உலாவியற் படலம் - 1173
ஒருத்தி இராமன் கண்ணனே எனல்
1173.
வண்ண வாய் ஒரு வாணுதல். ‘மானிடற்கு.
எண்ணுங்கால். இவ் இலக்கணம் எய்திட
ஒண்ணுமோ? இது உணர்த்துகின்றேன். இவன்
கண்ணனே! இது கண்டிரும். பின்’ என்றாள்.
வண்ணவாய் ஒரு வாள் நுதல் - அழகிய வாயையும் ஒளி
பொருந்திய நெற்றியினையும் உடையாள் ஒருத்தி; எண்ணுங்கால்
மானுடற்கு இவ் இலக்கணம் எய்திட ஒண்ணுமோ? - “எண்ணிப்
பார்த்தால் மனிதன் ஒருவனுக்கு இத்தகைய வடிவழகையுடைய
உத்தமலட்சணம் பொருந்த இயலுமா? (இயலாது) (ஆகவே) ; இவன்
கண்ணனே இது உணர்த்துகின்றேன் - (இவன் மானுடன் அல்லன்)
இவன் திருமாலே ஆவான். இதனை. நான் அனுமானத்தால்
உங்கட்கெல்லாம் இப்போது உணர்த்துகின்றேன்; இதுபின் கண்டிரும்
என்றாள் - (நான் சொல்வது உண்மையென்பதனைப் பிரத்தியட்சமாக)
நீங்கள் எல்லோரும் பின்னால் கண்ணால் காணப் போகின்றீர்கள்!’
என்றாள்.
இராமனைக் கண்ணன் என்றுணர்ந்து உணர்த்திய இவள் வாய்
வார்த்தை மற்றைப் பெண்கள் வார்த்தையிலும் அழகியதாய்த்
தோன்றியமையின் அதனை உரைத்த வாயை “வண்ணவாய்” என்று
போற்றி மகிழ்கின்றார். மனித உருவிலே காணப்படாத பேரழகு இவன்
வடிவில் காணப்படுதலின். இவன் கண்ணனாகிய திருமாலே எனும்
முடிவுக்கு வந்தாள். முன்னும் (1068) இராமனைக் கண்ணன் என்றமை
காண்க. 26
