எதிர்கொள் படலம் - 1125
சனகன் எதிர்கொளவரும் வழியின் காட்சி
சனக மன்னன் வருகின்ற வழிக் காட்சி
1125.
தா இல் மன்னவர்பிரான் வர. முரண் சனகனாம்
ஏ வரும் சிலையினான். எதிர் வரும் நெறி எலாம்.
தூவு தண் சுண்ணமும். கனக நுண் தூளியும்.
பூவின் மென் தாது உகும் பொடியுமே - பொடிஎலாம்.
தாஇல் மன்னவர் பிரான் வர- குற்றமில்லாத மன்னர்க்கு
மன்னனான தசரதச் சக்கரவர்த்தி. தனது நகரத்திற்கு
வருகைபுரிகையில்; முரண் சனகனாம் ஏவரும் சிலையினான்- வலிமை
மிகும் சனகனாகிய அரிய அம்புகள் தொடுக்கவல்ல வில் வீரனாகிய
அரசன்; எதிர்வரும் நெறிஎலாம் - எதிர் கொண்டு அழைத்துவர
உள்ள வழிகள் முழுவதும்;தூவுதண் சுண்ணமும் கனக நுண் தூளியும்
- மங்கல நிகழ்ச்சிகளில் மேலே தூவப்படுகிற குளிர்ச்சி தரும்
வாசனைப் பொடிகளும் (அணிகளின் உராய்வினால்) சிந்துகின்ற)
பொன்னாபரணங்களின் நுட்பமான பொற் பொடிகளும்; பூவின் மென்
தாது உகும் பொடியுமே - மலர்களிலிருந்து சிந்துகிற மெல்லிய
மகரந்தப் பொடிகளும் ஆகிய இவையே; பொடி எலாம் - (அங்குச்
சிந்திய) பல்வகைத் தூசுகள் ஆகும்.
உலகில். எளியவையே தூசு எனப்பட. அங்கு மதிப்பு மிக்கவையே
தூசுகள் ஆயின என்க. தா இல் - குற்றமற்ற;கேடு அற்ற எனினுமாம்.
“தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்” (தொல். புறத். 5) இரப்போர்
கடலை ஈந்தே கடந்து (கம்ப. 172). மண்ணின்மேல் வான் புகழ்
நாட்டான் ஆதலின். தசரதனை. “தா இல் மன்னவர் பிரான்
வர”எனறார். 12
