உலாவியற் படலம் - 1172

bookmark

மன்மதனால் இராமனை எழுதலாமோ எனல்

1172.    

பழுது இலா ஒரு பாவை அன்னாள். பதைத்து.
அழுது. வெய்துயிர்த்து. அன்புடைத் தோழியைத்
தொழுது. சோர்ந்து அயர்வாள். ‘இந்தத் தோன்றலை
எழுதலாம்கொல். இம் மன்மதனால்?’ என்றாள்.
 
பழுது     இலா ஒரு பாவை அன்னாள்- (எவ்வுறுப்பிலும்)  ஒரு
குற்றமும்  அற்ற ஓவியப்  பாவையைப் போன்றாள் ஒருத்தி; பதைத்து.
அழுது. வெய்துயிர்த்து - (இராமனையடையும் வேட்கையால்) துடித்துக்
கண்ணீர்   விட்டு  வெப்ப  மூச்சினை  வெளிப்படுத்தி;   அன்புடைத்
தோழியைத் தொழுது சோர்ந்து அயர்வாள்  -  தன்  அன்பு  மிக்க
(உயிர்த்)   தோழியை   நோக்கிக்   கைகூப்பி   வணங்கி.   தளர்ந்து
சோர்வாளாய்;  இந்தத்  தோன்றலை   இம்மன்மதனால்   எழுதல்
ஆம்கொல்?  என்றாள் -  இந்த  இராமபிரானை இந்த மன்மதனைக்
கொண்டு   ஓவியமாய்  எழுதி  வைத்துக்கொள்ள  ஆகுமோ   என்று
கூறுவாள்.

இராமன்     “ஓவியத்து எழுத ஒண்ணா  உருவத்தினையுடையான்”
(கம்ப.  4020)  ஆதலின். “எழுதல் ஆம் கொல்?” என்று  ஐயுற்றவாறு.
காதலர்  உருவை மனக்கிழியில் தீட்டும் கைவல்ல  ஓவியன்  மன்மதன்
ஆதலால்.   “இம்   மன்மதனால்”   என்றாள்.   “மதனற்கும்   எழுத
ஒண்ணாச் சீதை” (கம்ப. 483) என்பார்  முன்னும். “தேவு   தெண்கடல்
அமுது  கொண்டு அநங்கவேள் செய்த ஓவியம்  புகையுண்டது.”  (கம்ப.
5079) என்பதும் காண்க. அழகிய  வடிவங்களை  மன்மதன்  ஓவியமாகத்
தீட்டுவான்  என்பது கவிமரபாதல் காண்க. இவன் கண்  முன்  இல்லாத
போது  பார்த்து  மகிழ ஓர் ஓவியம் தேவை. இவன்  உருவை  நம்மால்
வரைய  இயலாது;  மன்மதனை  வேண்டினாலும்;  அவனாலும்   இவன்
வடிவை எழுதிவிட இயலுமா? என்று தோழியை வருந்தக் கேட்டாள்.  25