ஏழாம் அத்யாயம்
( ஒரு மாநிலம் சீரமைக்கப்படவும் புதிய குடியேற்றங்களை உருவாக்கவும் கையாளப்பட வேண்டிய வழி முறைகள் , பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் விதங்கள் , சமூக விதிமுறைகள், சமூக குற்றங்களுக்கான தண்டனைகள்)
பிறரது உதவியுடன் மட்டுமே ஓர் அரசன் ஆட்சி செய்ய இயலும். ஒற்றைச் சக்கரத்துடன் ஓர் இரதம் இயங்க முடியாது. எனவே, அரசன் அமைச்சர்கள் மற்றும் ஆலோசனை சபையை நியமித்து அவர்களது அறிவுரையைக் கேட்க வேண்டும். பிராமணர்களால் போற்றி வளர்க்கப்பட்டு , திறன் மிக்க மந்திரிகளால் செழிக்கப் பெற்று சாஸ்திரங்களில் இருந்து கற்ற ஞானத்தை ஆயுதமாகக் கொண்டு செயல்படுபவனே வெற்றியைத் தனதாக்கிக் கொண்டவன். அவன் தோல்வி என்பதையே அறியாத சத்ரியன் . எந்த எதிரிகளாலும் அவனுடைய இரகசியம் அறியப்படாது . ஆனால், அவன் எதிரியின் அனைத்து பலவீனங்களையும் அறிந்திருப்பான். ஆமையைப் போன்று ஆபத்து நேரும் வேலையில் புலன்களை உள்ளடக்கிக் காத்துக் கொள்வான்.
அது போல , செல்வத்தின் ஆதாரம் பொருளாதார நடவடிக்கைகள் ஆகும். அதில் ஏற்படும் குறைபாட்டால் பொருளாதார நெருக்கடி ஏற்படும். பலனளிக்கும் பொருளாதார நடவடிக்கையின்றி நிகழ் கால செழிப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சி இவை அழிந்து படுகிற அபாயம் உண்டு. எனவே ஒரு அரசன் பொருளாதாரத்தை சிறப்படையச் செய்வது முக்கியம். அதற்கு அவன் புதிய குடியேற்றங்களை செய்தாக வேண்டும்.அப்புதிய குடியேற்றங்கள் மக்களுக்கு வசதியை ஏற்படுத்தித் தரும் விதத்தில் அமைய வேண்டும். இதற்குக் காரணம், பொருளாதாரம் மக்களின் ஒத்துழைப்பு இன்றி ஈட்டுவது கடினம்.
புதிய குடியேற்றங்கள்
வெற்றிடங்களில் புதிய கிராமங்களைத் தோற்றுவித்தோ அல்லது பாழ்பட்ட கிராமப் பகுதிகளை புனர் நிர்மாணம் செய்தோ ஒரு மன்னன் கிராமப்புற மக்கள் தொகையை அதிகரிக்கலாம். இப்பணியைத் தனது சொந்த நாட்டு மக்களை அக்கிராமங்களுக்கு அனுப்பியோ, அல்லது வேற்று நாட்டு மக்களை இடம் பெறச் செய்வதன் மூலமோ தொடரலாம். கிராமங்களில் குடி கொண்டவர்கள் குறைந்தது நூறிலிருந்து அதிகபட்சம் ஐநூறு குடும்பத்தவர்களாய் விவசாயத்தை முக்கிய தொழிலாய் கொண்டிருக்க வேண்டும். கிராமங்கள் ஒன்றுக்கொன்று பாதுகாப்பளிக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும். கிராமங்களின் ஒவ்வோர் எல்லையும் இரண்டே கால் முதல் நான்கரை மைல் தூரம் அமைந்திருப்பதோடு மலை , காடு, நதி, ஆற்றுப்படுகை , குகை, கரைகள் போன்றவற்றால் சூழப்பட்டிருக்க வேண்டும்.
எதிரிகள் மற்றும் காட்டுவாசிகளின் தாக்குதலுக்கும் நோய் மற்றும் பஞ்சத்தின் பாதிப்பிற்கும் ஆளாகக் கூடிய எந்தவொரு பகுதி ( குடியேறுவதை) யையும் மன்னன் தவிர்க்க வேண்டும்,அதன் மூலம் பிற்காலத்தில் ஏற்படும் தொந்தரவுகளையும் , அளவுக்கதிகமான செலவையும் தவிர்க்கலாம். பத்து கிராமங்களுக்கு ஒன்று வீதம் ஒரு உப- மாவட்டத் தலைமையிடங்களையும், இருநூறு கிராமங்களுக்கு நடுவில் ஒரு மாவட்டத் தலைமையிடத்தையும், நானூறு கிராமங்களுக்கு ஒன்று விதம் ஒரு உயர் மாவட்டத் தலைமயிடத்தையும், அதுபோல எண்ணூறு கிராமங்களின் பொதுத்தலைமையிடமாய் ஒரு மாகாணத் தலைமையிடத்தையும் அமைத்தல் வேண்டும். அது போல , எல்லைகளில் தனது இராஜ்ஜியத்தின் நுழைவாயிலைக் காப்பதற்கு படைத் தலைவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் அரண்களை நிர்மாணிக்கலாம். எல்லை அரண்கள் மற்றும் கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளை வில்லாளிகள், வேடர்கள், பழங்குடியினர் போன்றோரால் காக்கலாம்.
மேலும் ( கிராமம் முழுமையாய் நிறுவப்பட்ட பின்) துறைத்தலைவர்கள் , கணக்கர்கள், குறிப்புகளைப் பராமரிப்பவர்கள், மருத்துவர்கள், தூதுவர்கள், குதிரைப் பயிர்ச்சியாளர்கள் போன்றவர்களுக்கும் இனாமாக நிலம் அளிக்கப்படலாம். அந்நிலங்களைப் பெறுபவர்கள் தங்கள் விருப்பம் போல் அவற்றை அடகு வைக்கவோ, விற்கவோ இயலாது. ( நிலத்தில் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே அவர்கள் அனுபவிக்கலாம்) வரி செலுத்துபவர்களுக்கு வாழ் நாள் முழுவதற்குமான பயிரிடும் நிலம் ஒதுக்கப்பட வேண்டும். ஒருவர் தன்னுடைய சொந்த முயற்சியால் விவசாயத்துக்காக பயன் படுத்திய நிலம் அவரிடமிருந்து பறித்துக் கொள்ளப்படாது. விவசாயம் செய்யாதவர்களுடைய நிலம் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு பிறரிடம் அளிக்கப்படலாம். கிராமத்தின் மற்ற தொழிலாளிகளோ வியாபாரிகளோ அந்நிலத்தைப் பயிரிடுவதற்கு உபயோகித்துக் கொள்ளலாம். பயிர்த் தொழில் செய்பவர்களுக்கு அவர்கள் திருப்பிச் செலுத்தும் திறனுக்கேற்றவாறு தான்யங்கள், கால்நடைகள், மற்றும் பணம் அளிக்கப்படலாம். வருமானத்தை அதிகரிக்கச் செய்கிற அல்லது கருவூலத்திற்கு பாதிப்பு உண்டாகாத வகையில் மக்களுக்குப் பல நன்மைகள் அளிக்கப்படலாம். கருவூலத்தில் குறைபாடு ஏற்பட்டால் அரசன் இராஜ்ஜியத்தின் வலுவை இழப்பான். அவன் மகனிடம் பரிவு காட்டும் தந்தையைப் போன்று செயல்பட்டு விதி விளக்குகளைப் பயனுள்ளதாக்க வேண்டும்.
துறவிகள் ( பிராமணர்களைத் தவிர), சொந்த நாட்டில் பிறக்காத மக்கள் குழுவினர் , வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களைத் தவிர மற்றவை நாட்டிற்குள் குடியேறுதல் கூடாது. ஆசிரமங்கள், தனியாக ஒதுக்கப்பட்ட இடங்களில் வாழும் துறவிகள் ஒருவருக்கொருவர் தொந்தரவு செய்யாமல் வாழலாம். ஏற்கனவே குடி கொண்டவர்கள் புதியதாய் வருபவர்களுக்கு இடமளிக்க வேண்டும். அதற்கு மறுப்பவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். தீவிரமான தண்டனைகளின் அச்சுறுத்தல் மூலம் ஒழுக்கச் சீர்கேட்டை அரசன் சரி செய்யலாம்.
தர்மத்தை வென்று அதர்மம் தலைதூக்குமெனில் அரசனே அழியும் நிலை ஏற்படலாம். புதிய குடியேற்றத்தில் கேளிக்கைக்கான இடமளிக்கப் படுவதில்லை. வேற்று மக்களுக்கு அடைக்கலமளிக்காத கிராமங்களில், மக்கள் முழுமையாய் விவசாயத்தில் ஈடுபடுவதால் அவர்களுடைய வேலைக்குத் தடையேற்படுத்தும் நடிகர்கள், நாட்டியக் கலைஞர்கள் , பாடகர்கள், இசைக் கலைஞர்கள், கதை கூறுபவர்கள் போன்றோருக்கு இடமளிக்கப்படுவதில்லை. அதன் விளைவாய் தொழிலாளர்கள் எண்ணிக்கை, பணம், தானியங்கள், பானங்கள், வியாபாரப்பொருட்கள் போன்றவை அதிகரிக்கும்.
( ஒரு குடியேற்றம் நடை பெரும் பொழுது அந்நிலப்பகுதி நீர்வளம், இரு பயிர்களை விதைக்கும் தன்மை, யானைக் காடுகள், வியாபார வழிகள் நிறைந்ததாய் இருப்பதே விரும்பத்தக்கது. அதிகச் செலவு அல்லது நஷ்டத்தின் காரணமாய் ஒரு நிலப்பகுதியில் குடியேற்றம் செய்வது கடினமாய்த் திகழுமெனில் அந்நிலத்தை அடைய விரும்பித் தோற்ற ஒருவரிடம் அதனை விற்று விடுவது நல்லது)
பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் விதங்கள்
மக்களின் நலனை மேம்படுத்துவதன் மூலம் அரசன் தனது அதிகாரத்தை விரிவுபடுத்தலாம். பொருளாதாரச் செயல்பாடுகள் அனைத்துக்கும் ஆதாரமாய் விளங்கும் கிராமப்புறங்களில் இருந்தே மன்னனுக்கு அதிகாரம் கிட்டுகிறது. மக்களுக்கும் தனக்கும் சொர்க்கம் போன்று பாதுகாப்பு அளிக்கும் கோட்டைகளை மன்னன் கட்டலாம். விவசாயத்திற்கு தொடர்ந்து நீர்வசதி அளிக்கக் கூடிய நீர் தேக்கங்களையும் , இரகசிய உளவாளிகள் , போர்த் தளவாடங்களை அனுப்பவும் , பெறவும் உதவும் வியாபார வழிகளையும் , யுத்தத்திற்கான பொருள்களை அளிக்கும் மூலங்களான சுரங்கங்களையும், பல்வேறு பயனுள்ள பொருள்களையும் , விலங்குகளையும் அளிக்கும் காடுகளையும் அமைக்கலாம். மன்னன் விவசயாத்தை அபராதம் வரி மற்றும் தொழிலாளர் பற்றாக்குறையில் இருந்து காக்கலாம்.
வளமிக்க வனங்கள், நீர்த்தேக்கங்கள் , சுரங்கங்களைச் சீரமைப்பதுடன் புதிய சுரங்கங்கள் , தொழிற்சாலைகள் , வனங்கள் ( மரம் மற்றும் பல பொருள்களுக்காக) மந்தைகள், சந்தைகள், துறைமுகங்கள் மற்றும் சாலைகள் அமைக்கலாம். இயற்கையான நீர்த் தேக்கங்கள் அமைத்து அவற்றை மலை நீர் மூலமோ தருவிக்கப்பட்ட நீர் மூலமோ நிரப்பலாம். அல்லது நீர்த்தேக்கம் கட்டுபவர்களுக்குத் தேவையான நிலம், சாலை வசதி, மரங்கள் போன்றவற்றை அளித்து உதவலாம். இதே உதவியை சரணாலயங்கள் மற்றும் கோயில் கட்டுபவர்களுக்கும் செய்யலாம். ஒரு நீர்த் தேக்கம் கட்டுவது போன்று கூட்டு முறையில் எவரேனும் பங்கேற்க மறுப்பார்கள் எனில் அவரது எருதுகளோ, வேலையாட்களோ அதில் பங்கு பெறலாம் . தான் கட்ட வேண்டிய பங்கினைச் செலுத்த வேண்டும். ஆனால் தன் பங்கிற்கு எவ்வித பலனையும் பெற இயலாது. நீர்த் தேக்கங்களில் இருந்து பெறப்பட்ட மீன்கள், வாத்துகள் மற்றும் காய்கறிகளின் மீதான உரிமை அரசனையே சாரும். பயிரிட முடியாத நிலங்களை மேய்ச்சலுக்கு அளிக்கலாம். திருடர்கள், காட்டு விலங்குகள் , விஷ ஜந்துக்கள் மற்றும் கொள்ளை நோய்களில் இருந்து கால்நடைகளைப் பாதுகாக்கலாம்.
வனங்களிலுள்ள நிலங்களை துறவிகள் வேதங்கள் கற்பதற்கும், அல்லது எல்லைக்கு அருகிலேயோ வேறு ஏதேனும் பொருத்தமான இடத்திலேயோ வனவிலங்குகளைக் காக்கும் சரணாலயங்களை அமைக்கலாம். உற்பத்தி மிக்க வனங்களையும் , அவ்வுற்பத்தியில் இருந்து பொருள்கள் தயாரிக்கும் தொழிற்ச்சாலைகளையும் வனங்களின் அருகில் காட்டு வாசிகளுக்கான இருப்பிடத்தையும் அமைக்கும் வகையில் அரசன் எல்லையை நிர்ணயிக்கலாம். அதுபோல, ஒரு அரசன் என்பவன் இராஜ சபையிலுள்ளவர்கள் , மாநில அதிகாரிகள், திருடர்கள் மற்றும் எல்லைக் காவலாளிகள் தாக்குதலில் இருந்தும் வணிக வழிகளைப் பாதுகாக்கலாம். அணைகள், பாலங்கள் கட்டுதல், கிராமங்களை அழகு படுத்துதல் , அவற்றைப் பாதுகாத்தல் போன்ற மக்களுக்குப் பயன்தரும் செயல்களைச் செய்யும் கிராமவாசிகளுக்கு சிறப்புச் சலுகை அளிக்கப்பட வேண்டும்.
சமூக விதிமுறைகள்
குடும்ப அங்கத்தினர்கள் , அடிமைகள் மற்றும் அடகுத் தொழில் செய்பவர்களின் ஒழுக்கத்தைக் கருத்தில் கொண்டு சட்டத்தை வலுப்படுத்த வேண்டும். மாநிலத்தின் நலத் திட்டங்களில் குழந்தைகள், வயதானவர்கள், ஆதரவு அற்றவர்கள் மற்றும் குழந்தைகளுக்காக செலவு செய்யலாம். கிராமத்துப் பெரியவர்கள் கோயில் சொத்துக்களுக்குப் பொறுப்பாளிகளாகவும் , வயது வராதவர்களுக்குப் பாதுகாவலர்களாகவும் ( பருவம் எய்தும் வரை) செயலாற்றலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் தனது மனைவி , குழந்தைகள், பெற்றோர், தம்பிகள், சகோதரிகள் ( மணமாகாதவர்கள் அல்லது விதவைகள்) ஆகியோரைக் கவனித்துக் கொள்ள ஏதேனும் ஒரு வேண்டுகோள் இருக்கும். மனைவி மற்றும் குழந்தைகளின் பராமரிப்பைச் சரிவர மேற்கொள்ள வேண்டும் , எவரும் இல்லற வாழ்வை விடுத்து துறவறம் பெற இயலாது, எவரும் ஒரு பெண்ணைத் துறவறம் மேற்கொள்ள தூண்டுதல் கூடாது. இல்லற வாழ்வைக் கடந்த ( உடல் சம்மந்தப்பட்ட செயல்களைக் கடந்த வயதுடைய) ஒருவன் நீதிபதிகளின் ஒப்புதலோடு ( அவனது குடும்பம் நன்கு நிர்வகிக்கப்பட்டதாய்) துறவறம் மேற்கொள்ளலாம். ஆனால், நீதிபதிகளின் மறுப்புக்கு ஆளாகும் நிலையில் அவன் துறவறத்தில் இருந்து தடுக்கப்படுவான்.
தலைநகர் - பாதுகாப்பு மற்றும் நன்மை
ஒவ்வொரு வீட்டிலும் வேலை செய்வதற்கென்று நிலம் ஒதுக்கப்படும். அங்கு பூக்கள் , பழங்கள் இதர வணிகப் பொருள்களை வளர்க்க அனுமதிக்கலாம். பத்து வீட்டிற்கொரு கிணறு வழங்கப்பட்டிருக்க வேண்டும். எண்ணெய்கள் , தானியங்கள், சர்க்கரை, உப்பு வாசனைத் திரவியங்கள் , மருந்துகள் , உலர் காய்கறிகள் , உலர்ந்த இறைச்சி , வைக்கோல், எரி பொருள்கள், உலோகங்கள் , நிலக்கரி, விஷம், கொம்புகள், மூங்கில், மரக்கட்டைகள், ஆயுதங்கள், பட்டயங்கள் , கற்கள், கால்நடைத் தீவனங்கள் போன்ற பொருள்களைப் பல வருட உபயோகத்துக்குப் போதுமான அளவில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
யானை, குதிரை, ரதம், காலாட்படை ஆகியவை ஒவ்வொன்றும் ஒன்றிற்கு மேற்பட்ட தலைவர்களின் கீழ் இருக்க வேண்டும். பல தலைவர்களைக் கொண்டு ஒருவருக்கொருவர் பயம் கொள்வதால் எதிரிகளின் ஆசை வார்த்தைகளுக்கு இணங்குவதில் இருந்து அனைவரும் தடுக்கப்படுவர்.நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் வேற்று நாட்டவர்கள் நகருக்குள் அனுமதிக்கப்படக் கூடாது . அவர்களை, கிராமப் புரத்துக்கு விரட்டி அடிக்கலாம். அல்லது, வரிகளையும் கட்டச் செய்யலாம்.
தண்டனைகள்
குழந்தைகள், மனைவி, பெற்றோர், சகோதரிகள் விதவை அல்லது மணமாகாத சகோதரிகளை ஆதரிக்காத குற்றத்துக்கு 12 பணம் அபராதமாய் விதிக்கலாம். குழந்தை மற்றும் மனைவியை நிராதரவான நிலையில் விடுத்து துறவறம் பூண்டால் அபராதம் அல்லது குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும். கோட்டைக்குள் அனுமதி இன்றி நுழைதல் இரகசிய வழி அல்லது சுவரின் ஒரு துவாரத்தின் வழியே பொருளுடன் ( நம்பிக்கையாய் அளிக்கப்பட்டது) கோட்டையை விட்டு வெளியேறுவதற்கு தண்டனை, கால் தசைகளைத் துண்டித்தல் அல்லது 200 பணம். இறந்தவர்க்கு அவரது இனத்துக் கென்று ஒதுக்கப்படாத நிலத்தில் ஈமக்கடன்களைச் செய்தால் குறைந்த பட்ச அபராதம் விதிக்கப்படவேண்டும் .
