உலாவியற் படலம் - 1192
தசரதனும் வருதல்
தயரதனும் மண்டபத்திற்கு வந்து அமர்தல்
1192.
ஆன மா மணி மண்டபம் அன்னதில்
தானை மன்னன் தமரொடும் சார்ந்தனன் -
மீன் எலாம் தன் பின் வர. வெண்மதி.
வான் நிலா உற வந்தது மானவே.
மீன் எலாம் தன்பின்வர- எல்லா நட்சத்திரங்களும் தனக்குப்
பின்னேவர; வெண்மதி வான்நிலா உற வந்தது மான- வெண்ணிறச்
சந்திரன் வானத்தை ஒளியுறச் செய்து வருவது போல; தானை
மன்னன் - சேனைகளையுடைய தசரத சக்கரவர்த்தி; ஆன மாமணி
மண்டபம் அன்னதில் சார்ந்தனன் - பெருமைக்குரிய மணிகள்
பொருந்திய அந்த மண்டபத்தை அடைந்தான்.
மீனுக்கும் வானுக்கும் திங்களின் வருகை தனிப்பொலி வூட்டுதல்
போல. அம்மண்டபமும் அங்குள்ளோரும் தசரதன் வருகையால்
தனிப்பொலிவெய்தினர் என்க. 45
