எழுச்சிப் படலம் - 825
சேனை செல்லுதல்
நால்வகைப் படைகளின் எழுச்சி
825.
விடை பொரு நடையினான் சேனை வெள்ளம். ‘ஓர்
இடை இலை. உலகினில்’ என்ன. ஈண்டிய;
கடையுக முடிவினில். எவையும் கால் பட.
புடை பெயர் கடல் என. எழுந்து போயதே.
உலகினில்- உலகத்தில்; ஓர் இடை- சிறிது இடமும்; இலை என்ன
- இல்லை என்று சொல்லுமாறு; ஈண்டிய - நெருங்கிய; விடைபொரு -
காளையைப் போன்ற; நடையினான் - நடையுடைய தசரதன்; சேனை
வெள்ளம் - சேனைக் கூட்டமானது; கடையுக முடிவினில் - உலக
முடிவுக் காலத்தில்; எவையும் - எல்லாப் பொருள்களும்; கால்பட -
எழும் பெருங்காற்றால் அழிந்துபட; புடை பெயர் - (அப்போது)
கரைபுரண்டு வருகின்ற; கடல் என - கடலைப்போல; எழுந்து போயது
- எழுந்து சென்றது.
பெருமிதம் பற்றிக் காளையின் நடை அரசனது நடைக்கு
உவமையாயிற்று. தன்மைத் தற்குறிப்பேற்றவணி - தசரதன் சேனை
யுக முடிவில் பொங்கியெழும் கடல் போல எழுந்தது என்றார். 9
