எதிர்கொள் படலம் - 1121

bookmark

எங்கும் திருமகளின் விளக்கம்

1121.    

கொடி உளாளோ? தனிக் குடை உளாளோ? குலப்
படி உளாளோ? கடற் படை உளாளோ? பகர்
மடி இலா அரசினான் மார்பு உளாளோ? வளர்
முடி உளாளோ? தெரிந்து உணர்கிலாம் - முளரியாள்.
 
முளரியாள்    - செந்தாமரை மலரில்   வதியும்  திருமகள்;  பகர்
மடிஇலா  அரசினான்  -  (புகழ்ந்து)  கூறப்படுகிற சோம்பல் இல்லாத
அரசாட்சி   செய்யும்  தசரத  மன்னனுடைய;  கொடி  உளாளோ  -
கொடியில்  உள்ளாளோ?; தனிக் குடை உளாளோ? - ஒப்பற்ற வெண்
கொற்றக்   குடையிலே  இருக்கின்றாளோ;   குலப்படி  உளாளோ -
பரம்பரை    பரம்பரையாக   வருகின்ற   அவனது     இராச்சியத்தில்
இருக்கின்றாளோ;  கடல்  படை உளாளோ? - கடல் போன்ற அவன்
சேனையிலே  இருக்கின்றாளோ?;  மார்பு  உளாளோ? - அம் மன்னர்
மன்னனின் மார்பிடத்தே இருக்கின்றாளோ?; வளர் முடி உளாளோ? -
அழகு  வளரும்  அவன் மணிமகுடத்தில் இருக்கின்றாளோ?;  தெரிந்து
உணர்கிலாம் - திருமகள்  இருக்குமிடம் இன்னது எனத் தெளிந்தறியக்
கூடவில்லை.

மன்னர்களிடம்    திருமகள் வாசம்  புரியத்தக்க இவையனைத்திலும்
ஏதோ  ஓரிடத்தில்  வசிப்பது  அவள்  வழக்கம்; தரசதன்  ஆட்சியில்
அவள்   அனைத்திலும்  உள்ளாள்  என்றவாறு.   “மடியிலான்   தாள்
உளாள் தாமரையினாள்” (திருக். 617) எனும்  அருமைத்   திருக்குறளின்
கவிதை விளக்க வுரையாவது இது.                              8