ஏற ஒன்று! இறங்க ஒன்று!

bookmark

ஓர் ஊரில் குப்பன் என்ற வேலைக்காரன் இருந்தான். நன்கு பேசும் திறமை கொண்டிருந்த அவன் பேராசைக்காரனாகவும் விளங்கினான். 

அந்த ஊரில் இருந்த செல்வன் ஒருவனுக்குத் தேங்காய் தேவைப்பட்டதும் யாரை விட்டுத் தன் வீட்டுத் தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பது என்று சிந்தித்தான்.

அப்பொழுது வீதி வழியாகக் குப்பன் சென்று கொண்டிருந்தான்.

அவன் இயல்பை அறியாத செல்வன், "குப்பா! மரத்தில ஏறித் தேங்காய் பறித்துப் போடுகிறாயா?" என்று கேட்டான்.
"போடுகிறேன்" என்று குப்பன் மரத்தில் ஏறினான்.

தனக்கு ஒரு காய். மரத்தில் ஏறிய இவனுக்குக் கூலி ஒரு காய் என்று நினைத்த செல்வன் "இரண்டு காய்கள் போதும்" என்று குரல் கொடுத்தான்.

ஆனால் குப்பனோ நன்கு முற்றியிருந்த ஐந்து தேங்காய்களைக் கீழே தள்ளிவிட்டு இறங்கினான்.

"இரண்டு காய்கள் போதும் என்றேனே, எதற்காக ஐந்து காய்களைத் தள்ளினாய்?" என்று கோபத்துடன் கேட்டான் செல்வன்.
அதற்குக் குப்பன், "ஏற ஒன்று, இறங்க ஒன்று. நீ கூலியாகக் கொடுத்த ஒன்று. தானாக எடுத்துக் கொண்ட ஒன்று. மீதும் ஒரு காய் உள்ளது. அதை நீயாகத் தந்தால் தா. இல்லையேல் நானே எடுத்துக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு ஐந்து தேங்காய்களையும் தூக்கிக் கொண்டு புறப்பட்டான்.

என்ன பேசுவது என்று தெரியாமல் வாயடைத்து நின்றான் செல்வன்.