உலாவியற் படலம் - 1165

bookmark

வீதிகளின் தன்மை

இராமன் உலா வந்த வீதிகளின் நிலை
 
1165.    

வரிந்த வில் அனங்கன் வாளி
   மனங்களில் தைப்ப மாதர்
எரிந்த பூண் இனமும். கொங்கை
   வெயர்த்தபோது இழிந்த சாந்தும்.
சரிந்த மேகலையும். முத்தும்.
   சங்கமும் தாழ்ந்த கூந்தல்
வரிந்த பூந்தொடையும். அன்றி
   வெள்ளிடை அரிது - அவ் வீதி.
 
வரிந்த   வில் அனங்கன் வாளி மனங்களில் தைப்ப- வரிந்து
கட்டிய மன்மதனது அம்புகள் (அங்குள்ள மாதர்)  மனங்களில்  (வந்து)
பாய்கையில்;  மாதர் எரிந்த  பூண்  இனமும் - அம்மகளிரின் (விரக
தாபம்  மிக்க  உடம்பிலே  படுதலால்)  தீய்ந்து விழுகின்ற அணிகளின்
தொகுதியும்;  கொங்கை  வெயர்த்த  போது  இழிந்த சாந்தும்  -
(வெப்பத்தால்)      தனங்கள்      வெயர்த்தபோது      அங்கிருந்து
கரைந்தொழுகிய சந்தனமும்; சரிந்த மேகலையும் முத்தும்  சங்கமும்-
விரகத்தால்  உடல்  இளைத்தமையால்  கழன்று   சரிந்த   மேகலையும்
முத்து  மாலைகளும்  சங்கு வளையல்களும்; தாழ்ந்த கூந்தல் விரிந்த
பூந்  தொடையும்  அன்றி  -  நீண்ட  கூந்தல் அவிழ்ந்து விரிவதால்
வீழ்ந்த  மலர்மாலை அல்லாமல்;  அவ்வீதி  வெள்ளிடை  அரிது -
வெற்றிடமாக ஓரிடமும் அவ்வீதியில் இல்லை.

மகளிர்    நெருக்கத்தை மேலிட்டுக் கொண்டு. ஆங்குள்ள வளத்தின்
பெருக்கமும்  மாதர்  பெருக்கமும் உரைத்தவாறு  தெருக்களில்  மகளிர்
கவனியாது  கழலவிட்ட  அணிகலக்  குவியல்களும்.  சந்தனச்   சேறும்.
சரிந்த மாலைகளும் குப்பையாகக் கிடந்தன என்றவாறு.             18