கங்கைப் படலம் - 2034
2034.
தள்ளும் நீர்ப் பெருங் கங்கைத் தரங்கத்தால்,
வள்ளி நுண் இடை மா மலராளொடும்,
வெள்ளி வெண் நிறப் பாற் கடல், மேலைநாள்,
பள்ளி நீங்கிய பான்மையின், தோன்றினான்.
தள்ளும்நீர்ப் பெருங் கங்கைத் தரங்கத்தால் - மோதுகின்ற நீரை
உடைய பெரியகங்கையின் அலைகளால்; (அங்கே சீதையோடு முழுகி
எழுகின்ற இராமன்) வள்ளி நுண் இடை மாமலராளொடும் -
கொடிபோன்ற நுண்ணிய இடையை உடைய தாமரையில் வீற்றிருக்கும்
திருமகளுடன்; வெள்ளி வெண்நிறப் பாற்கடல் -வெள்ளி போன்ற
வெண்மையான நிறத்தை உடைய பாற்கடலில் மேல்; மேலைநாள்-
முன்னொரு காலத்தில்; பள்ளி நீங்கியபான்மையில் - அனந்தசயனத்தில்
அறிதுயில் ஒழிந்து எழுந்து நின்ற தன்மை போல; தோன்றினான்-
தோற்றமளித்தான்.
கங்கை அலைகள் வெண்மையாய் உள்ளன. அதன்மேல் இராமனும்
சீதையும் தோன்றுதல் திருப்பாற்கடலில் துயிலும் திருமால் திருமகளோடு
எழுந்து நின்றாற் போலும்என்றார். 19
