உலாவியற் படலம் - 1154
இராமனைக் கண் கடவாது காத்த காரிகை
1154.
‘எண் கடந்து. அலகு இலாது. இன்று.
ஏகுறும் இவன் தேர்’ என்று
பெண்கள் தம்தம்மின் நொந்து
பேதுறுகின்ற காலை.
‘மண் கடந்து. அமரர் வைகும்
வான் கடந்தானை. தான் தன்
கண் கடவாது காத்த
காரிகை பெரியளே காண்!’
இவன் தேர்- இந்த இராமபிரானது தேர்; எண்கடந்து அலகு
இலாது. இன்று ஏகுறும்’ என்று - மன வேகத்திலும் மிகுந்து.
(விரையும் வேகத்திற்கு) அளவே இல்லாமல். இப்பொழுது கண் கடந்து
செல்கின்றது’ என்று கூறி; பெண்கள் தாம் தம்மின் நொந்து
பேதுறுங்காலை - (அந்நகரத்துப்) பெண்டிர் (கண்ணிலிருந்து
இராமன் மறைவதற்கு) தங்களுக்குள் வருந்தி. மதிமயங்கும்போது;
மண்கடந்து அமரர் வைகும் வான் ` கடந்தானை - (முன்பு
திருவித்கிரம அவதாரத்தில்) மண்ணை ஓரடியால் அளந்துவிட்டு.
வானையும் ஓரடியால் அளந்து மூன்றாம் அடிக்கு இடம்கேட்டவனான
அந்த இராமனை; தன்தன் கண் கடவாது காத்த காரிகை -
தான். தனது கண்களை விட்டு நீங்கவிடாமல் பாதுகாத்துக்கொள்ள
இருக்கிற சீதை; பெரியளே காண் - எல்லாரினும் பெரியவளே ஆவாள்!
(என்றனர்).
ஓங்கி உலகளந்த பெரியரிற் பெரியனானவனை. தன் கண்களில்
அடக்கிக் காப்பவளாகிய சானகி. அவனிலும் பெரியவளே என்று
கவிஞர்பிரான். சமற்காரம் தோன்ற வியந்தவாறு. காண் - அசை.
உலகளந்த. தன் காதற் கொழுநனைத் தன் கண்வட்டத்தில் வைத்துக்
காக்கும் வாய்ப்பினைப் பெற்றுவிட்ட சீதையின் பெரும்பேற்றினை
எண்ணிப் பெண்மைக்குரிய வியப்புணர்வோடு பெருமூச்செறிந்தவாறு. 7
