உலாவியற் படலம் - 1179

bookmark

ஒருத்தி ‘இராமன் உள்ளன்பு
இலாதவனோ? ‘எனல்

1179.    

‘வேர்த்து. மேனி தளர்ந்து. உயிர் விம்மலோடு.
ஆர்த்தி உற்ற மடந்தையர் ஆரையும்.
தீர்த்தன். இத்தனை. சிந்தையின். செங் கணின்.
பார்த்திலான்; உள் பரிவு இலனோ?’ என்றாள்.
 
மேனி வேர்த்து உயிர் தளர்ந்து-(இராம வேட்கையுற்றாள் ஒருத்தி)
உடல் வியர்த்து  உயிர்நிலை  குலைந்து;  விம்மலோடு  ஆர்த்தியுற்ற
மடந்தையர்  ஆரையும்  - விம்முதலோடு அருந்துயர் உற்ற பெண்டிர்
எவரையும்; தீர்த்தன்    சிந்தையின்     செங்கணின்   இத்தனை
பார்த்திலான் -  தூயோனான  இராமபிரான்.  உள்ளத்தாலும்  சிவந்த
கண்களாலும் சிறிதேனும்  நோக்கினான் அல்லன்;  உன்  பரிவிலனோ
என்றாள் - அப்பெருமான்  உள்ளத்தே  (சிறிதேனும்)  அன்பு என்பதே
இல்லாதவனோ? என்று (துயரோடு) வினாவினாள்.

எத்தனை  மகளிர் மொய்ப்பினும் ஏறெடுத்தும் நோக்காத இராமனின்
இயல்புத்   திறம்  கூறி.  இராமபிரானின்  ஏக  பத்தினி    விரதத்தின்
ஏற்றத்திற்கு   அடித்தளம்   இட்டவாறு.   “இந்த   இப்பிறவிக்கு  இரு
மாதரைச்  சிந்தையாலும்  தொடேன்” (கம்ப. 5378) என்ற  செம்மையன்
இராமன்   ஆதலான்  “தீர்த்தன்  இத்தனை   சிந்தையின். செங்கணின்
பார்த்திலன்”    என்றார்.     ஆகவே.     இத்துணைப்    பெண்கள்
மொய்ப்பதாகக்  கூறுவதெல்லாம்  இராமபிரானின் ஏற்றம்   உயர்த்தவே
என்பதனை உய்த்துணர்க.                                    32