உண்டாட்டுப் படலம் - 1109

bookmark

கலவியின் விளைவு

1109.

குங்குமம் உதிர்ந்தன; கோதை சோர்ந்தன;
சங்கு இனம் முரன்ற; கலையும் சாறின;
பொங்கின சிலம்புகள் பூசலிட்டன;-
மங்கையர் இள நலம் மைந்தர் உண்ணவே.
 
மங்கையர்  இளநலம்  மைந்தர் உண்ண - மாதர்களுடைய புதிய
இன்பத்தை ஆடவர் நுகர்கையில்;  குங்குமம் உதிர்ந்தன - (மங்கையர்
மார்புக்)  குங்குமக்  கோலங்கள்  உதிர்ந்தன;  கோதை  சோர்ந்தன -
கூந்தல்கள்   அவிழ்ந்தன;   சங்கு   இனம்  முரன்றன  -  (கையில்
அணிந்திருந்த) சங்கு வளையல்கள்  ஆரவாரித்தன; கலையும் சாறின -
ஆடைகளும் நழுவின; சிலம்புகள் பொங்கின பூசல் இட்டன - காலில்
உள்ள சிலம்புகள் மிகுந்து ஒலி செய்தன.

ஒரு     செயலுக்காக    இத்தனை   செயல்கள்   நிகழ்ந்தன  என
வியந்தவாறு.  மங்கையர்  இளநலம்  மைந்தர்   உண்ண   - குங்குமம்
உதிர்ந்தன;  கோதைகள் சோர்ந்தன; சங்கு இனம்  முரன்றன;  கலைகள்
நழுவின;   சிலம்புகள்  பொங்கின;  பூசல்   இட்டன   எனக்  கூட்டுக.
மைந்தர்கள்  உண்பதற்காக மங்கையரிடத்தே  இளமையும்  நலமுமாகிய
பெருவிருந்து    படைத்து     வைக்கப்பட்டுள்ளமையறிந்து    துய்த்து
மகிழ்ந்தனர்  என்க.  முதல்  மூன்றடிகளிலும்  ஒரு    போர்க்களத்தின்
சூழலைச் சுட்டினார் கலவிப் போர் ஆதலின்.                    63