எதிர்கொள் படலம் - 1139

bookmark

பரதன் இராமனை வணங்குதல்

தொழுத பரதனை இராமன் தழுவுதல்
 
1139.    

உன்னு பேர் அன்பு மிக்கு
   ஒழுகி ஒத்து. ஒண் கண் நீர்
பன்னு தாரைகள் தர.
   தொழுது எழும் பரதனை.
பொன்னின் மார்பு உற அணைத்து.
   உயிர் உறப் புல்லினான்-
தன்னை அத் தாதை முன்
   தழுவினான் என்னவே.
 
உன்னு     பேர்அன்பு  மிக்கு  ஒழுகி  ஒத்து  -  (எப்போதும்
இராமனையே)   நினைக்கும்   தன்மையுள்ள சிறந்த அன்பு (மனத்திலே)
மிகுந்து.  (அங்கு  அடங்காமல்  கண்   வழியாகச்)  சிந்தியது போன்று;
ஒண்கண்நீர் பன்னு  தாரைகள் தர - ஒளிபொருந்தும் கண்களில் நீர்.
அடர்ந்து  தாரை  தாரையாகப்  பெருக;  தொழுது எழும் பரதனை -
(தன்னை)   வணங்கி  எழுகின்ற (தம்பி) பரதனை; தன்னை அத்தாதை
முன்   தழுவினான்  என - இராமன் தன்னைத் தந்தை தசரதன் முன்
தழுவியது போலவே; பொன்னின்  மார்புஉற அணைத்து உயிர்உறப்
புல்லினான்     -     பொன்போன்ற     தன்மார்பிலே    அழுந்த
அணைத்துக்கொண்டு  உயிரும்  உயிரும்  பொருந்துமாறு தழுவினான்
(இராமன்).

அறம்  வளர்க்கும் கண்ணாளராகிய இருவர் உயிரும் ஒன்று என்பது
தோன்ற   “உயிர் உறப்புல்லினான்”   என்றார்.  அன்பு தாழ் உடைத்து
வெளிப்படும்  தன்மையது (திருக். 71) ஆதலால்.  பரதனின்  கண்ணீரை.
“உன்னுபேர் அன்புமிக்கு ஒழுகிஒத்து” என்றார். “தள்ளரிய   பெருநீதித்
தனியாறு   புக  மண்டும்  பள்ளமெனும்  தகையாள்  பரதன்    எனும்
பெயரான்  (கம்ப.  657)  ஆதலால்.  பரதனைத்   தனித்துக்  கூறினார்.
‘எள்ளரிய   குணத்தாலும்   எழிலாலும்    இவ்இருந்த    வள்ளரையே
அனையான்” (கம்ப. 657) எனப்படுபவன் பரதன்    ஆதலின். “தன்னை
அத்தாதை முன் தழுவினான்” எனப் புல்லினான் என்றார்.          26