எழுச்சிப் படலம் - 831

bookmark

சேனை செல்லும் வழி

831.    

இணை எடுத்து இடை இடை
   நெருக்க. ஏழையர்
துணை முலைக் குங்குமச்
   சுவடும். ஆடவர்
மணி வரைப் புயத்து மென்
   சாந்தும். மாழ்கி. மெல்
அணை எனப் பொலிந்தது -
   அக் கடல் செல் ஆறுஅரோ.
 
இடை     இடை-  (அச்சேனை செல்லும்)  இடங்களில்  எல்லாம்;
இணை எடுத்து - (கூட்ட மிகுதியால்) ஒருவரை ஒருவர்  இணைதலைப்
பொருந்தி;  நெருக்க -  நெருக்குதலால்;  ஏழையர்  துணைமுலை  -
மகளிரின் இரு முலைகளிலும்; குங்குமச் சுவடும் - அணிந்த  குங்குமக்
குழம்பும்; ஆடவர் மணி - ஆண்களின் அழகிய;வரைப்   புயங்களில்
சாந்தும்-  மலைபோன்ற தோள்களில் பூசிய சந்தனக்  குழம்பும்; மாழ்கி
- (கீழே  உதிருமாறு)  அழிந்து போய்; அக்கடல் செல் ஆறு- அந்தக்
கடல் செல்லுகின்ற வழியானது;  மெல் அணை  என  -  (ஆண்களும்
மகளிரும் கலவி நிகழ்த்தும்) மெல்லிய படுக்கைபோலப்;  பொலிந்தது -
பொலிவுற்றது.

கூட்ட    மிகுதியால் இடையிடையே நெருக்கம் உண்டாக. அதனால்
ஒருவர்மேல் ஒருவர் உராய்தலால் சந்தனமும்  குங்குமமும்  உதிர்ந்தன.
அவ்வாறு    உதிர்ந்த   அக்குழம்புகள்   கலந்து   செல்லும்    வழி
படுக்கைபோல   விளங்கிற்று   என்பது.  -  தன்மைத்  தற்குறிப்பேற்ற
அணி.                                                    15