கங்கைப் படலம் - 2058
கங்கை கடக்க நாவாயொடு வழிநாள் வருமாறு
குகனிடம் இராமன் கூறுதல்
இராமன் குகனை நோக்கி ‘நாளை விடியலில்நாவாய் கொண்டு வருக’ எனல்
2058.
சிங்க ஏறு அனைய வீரன்,
பின்னரும் செப்புவான், ‘யாம்
இங்கு உறைந்து, எறி நீர்க் கங்கை
ஏறுதும் நாளை; யாணர்ப்
பொங்கும் நின் சுற்றத்தோடும்
போய் உவந்து, இனிது உன் ஊரில்
தங்கி, நீ நாவாயோடும்
சாருதி விடியல்’ என்றான்.
சிங்க ஏறு அனைய வீரன் பின்னரும் செப்புவான் -
ஆண்சிங்கத்தை ஒத்த இராமன்மேலும் கூறுவான்; ‘யாம் இங்கு உறைந்து
நாளை எறி நீர்க் கங்கை ஏறுதும் - நாங்கள்இத்தவச்சாலையில்
தங்கியிருந்து நாளைக்கு அவைவீசும் கங்கையாற்றைக் கடந்து செல்ல
எண்ணியுள்ளோம் (ஆதலின்); நீ-; யாணர்ப் பொங்கும் நின்
கற்றத்தோடும் போய்-புதுமை நிரம்பிய உன் உறவினர்களோடும் சென்று;
உன் ஊரில் உவந்து இனிது தங்கி -உன்னடைய நகரத்திலே மன
மகிழ்ச்சியோடு இனிமையாகத் தங்கியிருந்து; விடியல் - நாளைவிடியலில்;
நாவாயோடும் சாருதி - மரக்கலங்களோடும் வருவாயாக;’ என்றான்-.
குகனைத் தொடர்ந்து புதிய புதிய உறவினர்கள் மேலும் மேலும் வந்த
வண்ணம் இருத்தலின்,‘யாணர்ப் பொங்கும் நின் சுற்றம்’ என்றான். புதியராய்
வந்தாரைக் காணப் பலரும் வருதல்உலகியல்பு. 16
