எட்டாம் அத்யாயம்

எட்டாம் அத்யாயம்

bookmark

( ஆலோசகர்கள் மற்றும் மந்திரிகளின் அவசியம் பற்றி அர்த்தசாஸ்திரம் கூறும் முக்கிய கருத்துக்கள், ஆலோசகர்களை நியமிக்கும் விதம், ஆலோசகர்களுடன் கலந்தாய்வு செய்தல், இரகசியத்தை காத்தல், ஆலோசகர்களின் எண்ணிக்கை, கலந்தாய்வு செய்வதன் ஐந்து குறிக்கோள்கள், அமைச்சர்களின் பங்கு, அரசன் ஆலோசகர்களை நியமிக்கும் முன் அவர்களை விசாரணை  செய்யும் விதம், அமைச்சர்களின் நேர்மையைச் சோதிப்பதன் அவசியம்,ஒரு அமைச்சருக்கு இருக்க வேண்டிய பண்புகள்,ஒரு ஆலோசகர் மன்னனுக்கு   அறிவுரை கூறும் விதம்,மன்னனிடன் பணியாற்றும்  ஆலோசகருக்கு சாணக்கிய  நீதி தரும்  அறிவுரைகள்)

ஆலோசகர்கள் மற்றும் மந்திரிகளின் அவசியம் பற்றி அர்த்தசாஸ்திரம் கூறும் முக்கிய கருத்துக்கள்

அர்த்த சாஸ்திரத்தைப் பொருத்தவரை ஆலோசனை என்பது மிக முக்கியமான ஒன்று. நல்ல ஆலோசனையின் திறன்   , இராணுவத்தின் பலத்தை விட உயர்ந்தது. சரியான நீதியுடைய  அரசன் ஆற்றல்  மிக்க அரசர்களைக் கூட வென்றுவிட இயலும். சில சமயங்களில் அதிகாரிகள் செய்யத் தவறிய கடமைகளை, அரசனே ஊகித்தறிய வேண்டி இருக்கும். மேலும், அனைத்துப் பணிகளையும் மன்னனே  செய்ய இயலாததால் அவை பகுக்கப்பட்டு பல இடங்களில் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்படும். எனவே, அப்பணிகளைச் சரியான இடத்தில் , சரியான நேரத்தில் முடிக்கவல்ல அமைச்சர்களை மன்னன் நியமிக்க வேண்டும்.

ஆலோசகர்களை நியமிக்கும் விதம்

அர்த்தசாஸ்திரத்தைப்  பொறுத்தவரையில்  ஆலோசகர்களை அரசனே நியமித்துக் கொள்ள சில ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது. அரசன் தன்னை மீறி நடக்காதவரை தனது தோழனையும் , மிரட்டாத வரையில் தன்னுடன் இருப்பவர்களையும் ஆலோசகர்களாய் நியமிக்கலாம். விசுவாசத்தில் மட்டும் இன்றி அரசனின் செயல்பாடுகளிலும் தன் திறமையை நிரூபித்த ஒருவனையோ அல்லது ஆட்சியைக் கவர்ந்து கொள்ள மரபு  வழி  அமைச்சர் குடும்பத்தை சேர்ந்த ஒருவனையோ பட்டறிவு கொண்ட துடிப்பான இளைஞனையோ அரசன் தனது ஆலோசகனாய் நியமிக்கலாம்.

இதில்,  தனது சிறு வயதில் பழகிய தோழனை ஆலோசகனாய் வைக்க முடிவெடுக்கும் பொழுது, அத் தோழனாகிய ஆலோசகன் எதிர்காலத்தில் ( அரசன் தனது பால்ய நண்பன் தானே என்று ) வரம்பு மீறி நடக்காமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். அதுபோல, விசுவாசத்தின் அடிப்படையில் ஒருவனை ஆலோசகராக அறிவிக்க அரசன் முற்படும் பொழுது, அவனுக்கு அதற்கு உண்டான குறைந்தபட்ச  படிப்பறிவும் இருக்கும் படி , பார்த்துக் கொள்ளுதல் நலம். ( வெறும் விசுவாசத்தின் அடிப்படையில் மட்டும் ஒருவனை ஆலோசகராக நியமித்தல் கூடாது ). 

அதே போல, மரபு வழியில் வந்த அமைச்சர் பரம்பரையில் தோன்றிய ஒருவனை, அரசன் தனது ஆலோசகாரக நியமிக்கும் பொழுது, அந்த மரபு வழியில் வந்த அமைச்சர் உண்மையாக இருப்பானா என்பதை சோதிக்க  வேண்டும். இல்லை எனில், அவன் தனது அனுபவத்தைக் கொண்டு மன்னன் அசந்த நேரம் பார்த்து ஆட்சியைத் தட்டிப் பறித்துக் கொள்ள நேரிடும். எனவே இதில்  கவனம் தேவை .

ஆலோசகர்களுடன் கலந்தாய்வு செய்தல்

மன்னன் ஒருவன் தனது சொந்த நாட்டு மக்கள் மட்டும் இன்றி எதிரி நாட்டில் வாழும் சில மக்களுக்கும் உண்மையாயிருக்கும் வகையில் எந்த முடிவையும் எடுக்கும் முன் நிதானித்து செயல்படுதல் அவசியம். வேதங்களைக் கற்றறியாத ஒருவனுக்கு மத ரீதியான கருத்துகள் பயனற்றது. அதே போல் அரசியலறிவைப்  பெற்றிராத ஒருவரது ஆலோசனை மன்னனுக்குப்  பயனளிப்பத்தில்லை.  

இரகசியத்தை காத்தல்

அர்த்தசாஸ்திரம் கூறுகிறது எந்தவொரு செயலும் கவனமான பரிசோதனைக்குப் பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தகைய நுண் ஆய்வுகள் நடைபெறும்  இடம் எவராலும் கண்டறிய இயலாத பறவைகள் கூட எட்டிப் பார்க்காத இடமாய் இருக்க வேண்டும். அனுமதி பெறாத எவரையும் கூட்டம் நடைபெறும் இடத்தில் சேர்க்கக் கூடாது . கலந்தாய்வுகளில்  இரகசியம் காப்பதோடு மட்டும் இன்றி அக்கூட்டத்தில் பங்கு பெரும் அதிகாரிகள் தீவிரமாய் கண்காணிக்கப்பட வேண்டும். கவனமின்மை, தூக்கத்தில் உளறுதல், காதல் மயக்கத்தில் வெளிப்படுத்துதல்  போன்றவையே  இரகசியம் வெளிப்பட முக்கியக் காரணமாகும். அதுபோல, மன்னனால் நிந்தனைக்குட்பட்டவர்களாலும் இரகசியம் வெளிவரக் கூடும். எனவே, மன்னன் அப்படிப் பட்ட யாரையும் நிந்தித்தல் கூடாது. அல்லது , அப்படியே நிந்தனை செய்தாலும் அவர்களிடம் கவனமாக இருத்தல் நலம்.  

இதே வழிமுறையில், அரசப்பிரதிநிதிகளின்  மனோபாவம், உணர்ச்சிகள் ஆகியவற்றைக் கண்காணித்தல் மூலம் இரகசியம் வெளிப்படும் அபாயத்தை அறியலாம். இரகசியத்தை வெளிப்படுத்துபவர்களை துண்டம் துண்டமாய் வெட்டி விடுவது நல்லது.

ஆலோசகர்களின் எண்ணிக்கை

ஒரு செயலைப் பற்றிய இரகசியம் வெளிப்பட்டால் அது அரசனுடைய நலனுக்கும் அச்செயலில் ஈடுபடுவோரின் நலனுக்கும் கேடு விளைவிப்பதாகும். ஒவ்வொரு ஆலோசகரும் தனக்கென்று ஓர் ஆலோகரைக் கொண்டிருப்பர். இவ்வாறு, ஒருவர்  பின் ஒருவராய்  அத்தொடர் நீண்டு கொண்டே செல்லும். இரகசியம் அத்தொடரின் ஏதாவதொரு நிலையில் வெளிப்படும். எனவே, அரசன் ஆலோசகர்களின் துணையின்றி தானே நிதானித்துச் செயல் பட காலப்போக்கில்  பழகிக் கொள்ளுதல்  வேண்டும். அரசனின் திட்டம் எவருக்கும்  தெரியக்  கூடாது. அத்திட்டத்தை செயல்படுத்துபவர்கள்  மட்டுமே அது எப்பொழுது தொடங்கி, எப்போது முடிக்கப் பட வேண்டியது என்பதை அறிய வேண்டும்.

முதிர்ந்த அறிவாற்றலுடைய ஆலோசகர்களுடன் அரசன் தனது ஆலோசனையை மேற்  கொள்ளலாம். எவரையும் நிந்திக்காமல் அனைவரது  கருத்துக்கும் செவி சாய்க்க வேண்டும். அறிவுள்ள ஒருவன், குழந்தைகள் கூறும் அறிவுரையில் கூட கவனம் செலுத்துவான். மேலும் ஆலோசகர்களின் கருத்தை அரசன் மறைமுகமாய் தெரிந்து கொள்ள வேண்டும். தனது மனதில் உள்ளது போலவே ஒரு பிரச்சனையைக் கூறி இவ்வாறு நிகழ்ந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் , எவ்வாறு மேற்கொண்டு செயல்படுவீர்கள் என்பது போன்ற கேள்விகளை ஆலோசகர்களிடம் கேட்கலாம். அவர்கள் கூறும் அறிவுரையைப் பின்பற்றலாம். இவ்வாறு இரகசியத்தைச் சிதறடிக்காமல் அறிவுரை பெறலாம். அரசன் தனது ஆலோசனைக்கு மூன்றில் இருந்து  நான்கு பேரை நியமித்துக்  கொள்ளலாம். ஒரேயோர் ஆலோசகராயின் அவரது  செயல் எவ்வித கட்டுப்பாடும் அற்றதாயிருக்கும். இரண்டு ஆலோசகர்களாயின் இருவரும் கூட்டணி சேர்ந்து மன்னனை கவிழ்க்கக் கூடிய வாய்ப்பு அதிகம். நான்கிற்கு மேற்பட்ட ஆலோசகர்கள் எப்போதும் கூடாது. நான்கிற்கு  மேற்பட்டவர்களிடையே இரகசியம் நிலைக்காது. பொதுவாக அரசன்  அறிவுள்ள அறிஞர்கள் , அதிகபட்சம், மூன்று பேரிடம் ஆலோசனையை  கேட்க   வேண்டும். பணியின் தன்மை மற்றும் சூழ்நிலை பொறுத்து  தானாக  முடிவெடுக்க வேண்டும். ஆலோசகர்களின் கருத்துக்களை தனிப்பட்ட முறையிலும் ஒன்று சேர்ந்த நிலையிலும் அறிய வேண்டும். ஒவ்வொருவர் கொண்டிருக்கும் கருத்தின் காரணத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

கலந்தாய்வு செய்வதன் ஐந்து குறிக்கோள்கள்

எந்தவொரு கேள்விக்கும் கலந்தாய்வு செய்வதன் ஐந்து முக்கிய குறிக்கோள்கள் பின்வருமாறு :
(1)  இலட்சியங்கள் வெற்றி அடைய வேண்டும்.
(2)  பணி  செய்து முடிக்கப்பட  வேண்டும் 
(3) மனித மற்றும் பொருள் வளம் கிட்ட வேண்டும்  
(4) ஒன்று அல்லது பலதரப்பட்ட  செயலுக்கான நேரம் மற்றும் இடத்தைத் தீர்மானிப்பதற்கு  
(5) தோல்விகள் ஏற்படுவதை தவிர்த்தல் அல்லது தோல்விக்கு எதிரான செயல்பாடு .                                 
செயல்படுவதற்கான சந்தர்ப்பம்  கிட்டியவுடன்  கலந்தாய்வு தாமதிக்கப்படக் கூடாது. அது போல , செயலும் உடனடியாக வெற்றிகரமாக நடத்தப்பட வேண்டும் . செயலின் விளைவில் எவருக்கும் மோசமான விளைவு ஏற்பட்டு விடக் கூடாது.

அமைச்சர்களின் பங்கு

அமைச்சர்களாய் விளங்கும் ஆலோசகர்கள் , உயர்மட்ட தீர்மானங்களில் பங்கு பெறுவர். ஆலோசகராய் இன்றி அமைச்சராய் மட்டும் விளங்குபவர் உருவாக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு செயல் வடிவம் அளிப்பர். இட்ட பணியைச் செய்யும் திறனைக் கொண்டே ஒவ்வொரு மனிதனையும் மதிப்பிட வேண்டும். மந்திரி சபையின் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளும் திறன் கொண்டவர்களை  ஓர் அரசன் ஆலோசகராயின்றி  மந்திரியாக நியமிக்கலாம். ஒவ்வொருவரின் திறமையையும் அளிக்கப்படும் வேலையின் தன்மையையும் கருத்தில் கொண்டு அரசாங்க வேலைகளை அவர்களிடத்தில் பகிர்ந்து அளிக்கலாம். பொதுவாக, ஒரு அரசன் தனிபட்ட விதத்தில் ஆலோசனையை பெற மூன்று அறிஞர்களை வைத்துக் கொள்ளலாம் என்றும் அதே சமயத்தில் தனது நாட்டு நடப்புகளை விவாதித்து தகுந்த நேரத்தில், தகுந்த ஆலோசனைப் பெற ஒரு அமைச்சர்க் குழுவை நியமித்தல் நன்று என்றும் அர்த்தசாஸ்திரம் கூறுகிறது .

பன்னிரண்டு பேர் கொண்ட அமைச்சர் குழுவை அரசன் நியமிக்க வேண்டுமென்று முனு நீதியைப் பின் பற்றுபவர்களும். பதினாறு பேர் என பிருகஸ்பதியின் மாணவர்களும், இருபது பேர் என உஷானரின் சீடர்களும் கூறுகின்றனர்.இந்த  எண்ணிக்கை  தேவைக்கு ஏற்றவாறு அமையலாம். இந்திரனின் சபையில் ஆயிரம் மந்திரிகள் அடங்கிய குழு அவனது கண்களைப் போல செயல்பட்டனர். எனவே தான், அவன் இரு கண்களைப் பெற்று இருந்த போதும் ஆயிரங் கண்ணுடையான் என்று அழைக்கப்பட்டதாய்  குறிப்பிடுகிறார் கௌடில்யர். அமைச்சர்கள் எப்போதும் மன்னனைப் பற்றியும் எதிரிகளைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் இதுவரையில் செய்யப்படாத பணிகளைச் செய்தும், நடைபெற்றுக் கொண்டு இருக்கும் பணியைத் தொடர்ந்தும் முடிக்கப்பட்ட பணிகளில் முன்னேற்றம் செய்தும் தமது திறனை நிலை நாட்டலாம். அரசன் தனக்கருகாமையில்  உள்ள அமைச்சர்களின் பணிகளைத் தானே கண்காணிக்கலாம். தொலைவிலுள்ளவர்களுடன் ரகசிய  கடிதம் மூலமும்  தொடர்பு கொள்ளலாம். ஆபத்துக் காலங்களில் இரு பிருவுகளையும் அழைத்து ( அமைச்சர்கள், ஆலோசகர்கள்) அறிவுரை கேட்கலாம். அவற்றில் பெரும்பான்மை பெற்ற அல்லது பணியை வெற்றிகரமாய் முடிக்கச் செய்யும் அறிவுரையைப் பின்பற்றலாம்.

அரசன் ஆலோசகர்களை நியமிக்கும் முன் அவர்களை விசாரணை  செய்யும் விதம்

அரசன் தான் அமைச்சராய் நியமிக்கவிருக்கும் ஒருவரின் அனைத்து குணங்களையும் தீர விசாரித்தல் அவசியம். அவற்றுள் முக்கியமாய் அவனது நாட்டுரிமை, குடும்பச் சூழல், ஒழுக்கத்தின் பால் அவனுக்குள்ள பற்று போன்றவற்றை அவனை நன்கறிந்தவர்களிடம்  கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். பல்வேறு துறைகளிலும்  அவன் பெற்று இருக்கும் அறிவை அத்துறையில் தேர்ந்தவர்கள் மூலம் சோதிக்கலாம். அவனது கடந்த கால செயல்பாடுகள் மூலம் அறிவுத்திறன் , விடாமுயற்சி , சாமர்த்தியம் போன்றவற்றையும் தனிப்பட்ட நேர்காணல் மூலம் பேச்சுத் திறன் , தைரியம், சாதுரியம் போன்றவற்றையும் மதிப்பிடலாம். பிறரைக்  கையாளும் முறையில் இருந்து அம்மனிதனின் ஆற்றல், சகிப்புத்தன்மை, குழப்பங்களை எதிர்கொள்ளும் திறன், ஒற்றுமை போன்ற பண்புகளை உணரலாம். அவனது உயிர்த் தோழர்கள் மூலம் அவனுடைய வலிமை, ஆரோக்கியம், நடத்தை ஆகியவை வெளிப்படும். அவனைத் தனிப்பட்ட முறையில் கண்காணித்து மனதுக்கினிய தன்மை, மனிதர்கள் பால் அவனுக்கிருக்கும்  அன்பு போன்றவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.

அமைச்சர்களின் நேர்மையைச் சோதிப்பதன் அவசியம்

அரசன் தனது ஆலோசகர்கள் மற்றும் புரோகிதர்களுடன் கலந்தாய்வு செய்து அமைச்சரை நியமித்த பின் பல இரகசிய தேர்வுகளின் மூலம் அவரது நேர்மையைச் சோதிக்கலாம். ( சரியான ஆட்களின் மூலம் நீதி, பொருள், காமம் மற்றும் பயம் அடிப்படையிலான நான்கு சோதனைகளைச் செய்யலாம். இச்சோதனைகள் ஒருவரை மத ரீதியான ஆசைக்கோ, பொருளாசைக்கோ தூண்டும் அல்லது காம இச்சையிலோ  பயத்திலோ தவறு செய்யத் தூண்டுமாறு அமைக்கப்பட்டு உள்ளன. ஆனாலும், களங்கமில்லா மனதில் நஞ்சை விதைத்தலின் அபாயத்தை கௌடில்யர் எச்சரிக்கிறார்.)

அமைச்சர்களுக்கு அவரவர் நேர்மைக்குத்   தகுந்த வேலைகளை அளிக்கலாம். உதாரணமாய் நீதியின் சோதனையில் வெற்றி பெற்ற ஒருவர் சட்டம் - ஒழுங்கு அமைச்சராக நியமிக்கப் படலாம். பொருளின்  மீது பற்றற்றவர் என்று நிரூபிக்கப்பட்ட ஒருவரை அரசின் கருவூலத்துக்குப் பொறுப்பாகவும், காம இச்சையற்றவரை கேளிக்கை நிகழ்ச்சிகளின்  இயக்குநராகவும் , அச்சமற்றவரை அரசனின் மெய்க்காவலனாகவும் நியமிக்கலாம். அனைத்து சோதனைகளிலும் வெற்றி கண்டவருக்கு ஆலோசகர் பதவி அளிக்கலாம். அனைத்திலும் தோல்வி அடைந்தவர்களை சுரங்கம் , காடுகள், தொழிற்ச்சாலைகள் போன்ற இடங்களிலும் நடைபெறும் கடினமான வேலைகளுக்கு அனுப்பலாம். 

எனினும், இம்முறைகள் முழுமையாய் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்கிறார் கௌடில்யர். அரசன் தானாகவோ அல்லது அரசியின்  மூலமோ அமைச்சரின் நேர்மையை அறிய முயலுதல் கூடாது. தெளிவான கள்ளமற்ற மனதைக் களங்கப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் நீருடன் விஷம் கலத்தலுக்கு ஒப்பாகும். அவ்விதம் களங்கப்பட்ட மனதைத் தெளிய வைத்தல் கடினம். எனவே, அரசன் தனது அமைச்சரின் நேர்மையை இரகசிய உளவாளிகள் மூலம் சோதிக்கலாம். அரசன் தனது உயரதிகாரிகளின் நேர்மையைப் பரிசோதித்த பிறகு தனது இரகசியப் பணிகளைத் தொடங்க வேண்டும்.

ஒரு அமைச்சருக்கு இருக்க வேண்டிய பண்புகள்

நன்னடத்தை அற்ற ஓர் அரசனிடத்தில் ஒருபோதும் பணி மேற்கொள்ளுதல்  கூடாது. அத்தகைய அரசன் அவ்வளவு ஆற்றல் மிக்கவனாயிருப்பினும் அவனது ஆட்சி முறை அல்லது தீயவர்களுடனான தொடர்பின் காரணமாய் ஆட்சியில் இருந்து கீழிறக்கப்படுவான் .          
                   
நல்ல அரசனுடன் இணைந்த பின் அமைச்சர் ஒருவர் அரசனோடு அரசியல் குறித்து விவாதிக்கலாம். அவன் அரசியலைப்  பற்றி மாற்றுக்  கருத்தைக் கொண்டிராத நிலையிலேயே அமைச்சரின் பதவிக்குப்  பாதுகாப்பு எனலாம். அரசன் தன்னிடம் கருத்து கேட்கும்போது , அமைச்சர் விவரமாய் , நீதி நெறிகளுக்குட்பட்ட கொள்கைகளுடனும் மற்றவர்களைப் பற்றிய பயமில்லாமலும் தெளிவுபடுத்த வேண்டும்.  அரசன் எவரேனும் ஒருவரை நியமனம் செய்ய நினைத்தால் நீதி மற்றும் பொருளாதாரத்தைப் பிரித்தறியும் திறன் கொண்ட ஒருவரையே நியமிக்க வேண்டும் என்று ஆலோசகர் கூற வேண்டும். அரசனும் அதை ஏற்று நியமனத்துக்குட்பட்டவர்களிடம் அவரால் தனக்கு தீங்கு நேராத படி , இரகசியங்களை வெளிப்படுத்தக் கூடாதென்றும், தன்னோடு தொடர்புடயவர்களுக்குத் தீங்கு நேரக் கூடாது என்றும் முறைப்படி  வாக்குறுதிகள் வாங்கிக் கொள்ள வேண்டும். 
      
ஒரு அமைச்சர், ( அல்லது அரசனால் நியமிக்கப்பட்ட மிக முக்கிய அதிகாரி அல்லது ஆலோசகர் )  நியமனத்துக்குப்  பின்னர் எவ்வாறு நடந்து கொள்ளுதல் வேண்டும் என்று கௌடில்யர் சில அறிவுரைகளை வழங்குகிறார். அவைகள் பின்வருமாறு :

1.நியமிக்கப்பட்ட ஆலோசகர் அல்லது அதிகாரி மன்னனுக்கு ஆதரவாகவே இருத்தல் வேண்டும்.
2.மற்ற ஆலோசகர்களுக்கு எதிராய் தந்திரமாய் செயல் படக் கூடாது.
3.கவனமாய் சிந்திக்காமல் , உண்மையற்ற, நாகரிகமற்ற, தன் அறிவுக்கெட்டாத வார்த்தைகளை ஒருபோதும் கூறுதல் கூடாது. 
4.சிரிப்பதற்கான முகாந்தரமற்ற நிலையில் உரக்கச் சிரித்தல் கூடாது. காரணம் இருப்பினும்  உரத்தலின்றி மெதுவாய் சிரித்தல் கூடாது. 
5.உமிழ்தல் போன்ற நாகரிகமற்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். 
6.மற்ற ஆலோசகர்களுடன் இரகசியம் பேசுதலோ, பொதுக்கூட்டங்களில்  சண்டை இடுதலோ  கூடாது. 
7.இரத்தினங்கள் அல்லது சலுகைகளை வெளிப்படையாய் கேட்கக்கூடாது.
8.முகத்தைச் சுழித்தல், உதட்டைக் கடித்தல், கண் சிமிட்டுதல் போன்ற பார்க்கச் சகிக்காத சைகைகளில் ஈடுபடக் கூடாது. 
9.மற்றவர்கள் பேசும் போது குறுக்கிடுதல் கூடாது. 
10.வலிமையானவரிடத்தில் விரோதம் கொள்ளுதல் கூடாது. 
11.பெண்கள், அண்டை நாட்டு அரசின் தூதுவர்கள் , பகைவர்களின் ஆதரவாளர்கள், பதவி  நீக்கம்  செய்யப்பட்ட அதிகாரிகள், தீயவர்கள் போன்றவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளுதல் கூடாது.
12.தீய விஷயங்களில் இருந்து மன்னனைத் திருப்புவதோடு தானும் மற்றவர்களுக்கு எதிராய் தீய வார்த்தைகளின் உபயோகத்தைத் தவிர்க்கலாம்.
13.பிறர் தன்னைப் பற்றிக் கூறும் தீய வார்த்தைகளைப் பொறுத்துக் கொண்டு தாய் மண்ணைப் (நிலம்) போன்று பொறுமையைக் கடைபிடிக்கலாம்.  

ஒரு ஆலோசகர் மன்னனுக்கு   அறிவுரை கூறும் விதம்

நீதி மற்றும் பொருளாதார விவகாரங்களில் மன்னனுக்கு அறிவுரை வழங்கலாம். விஷயம் மன்னனுக்காகப் பேசப்படுவதெனில் காலதாமதமின்றிப் பேசலாம். தனக்காகக் கூறப்படுவதாயின் அவனது நண்பர்களுடன் சேர்ந்திருக்கும் நேரத்திலும்,  பிறருக்காகப் பேசப்படுவதெனில் நேரம் மற்றும் இடத்தைத் தேர்ந்தெடுத்தும் பேசலாம். அதிகாரி - தன்னிடம் கேட்கப்படும்  பொழுது  மன்னனுக்கு நன்மை விளைவிக்கும் , மனதிற்கு இனியவற்றைக் கூறலாம். மன்னனுக்கு    மட்டும் பிடித்ததாயிருப்பினும் தீயனவற்றைக் கூறுதல் கூடாது. சில கசப்பான விஷயங்களை தனிமையில் மன்னன் கேட்கபதற்குத் தயாராயிருக்கும் நிலையில் கூற வேண்டும். மன்னனிடம் வரவேற்புக்குத்  தகாத வார்த்தைகளையோ, அவனைத் தூண்டக்கூடிய வார்த்தைகளையோ கூறுதல் கூடாது. சில நேரத்தில் அமைதியாய் இருந்து விடுவதே சிறப்பு . சில சமயம் அரசன் விரும்பாத விஷயங்களைக்  கூறுவதால் அரசனின் அன்புக்குரியவர்கள் வெளியேறும் படி ஆகலாம். அவனது வெறுப்பிற்கு ஆளானவர்களின்  மனநிலைக்கு ஏற்றவாறு பேசி அவனது அன்பைப் பெறலாம்.

மன்னனிடன் பணியாற்றும்  ஆலோசகருக்கு சாணக்கிய  நீதி தரும்  அறிவுரைகள்

அரசனிடம் பணியாற்றுவது தீயின் நடுவே வாழ்வதற்கு ஒப்பாகும். தீ சுட்டால் உடலின்  ஒரு பகுதி அல்லது உடல் முழுவதும் வெந்து போகும் . அதே போன்று அரசன் செல்வத்தை வாரிக் கொடுப்பான் அல்லது குடும்பத்தோடு கொன்று விடுவான். ஓர் அறிவுள்ள மனிதன் தன்னையும் தன்னோடு தொடர் புடையவர்களையும் காத்துக்  கொள்வான்.  அரசனின் பணியாளர் ஒரு குறிப்பிட்ட பணியில் ஈடுபட்டு இருக்கும் பொழுது அனைத்துச் செலவுகளும்  போக  மொத்த  வருவாய் பற்றிய தகவலை அரசனுக்கு அளிப்பார். செய்யப்பட வேண்டிய ஒரு வேலை கிராமத்திற்கு உகந்ததா? அல்லது நகரத்திற்கா? உடனடியாய் செய்யப்பட வேண்டியதா? தள்ளிப்போடத்தக்கதா? வெளிப்படையாய் செய்யக்கூடியதா ? இரகசியமானதா? போன்ற விவரங்களை அரசுக்கு அளிப்பார். அவர் அரசனின் தீய நடவடிக்கைகளான வேட்டையாடுதல், சூதாட்டம், மது அல்லது மாதுக்கு அடிமையாதல் போன்றவற்றைக் கண்காணித்துக் கொண்டேயிருப்பார். பொய்யான புகழ்ச்சியால் அரசனை அத்தீயச் செயல்களில் இருந்து விடுவிக்க முயர்ச்சிப்பார். அவர் அரசனை சதியாலோசனை மற்றும் எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து காப்பார்.    

ஒரு நல்ல ஆலோசகர், அல்லது அரசனின் வழிகாட்டியாய் இருப்பவர் ( அமைச்சர்  அல்லது முக்கிய அதிகாரி) மன்னனின் சைகைகளைப் பற்றி நன்கு அறிந்து வைத்து இருப்பார். மன்னனின் முக பாவங்களைக் கூட மிக எச்சரிக்கையோடு கவனிப்பார். முடிவெடுக்கும் நிலையில் உள்ள ஒரு மனிதனின் மனதை அவனது விருப்பு, வெறுப்பு, மகிழ்ச்சி, துன்பம், துணிவு, பயம் போன்றவற்றில் இருந்து புத்தி கூர்மையுள்ள மற்றொருவரால் அறிந்து கொள்ள முடியும்.இதற்கு  உதாரணமாக சொல்ல வேண்டும் எனில்,  அரசன் தன் அவையில் உள்ள ஒருவரிடம் திருப்த்தியான போக்கைக் கடைப்பிடிப்பானெனில் தன்னுடைய செயல்களில்  அதை அவன்  வெளிப்படுத்திவிடுவான் . அப்பணியாளரைக் கண்டதும் மகிழ்தல், அவருடைய வாழ்த்துக்குப் பதில் அனுப்புதல், அவருக்குத் தனி இருக்கை அளித்தல், அவரைத் தனிமையில் சந்தித்தல், சந்தேகம் எழக்கூடிய  நேரங்களிலும் அவரைச் சந்தேகிக்காமை, அவருடன் பேசுவதால் மகிழ்ச்சி அடைதல், யாரும் நினைவு படுத்தாமலே அப்பணியாளர் தொடர்பான பணிகளில் ஈடுபடுதல், அவர் கூறும் நியாயமானவற்றைப்  பொறுத்துக் கொள்ளுதல், புன்னகையுடன் கட்டளை ஈடுதல், அவரை அன்புடன் தொடுதல், அவர் இல்லாத சந்தர்ப்பங்களில் அவரைப் பாராட்டுதல், அவரோடு உணவு அருந்துதல், அவருடன் உல்லாச யாத்திரை செல்லுதல், இரகசியங்களை அவரிடம் கூறுதல், அவரைப் பின்பற்றுபவர்களுக்கு மரியாதை செய்தல், அவரது  தேவைகளை  அவர் கேட்காமலேயே பார்த்துப் பார்த்து பூர்த்தி செய்து கொடுத்தல், அவருக்கு ஏற்படும் தீங்கினைத் தடுத்து ஆபத்துக் காலத்தில் அவருக்கு உதவி புரிதல் போன்றவை.  

அரசன் தன் அவையில் உள்ள ஒருவரிடம் தான் அதிருப்தி கொண்டு இருப்பதைக் கீழ்க்கண்ட செயல்களில் வெளிப்படுத்துவான். அக்குறிப்பிட்ட நபரைக் காணும் பொழுது கோபம் கொள்ளுதல், அவரைத் தவிர்த்தல். அவருடன் பேசும் பொழுது அந்த அரசனுடைய முக பாவங்கள் கூட மாறுபடும். கண், புருவம், உதடு இவற்றின் மூலம் வெறுப்பு வெளிப்படும்.  அவரைத் தவிர்க்கும் விதமாய் வேறு ஒருவருடன் பேசுதல் அல்லது அவ்விடத்தை விட்டு வெளியேறுதல், அவருடைய குலம், அறிவு அல்லது பதவிக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு மற்றவர்களைத் தூண்டுதல், அவருடைய செயல்களில் குறை காணுதல், அவருடைய எதிரிகளைப் புகழ்தல், அவர் செய்த நன்மைகளைக் கருதாது தீங்கினைப் பற்றி மட்டுமே பேசுதல், அவர் பேசும் பொழுது வேறொன்றில் கவனத்தைத் திருப்புதல் இவை குறிப்பிடத்தக்கவை. எனவே, இதனைக் கொண்டு ஒரு அமைச்சர் (அல்லது மந்திரி அல்லது அதிகாரி ) அரசனின் ஒவ்வொரு அணுவையும் கவனித்து அறிந்து கொள்ளுதல் வேண்டும். அதற்கு ஏற்றவாறு அவர் அரசனுக்கு உத்தமமான வழியைக் காட்ட வேண்டும் , என்கிறார் கௌடில்யர்