எழுச்சிப் படலம் - 832

bookmark

மகளிர் கொங்கைகள் அணிபெற்று விளங்குதல்

மகளிர் ஆடவர் திரள்
 
832.    

முத்தினால். முழு நிலா எறிக்கும்; மொய்ம் மணிப்
பத்தியால். இள வெயில் பரப்பும்;- பாகினும்
தித்தியா நின்ற சொல் சிவந்த வாய்ச்சியர்
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே.
 
பாகினும் தித்தியாநின்ற- வெல்லப் பாகைக் காட்டிலும் தித்திக்கும்;
சொல் சிவந்த வாய்ச்சியர்- சொல்லையும். சிவந்த வாயையும் உடைய
பெண்களின்; உத்தராசங்கம்  இட்டு  -  மேலாடையிட்டு; ஒளிக்கும்-
மறைத்து  வைத்துள்ள;  கூற்றம்  -  இயமனைப்  போன்ற  வருத்தும்
தனங்கள்;  முத்தினால்  -  (தாம் அணிந்துள்ள) முத்து  மாலைகளால்;
முழு நிலவு எறிக்கும்- நிறை  மதியின் ஒளியை வீசும்; மொய்ம் மணி
பத்தியால் - நெருங்கிய இரத்தின மணிகளின் வரிசையால்; இளவெயில்
பரப்பும் - இளவெயிலைப் பரவ விடும்.

தனங்களைக் கூற்றம் என்று உருவகப்படுத்தினார்.

தனங்களில் அணிந்த  முத்துமணி வடங்களால் நிலவு. வெயில் என்ற
இரண்டும் ஒரே காலத்தில் தோன்றும் என்ற நயம் கருதத் தக்கது.

உத்தராசங்கம்     - மேலாடை (வடசொல்).  கூற்றம்    உயிர்களை
உடலிலிருந்து  பிரிக்க  நோய் முதலியவற்றில் மறைந்துநின்று  பிரித்தல்
போல   இக்கூற்றமான   கொங்கை  மேலாடையில்   மறைந்து  நின்று
வருத்துகின்றது என்பது.                                      16