எதிர்கொள் படலம் - 1135

bookmark

இராமன் தந்தையை அணுகுதல்

பணிந்த இராமலக்குவரைத் தயரதன் தழுவுதல்
 
1135.    

காவியும். குவளையும். கடி கொள் காயாவும் ஒத்து.
ஓவியம் சுவை கெடப் பொலிவது ஓர் உருவொடே.
தேவரும் தொழு கழல் சிறுவன். முன் பிரிவது ஓர்
ஆவி வந்தென்ன வந்து. அரசன்மாடு அணுகினான்.
 
காவியும்   குவளையும் கடிகொள் காயாவும் ஒத்து- நீலோற்பல
மலரையும்.   கருங்குவளை   மலரையும்   வாசனைகொண்ட   காயாம்
பூவையும் போன்று; ஓவியம் சுவைகெடப் பொலிவதோர் உருவொடு-
சித்திரத்தில்    எழுதும்   உருவம்    இனிமையின்றிப்     போகும்படி
விளங்குகின்ற ஒப்பற்ற வடிவத்துடனே; தேவரும் தொழுகழல் சிறுவன்
-    தேவர்களும்   வந்து   வணங்குதற்குரிய    திருவடிகளையுடைய
(சக்கரவர்த்தித்    திருமகனான)   இராமன்;   முன்   பிரிவது   ஓர்
ஆவிவந்தென்ன - இராமனை     தா      என்று    விசுவாமித்திரர்
கேட்டபோது    (தசரதனைவிட்டு)     நீங்கிய     உயிர்    (மீண்டும்
அவனுடம்பில்)     வந்து      சேர்ந்தாற்போலே;    அரசன்   மாடு
அணுகினான்  -  தசரதச்  சக்கரவர்த்தியிடம்  வந்து எய்தினான்.

“தேவரும்     தொழு கழல் சிறுவன்” என்பதனால். தெய்வத்தன்மை
சுட்டியதோடு.   காட்சியை  நடையோவியப்  படுத்துகிறார்.   முன்பு  -
“நின்புதல்வர்  நால்வரிலும் கரிய செம்மல்  ஒருவனைத்  தந்திடுதி  என
உயிர்  இரக்கும்  கடுங்கூற்றின்  (விசுவாமித்திரர்)  உளையச்  சொன்ன”
(கம்ப.  324)  போது என விரிக்க. விசுவாமித்திரரிடம்  தசரதன்  இராம
லக்குவரைக்   கையடைப்படுத்திய    போது.    மன்னன்    இன்னுயிர்
வழிக்கொண்டால்   என”   (கம்ப.   334)    என்று  கவிஞர்  பிரான்
உவமித்திருந்ததை  மறவாமல்  நினைவுகூர்ந்து  அன்றுபிரிந்த   உயிரை
இன்று   இணைக்கின்றார்   என்க.   “ஓவியத்து    எழுத    ஒண்ணா
உருவத்தாய்”   (கம்ப.  4020)  எனப்படுபவன்  ஆதலின்.    “ஓவியம்
சுவைகெடப்பொலிவதோர் உருவொடே” என்றார்.                22