உண்டாட்டுப் படலம் - 1111
காதலர் புல்லிக் கிடந்தமை
1111.
வட்ட வாள் முகத்து ஒரு மயிலும். மன்னனும்.
கிட்டிய போது. உடல் கிடைக்கப் புல்லினார்;-
விட்டிலர்; கங்குலின் விடிவு கண்டிலர்;-
ஒட்டிய உடல் பிரிப்பு உணர்கிலாமையால்-
வட்டவாள் முகத்து ஒருமயிலும் மன்னனும் - வட்டமாகிய
ஒளிமுகமுடைய ஒரு மயில் போன்றாளும் (அவள்) கணவனும்;
கிட்டிய போது உடல் கிடைக்கப் புல்லினார் - (ஒருவர்க்கொருவர்)
நெருங்கியபோது. கிடைக்க (இறுகத் தழுவ ஏற்ற வாய்ப்பொன்று)
கிட்டியதனால் தம் உடல் இறுகத் தழுவினர்; ஒட்டிய உடல் பிரிப்பு
உணர்கிலாமையால் - (ஒன்றாக) ஒட்டிக் கொண்ட உடல்களை.
(இரண்டாகப்) பிரிக்க அறிய மாட்டாமையால்; விட்டிலர்; கங்குலின்
விடிவு கண்டிலர் - தழுவிய கரங்களை விடாதவர் ஆயினர்; இரவு
விடிந்து போனதையும் அறியாதவர் ஆயினர்.
ஒன்று தெரிந்து ஒன்று தெரியாமையால் உற்ற இடர் உரைத்தவாறு.
தழுவத்தெரிந்தது; விடத் தெரியவில்லை. இரவு விட்டதும் தெரியாது.
தழுவல் விடாமற் கிடந்தனர் என்பார். “விட்டிலர் கங்குலின் விடிவு
கண்டிலர்” என்றார். “குக்கூ என்றது கோழி; அதன் எதிர் துட்கென்
றன்றென் தூய நெஞ்சம்” (குறுந். 157) எனக் காதலர் விடியலை
விரும்பாமை கூறப்படும். “காதலற் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல்”
(சிலம்பு. 1: 61-62) வாழும் வகை இது. வீழும்
இருவர்க்கு வழியிடைப் போழப் படா முயக்கு இனிது (திருக்) என்பார்
வள்ளுவனாரும். 65
