எதிர்கொள் படலம் - 1128
இருவர் சேனையும் சந்தித்தல்
இருபெரு மன்னர் சேனையும் ஒன்றுதல்
1128.
மாறு இலா மதுகையான் வரு பெருந் தானைமேல்.
ஊறு பேர் உவகையான் அனிகம் வந்து உற்றபோது.
ஈறு இல் ஓதையினொடும். எறி திரைப் பரவைமேல்
ஆறு பாய்கின்றது ஓர் அமலைபோல் ஆனதே.
மாறு இலா மதுகையான் வருபெருந்தானை மேல்- ஒப்பிலாத
வலிமையுடைய தசரதனுடைய தாய் வருகின்ற பெரிய சேனைக்கு
எதிரே; ஊறு பேர் உவகையான் அனிகம் வந்து உற்றபோது -
மேன்மேற் பொங்குகின்ற பெருங்களிப்பையுடைய சனகனது சேனை
வந்து சேர்ந்த அப்போது; ஈறுஇல் ஓதையினொடும் எறிதிரைப்
பரவைமேல் - எல்லையில்லாத ஓசையுடனே வீசுகின்ற
அலைகளையுடைய கடலின் மேலே; ஆறுபாய்கின்றது ஓர் அமலை
போல் ஆனது - ஆறு ஒன்று சென்று பாய்கின்றதனால் உண்டாகிற
ஓசைபோல ஒரு பேராரவாரம் உண்டாயிற்று.
இங்கும் தசரத சேனை மிகப் பெரியது எனக் குறிக்கக் கடலை
உவமித்தார்: சனக சேனை அவ்வளவு பெரியது அன்று என்று
உணர்த்த ஆற்றை உவமித்தார். இரண்டு சேனைகளும் கடலும் ஆறும்
சந்திப்பது போன்ற பேர் ஆரவாரத்தோடு சந்தித்தன என்றார்.
எதிர் கொள் படலம் எனும் படலப் பெயர் இப்பாடலால் விளங்கும்.
மாறு - ஒப்பு. “மாறின்மையின் மறம்வாடும் என்று
இளையோரையும் எறியான்” (சீவக. 261) என்புழிப் போல. 15
