உலாவியற் படலம் - 1199
தசரதன் வெண்குடை விளங்குதல்
வெண்குடை விளங்கி காட்சி
1199.
வெங் கண் ஆனையினான் தனி வெண்குடை.
திங்கள். தங்கள் குலக்கொடிச் சீதை ஆம்
மங்கை மா மணம் காணிய வந்து. அருள்
பொங்கி ஓங்கித் தழைப்பது போன்றதே.
வெங்கண் ஆனையினான் தனி வெண்குடை -
கொடுங்கண்களையுடைய யானைப்படைக்குரிய தசரத வேந்தனின்
ஒப்பற்ற வெண்கொற்றக்குடை; திங்கள் - சந்திரன் ஆனவன்; தங்கள்
குலக்கொடிச் சீதை ஆம் மங்கை - தம்குலத்தில் உதித்த
மலர்க்கொடியனைய சீதையாகிய மகளின்; மாமணங்காணிய வந்து
அருள் பொங்கி ஓங்கித் தழைப்பது போன்றது - சிறப்புக்குரிய
திருமணத்தைக் கண்டுகளிப்பதற்காக வந்து கருணைமிக்குப் பூரித்து
விளங்குவதைப் போன்றிருந்தது.
தண்மையினாலும் வெண்மையினாலும். வேந்தர்களின்
கொற்றக்குடைகளைத் திங்களோடு உவமிக்கும் மரபு பற்றிக் கூறினும்.
சந்திர குல மங்கை மணம் காணக் குல முதல்வன் வந்தான் எனப்
புதுச்சுவை சேர்ந்திருக்கும் திறம் காண்க. தற்குறிப்பேற்ற அணி. 52
