உலாவியற் படலம் - 1158

bookmark

ஒருத்தி மன்மதனை நொந்து கூறல்

1158.    

மாந் தளிர் மேனியாள் ஓர்
   வாணுதல். மதனன். எங்கும்
பூந் துணர் வாளி மாரி
   பொழிகின்ற பூசல் நோக்கி.
‘வேந்தர் கோன் ஆணை நோக்கான்;
   வீரன் வில் ஆண்மை பாரான்;
ஏந்து இழையாரை எய்வான் யாவனோ
   ஒருவன்?’ என்றாள்.
 
மாந்தளிர்  மேனியாள் ஓர் வாள் நுதல்- மாவின் தளிர்போன்ற
(மென்மையான)   மேனியுடைய    ஒளிபொருந்திய நெற்றியையுடையாள்
ஒருத்தி; மதனன் எங்கும்  பூந்துணர் வாளி மாரி பொழிகின்ற பூசல்
நோக்கி    -    மன்மதன்.   (பெண்களின்   மேல்)    எவ்விடத்தும்
பூங்கொத்துக்கள் ஆகிய அம்புமழையைப்பெய்கின்ற   போர்த்திறத்தைப்
பார்த்து;    வேந்தர்கோன்     ஆணைநோக்கான்     வீரன்வில்
ஆண்மைபாரான்   -  தசரதச்  சக்கரவர்த்தியின்   ஆணைச்சிறப்பை
மதியாது   (வீரருட்சிறந்த)   வீரனாகிய   இராமபிரானுடைய  வில்லின்
ஆற்றலையும்  உணராது;  ஏந்திழையாரை  எய்வான்  - (ஆயுதங்கள்
அணியாது)   அணிகளை   யணிகிற  பெண்டிரின்  மீது  அம்பெய்து
வருத்துகிறவன்;  யாவனோ  ஒருவன்  என்றான்  -  (ஆகிய)  அந்த
ஒப்பற்ற வீரன் யாரோ? என்று வினவினாள்.

மன்மதன்  கை ஓங்கியுள்ளதாகச்சுட்டி. இராமனது அழகின் சிறப்பை
உயர்த்தியவாறு.  வேந்தருள்  மிக்கானும். வீரருள் மிக்கானும்   ஒருங்கு
இருக்கும்  போது.  மகளிரைத்  துன்புறுத்தும்    துணிவுமிக்க  வீரனும்
உளனோ?   அவன்   பேர்தான்   யாதோ?    என   வினவுகின்றாள்.
பெண்கள்மேல்  அம்பெய்யும்  வீரனும்  யாரோ?  அவனும்  வீரனோ?
என்ற இகழ்ச்சியும் அடங்க “யாவனோ ஒருவன்?” என்றாள்.         11