உலாவியற் படலம் - 1149
1149.
விரிந்து வீழ் கூந்தல் பாரார்;
மேகலை அற்ற நோக்கார்;
சரிந்த பூந் துகில்கள் தாங்கார்;
இடை தடுமாறத் தாழார்;
நெருங்கினர்; நெருங்கிப் புக்கு.
‘நீங்குமின். நீங்குமின்’ என்று. -
அருங் கலம் அனைய மாதர் -
தேன் நுகர் அளியின் மொய்த்தார்.
அருங்கலம் அனைய மாதர்- (அந்த மிதிலை நகருக்கு) அரிய
அணிகலம் போன்று அழகு ஊட்டும் மகளிர்; விரிந்து வீழ் கூந்தல்
பாரார் - (கூட்டத்தால் நெருக்குண்டு) விரிந்து வீழ்கின்ற தம்
கூந்தலைப் பொருட்படுத்தார்; மேகலை அற்ற நோக்கார் - (இடையில்
அணிந்துள்ள) மேகலைகள் அற்று வீழ்ந்தனவற்றைப்
பொருட்படுத்தார்; சரிந்த பூந்துகில்கள் தாங்கார் - பூப்போன்ற
மெல்லிய ஆடைகளின் இடையிலிருந்து சரிவதைப்பிடித்து ஏந்தவும்
கருதார்; இடை தடுமாறத் தாழார் நெருங்கினர்- தங்கள் நுண்ணிய
இடைகள் (ஆற்றாது) நிலைதளர்வது கண்டு சிறிதும் தாழாமல்.
(இராமபிரானை) நெருங்கினார் ஆகிய மகளிர்; நெருங்கிப்புக்கு
நீங்குமின் நீங்குமின் என்று- நெருங்கிய வாறே நுழைந்து
வழிவிடுங்கள். வழிவிடுங்கள் என்று கூறிய வண்ணமே; தேன்நுகர்
அளியின் மொய்த்தார் - தேன்பருகத் துடிக்கும் வண்டுகளைப்போல.
(இராமபி ரானை) மொய்த்தனர்.
“செவிக்குத்தேனா”கிய (கம்ப. 4966) இராமபிரான் கண்ணுக்கும்
தேனானான்;காணவந்த மகளிர் உண்ண வந்த வண்டானார் என்க.
இராமன் அழகெனும் தேனைப்பருக வந்த மகளிர். ஒருவர்க்கு
ஒருவர் இடித்துக்கொண்டு நெருக்கியவாறு முந்துதலால். கூந்தல்கள்
சரிந்தன; மேகலைகள் அற்றன; மெல்லிடைகள் நெளிந்தன என்றார்.
உள்ளம் ஒன்றில் தோய்ந்து விட்டால். உடலும் உடல் சார்ந்த
பொருள்களும் ஒரு பொருட்டாகக் கவனம் பெறுவதில்லை என்னும்
உளவியல் தத்துவத்தை. இராமன்கோலம் காண வந்த மகளிரின்
அலங்கோலம் கொண்டு விளக்கியுள்ள திறம் காண்க. 2
