எழுச்சிப் படலம் - 828

bookmark

வெண்கொடிகள் வெண்மேகம் போலும் எனல்

828.    

நுடங்கிய துகிற் கொடி நூழைக் கைம் மலைக்
கடம் கலுழ் சேனையை. ‘கடல் இது ஆம்’ என.
இடம் பட எங்கணும் எழுந்த வெண் முகில்.
தடம் புனல் பருகிடத் தாழ்வ போன்றவே.
 
நுடங்கிய   துகில்கொடி- (யானையின்மேல்) அசைந்து  ஆடுகின்ற
வெண்மையான  கொடிகள்;  கடம்  கலுழ்  -  மத  நீர்  ஒழுகுகின்ற;
நூழைக்   கைம்மலை   சேனையை   -   உள்துளையோடு   கூடிய
துதிக்கையையுடைய  யானைப்படையை;  இது கடல் ஆம் என - இது
ஒரு  கடலாம் என்று கருதி; இடம்பட எங்கணும் - இடம் மறையும்படி
(வானத்தில்)  எங்கும்; எழுந்த வெண்முகில் - எழுந்த வெண்மையான
மேகங்கள்;  தடம்புனல் - மிகுதியாக (கடல்) நீரை; பருகிடத் தாழ்வ-
குடிக்க இறங்குவனவற்றை; போன்ற - ஒத்திருந்தன.

மதநீர்     ஒழுகுகின்ற  யானைப்படை கடலை  ஒத்துள்ளது;அந்த
யானைப்படை   மேல்  அசைந்தாடும்   வெண்கொடிகள்   அக்கடலின்
நீரைப்  பருகுமாறு  வந்த  வெண்மேகங்களை  ஒத்துள்ளன.  தன்மைத்
தற்குறிப்பேற்ற அணி.                                       12