உலாவியற் படலம் - 1170

bookmark

ஒருத்தி இராமனைத் தேரிலன்றிக் கண்ணெதிரே காண்டல்

1170.    

மை தவழ்ந்த கருங் கண் ஒர் வாணுதல்.
‘செய் தவன் தனித் தேர்மிசைச் சேறல் விட்டு.
எய்த வந்து எதிர் நின்றமைதான் இது
கைதவம்கொல்? கனவுகொலே?’ என்றாள்.
 
மை தவழ்ந்த கருங்கண் ஒர் வாள் நுதல்- மை தீட்டப்பட்ட கரிய
கண்களையும் ஒளி பொருந்திய நெற்றியையும்; செய் தவன்  தனித்தேர்
மிசைச்  சேறல்விட்டு  - தவமெல்லாம் செய்து முடித்த இந்த இராமன்
தன்  ஒப்பற்ற  தேரின்  மேல் செல்லுதலை விட்டுவிட்டு;  தான் எய்த
வந்து  எதிர்  நின்றமை  தான் இது - என்  கண்  எதிரில்   வந்து
நிற்றலாகிய   இது; கை தவம் கொல்? கனவு கொலோ? என்றாள் -
மாயைதானோ? (அல்லது) கனவுக் காட்சிதானோ என்று வினாவினாள். 

ஆங்குள்ள    அத்தனை பொருள்களும் மறைந்து இராமன் ஒருவன்
மட்டுமே  கண்ணில்  படுவதால்  மந்திரமோ?   கனவோ? என மயங்க
நேர்ந்தது.  பக்தர்  உலகம்  இந்நிலையைத்  ‘தீவிர   பக்தி’  என்னும்.
வாள்நுதல்  - அன் மொழித் தொகை. “உருவின்  மிக்கதோர் உடம்பது
பெறுவது  அரிது” (சீவக. சிந். 154) ஆகலான்.  இத்தகைய  பேரழகைப்
பெற்றிட  இராமன்  பெருந்தவம்   புரிந்திருக்க   வேண்டும்  என்பாள்
“செய்தவன்”  என்றாள்.  இராமன். உருவம்  உருவெளித்  தோற்றமாய்.
இவள்  கண்முன் நின்றான் ஆதலின் இவ்வாறு   உரைத்தாள். கைதவம்
-  இழிந்த  தவம்;  வஞ்சனை; மாயை. என்னை  இத்தகைய  வேட்கை
கொளச் செய்தவன் என்றும் பொருள் கொளலாம்.                23