உலாவியற் படலம் - 1197
தசரதனுக்குச் சாமரை வீசுதல்
மங்கையரின் சாமரை வீச்சும் பல்லாண்டும்
1197.
தீங் கரும்பினும் தித்திக்கும் இன் சொலார்
தாங்கு சாமரை. மாடு தயங்குவ:
ஓங்கி ஓங்கி வளர்ந்து. உயர் கீர்த்தியின்
பூங் கொழுந்து பொலிவன போன்றவே.
தீங்கரும்பினும் தித்திக்கும் இன் சொலார் - இனிய கரும்பினும்
இனிக்கின்ற இன்சொற்களைப்பேசும் மகளிர்; தாங்கு சாமரை மாடு
தயங்குவ - வீசுகின்ற சாமரங்கள் (தசரத வேந்தரின்) பக்கங்களில்
விளங்குபவை; ஓங்கி ஓங்கி வளர்ந்து உயர் கீர்த்தியின்
பூங்கொழுந்து பொலிவன போன்ற.- மிக உயர்ந்து (விண்ணகம்முட்ட)
வளர்ந்து மற்றெல்லோர் புகழினும் உயர்ந்துள்ள (தசரதசக்கரவர்த்தியின்)
மிகு புகழாகிய (பருமரத்தின்) அழகிய இளந்தளிர்கள் மின்னுவதை
ஒத்திருந்தன.
புகழை வெண்ணிறமுடையது என ஓதும் மரபு பற்றி. சாமரங்கள்
தசரதனது புகழின் கொழுந்துகள் போன்றிருந்தன என்று உவமித்தார்.
கொழுந்துகள் பொலிவன என்றதனால். அவற்றையுடைய மரங்கள்
செழித்து வளர்ந்திருப்பது கூறாமலேயே விளங்கும் என்க. 50
