எங்கள் தாய்

எங்கள் தாய்

bookmark

(காவடிச் சிந்தில் 'ஆறுமுக வடிவேலவனே' என்ற மெட்டு)

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
   சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
   இயல்பின ளாம் எங்கள் தாய்.    1

யாரும் வகுத்தற் கரிய பிராயத்த
   ளாயினு மேயங்கள் தாய் - இந்தப்
பாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப்
   பயின்றிடு வாள்எங்கள் தாய்.    2

முப்பதுகோடி முகமுடை யாள்உயிர்
   மொய்ம்புற வொன்றுடையாள் - இவள்
செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்
   சிந்தனை ஒன்றுடையாள்.    3

நாவினில் வேத முடையவள் கையில்
   நலந்திகழ் வாளுடை யாள் - தனை
மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை
   வீட்டிடு தோளுடையாள்.    4

அறுபது கோடி தடக்கைக ளாலும்
   அறங்கள் நடத்துவள் தாய் - தனைச்
செறுவது நாடி வருபவ ரைத்துகள்
   செய்து கிடத்துவள் தாய்.    5

பூமி யினும்பொறை மிக்குடை யாள்பெறும்
   புண்ணிய நெஞ்சினள் தாய் - எனில்
தோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுந்
   துர்க்கை யனையவள் தாய்.    6

கற்றைச் சடைமதி வைத்த துறவியைக்
   கைதொழு வாள்எங்கள் தாய் - கையில்
ஒற்றைத் திகிரிகொண் டேழுல காளும்
   ஒருவனை யுந்தொழு வாள்.    7

யோகத்தி லேநிக ரற்றவள் உண்மையும்
   ஒன்றென நன்றறி வாள் - உயர்
போகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும்
   பொற்குவை தானுடையாள்.    8

நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
   நயம்புரி வாள்எங்கள் தாய் - அவர்
அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின்
   ஆனந்தக் கூத்தி டுவாள்.    9

வெண்மை வளரிம யாசலன் தந்த
   விறன்மக ளாம்எங்கள் தாய் - அவன்
திண்மை மறையினும் தான்மறை யாள்நித்தஞ்
   சீருறு வாள்எங்கள் தாய்.    10