உலாவியற் படலம் - 1178

bookmark

கவிக் கூற்று

1178.    

ஆம்பல் ஒத்த அமுது ஊறு செவ் வாய்ச்சியர்.
தாம் பதைத்து உயிர் உள் தடுமாறுவார்.
தேம்பு சிற்றிடைச் சீதையைப்போல். சிறிது
ஏம்பல் பெற்றிலர்; எங்ஙனம் உய்வரே?
 
ஆம்பல்   ஒத்து அமுது ஊறு செவ்வாய்ச்சியர்- செவ்வாம்பல்
மலரைப்  போன்று.  அமுதம்  போன்ற  இனிமையூறுதற்கு   இடமான
சிவந்த  வாயினையுடைய  மகளிர்  பலரும்; தாம் பதைத்து உள்உயிர்
தடுமாறுவார்  -  (இராம  வேட்கையால்  மனமும் உடம்பும்)  துடித்து.
உடலினுள்   உள்ள  உயிர்  நிலை  கலங்கினர்;  தேம்பு  சிற்றிடைச்
சீதையைப்  போல்  -  வருந்தும்  மெல்லிய இடையுடையாள் ஆகிய
சீதையினைப்   போல;  ஏம்பல்  சிறிது  பெற்றிலர்  - மகிழ்தற்கான
காரணத்தைச்    சிறிதும்   பெறாதவர்களாகிய   இவர்கள்;  எங்ஙனம்
உய்வரே? - எவ்வாறு பிழைப்பார்?  மகிழ்தற்குக்     காரணம் சிறிதே
இருப்பினும்  மகளிர்  பிழைத்துக் கொள்வர்;   இன்றேல்    பிழைத்தல்
இயலாது எனக் கவிஞர் பெண்மையின் மென்மை நினைந்து ஏங்கியவாறு.
அமுது ஊறியும் பயன்   கொள்ளப்படாமல்  உள்ளது என்பார். “அமுது
ஊறு வாய்ச்சியர்” என்றார்.                                   31