எழுச்சிப் படலம் - 830
குதிரைமீதும் யானைமீதும் மகளிர் ஊர்தல்
830.
மன் மணிப் புரவிகள் மகளிர் ஊர்வன.
அன்னம் உந்திய திரை ஆறு போன்றன;
பொன் அணி புணர் முலைப் புரி மென் கூந்தலார்
மின் என. மடப் பிடி மேகம் போன்றவே.
மகளிர் ஊர்வன- மகளிர் ஏறிச் செலுத்தக்கூடிய; மணி மன்
புரவிகள் - கிண்கிணி மாலை பூண்ட குதிரைகள்; அன்னம் உந்திய -
அன்னப் பறவைகளைச் சுமக்கின்ற; திரை ஆறு போன்றன -
அலைகளையுடைய ஆறுகளை ஒத்தன; பொன் அணி புணர்முலை -
பொன் அணிகளைப் பூண்ட நெருங்கிய தனங்களையும்; புரிமென்
கூந்தலார் - பின்னப்பட்ட மெல்லிய கூந்தலையுமுடைய மகளிர்; மின்
என - மின்னலைப் போலத் தோன்ற; மடப்பிடி- (அவர்கள்
ஏறியிருந்த) இளம்பெண் யானைகள்; மேகம் போன்ற - மேகத்தை
ஒத்தன.
கிங்கிணியின் ஓசை அன்னத்தின் குரலையும். குதிரைகள்
அலைகளையும். மகளிர் அன்னப் பறவையையும் ஒத்துள்ளமை
காணலாம். - தற்குறிப்பேற்ற அணி.
மகளிர் பெண்யானைகள்மேல் ஊர்தல் மரபு: களிறு ஆணாதலால்
கற்பிற்கு இழுக்காதல் நோக்கியும் களிறு மதம் கொள்ளின் அதனை
அடக்கியாளும் வன்மை இவர்களுக்கு இல்லையாதலானும் எனலாம். 14
