அடி தாழா,
சிந்தனை உரை செய்வான்:
ஏவிய மொழி கேளா - இராமன் நாவாய் கொணரும்படி
கட்டளையிட்ட வார்த்தையைக்கேட்டு (எங்கே இராமன் தன்னைப் பிரிந்து
சென்றுவிடுவானோ என்னும் ஏக்கறவால்); இழிபுனல்பொழி கண்ணான் -
இறங்குகின்ற நீர் இடையறாது சொரிகின்ற கண்ணனாய்; ஆவியும்
உலைகின்றான் - உயிர் துடிக்கப் பெறுபவனாய்; அடி இணை
பிரிகல்லான் - இராமனதுதிருவடிகளை விட்டுப் பிரிய மாட்டாதவனாய்;
காவியின் மலர், காயா, கடல், மழைஅனையானை - நீலோற்பல
மலர், பூவைப் பூ, கடல், மேகம் இவற்றை ஒத்த கருநீல நிறம்படைத்த
இராமனை; தேவியொடு அடி தாழா - சீதையோடு சேர்த்து அடியில்
வீழ்ந்து வணங்கி; சிந்தனை - தன் எண்ணத்தை; உரை செய்வான் -
கூறத் தொடங்கினான்.
அன்பு மீக்கூர்ந்த அவலத்தின் மெய்ப்பாடுகள் புனல்பொழிகண்,
உலையும் ஆவி என்பன.இராமனுடைய நிறத்துக்கு நான்கும் உவமை.
இங்ஙனம் பல உவமைகளை ஒருசேரக் கூறி இராமனது பேரழகினை
அனுபவித்தல் கம்பர் இயல்பு; எடுத்துக்காட்டு: 1926. 27
