கங்கைப் படலம் - 2063
சீதாபிராட்டியும் இராமனும் தருப்பைப்புல்லில் உறங்க
இலக்குவன் காத்து நிற்றல்
2063.
மாலைவாய் நியமம் செய்து
மரபுளி இயற்றி, வைகல்,
வேலைவாய் அமுது அன்னாளும்
வீரனும் விரித்த நாணல்
மாலைவாய்ப் பாரின் பாயல் வைகினர்;
வரி வில் ஏந்திக்
காலைவாய் அளவும், தம்பி
இமைப்பிலன், காத்து நின்றான்.
வைகல் மாலை வாய் - நாளின் மாலைக் காலத்தே; நியமம்
செய்து -செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து; மரபுளி இயற்றி -
செய்ய வேண்டிய கடமைகளைச்செய்து; மரபுளி இயற்றி - செய்ய
வேண்டிய முறைப்படியே செய்து; வேலைவாய் அமுதுஅன்னாளும் -
பாற்கடலிலிருந்து தோன்றிய அமுதத்தை ஒத்தவளும்; வீரனும் -
இராமபிரானும்; பாரின் - பூமியில்; மாலை விரிந்த நாணல் பாயல்வாய்-
வரிசையாக விரிக்கப் பெற்ற நாணற்புல்லாகிய படுக்கையிலே; வைகினர் -
உறங்கினராக; தம்பி - இலக்குவன்; காலைவாய் அளவும் - காலைப்
பொழுது வரும் வரை; வரி வில் ஏந்தி - கட்டமைந்த வில்லை ஏந்தி;
இமைப்பிலன் - கண்இமையாது; காத்து நின்றான் - அவ்விருவரையும்
காவல் செய்து நின்றுகொண்டேயிருந்தான்.
இராமனும் சீதையும் உறங்க இலக்குவன் கண் உறங்காமல் நின்று
கொண்டே காவல் செய்து கொண்டிருந்தான் என்பதாம். ‘மாலை விரிந்த
நாணல் பாயல்’ - மாலையாகவிரிந்த நாணற்புல் படுக்கை என்றவாறாம். 22
