உண்டாட்டுப் படலம் - 1104

bookmark

வெல்வார் யார்?

1104.

பொரு அரு மதனன் போல்வான்
   ஒருவனும். பூவின்மேல் அத்
திருவினுக்கு உவமை சால்வாள்
   ஒருத்தியும். சேக்கைப் போரில்
ஒருவருக்கு ஒருவர் தோலார்.
   ஒத்தனர்; - ‘உயிரும் ஒன்றே
இருவரது உணர்வும் ஒன்றே’
   என்ற போது யாவர் வெல்வார்?
 
பொரு அறு மதனன் போல்வான்  ஒருவனும் - (அழகில் தனக்கு)
உவமை  சொல்ல   ஒருவனும்   இல்லாத  மன்மதனைப்  போல் வான்
ஒருவனும்;   பூவின் மேல் அத்  திருவினுக்கு  உவமை  சால்வாள்
ஒருத்தியும்   -   (தாமரை)   மலர்   மேல்   வாழும்  மங்கையாகிய
திருமகளுக்கு   உவமிக்கத்   தகுதியுடையாள்  ஒருத்தியும்;  சேக்கைப்
போரில் - மஞ்சத்தில் நிகழ்ந்த கலவிப் போரிலே; ஒருவருக்கு ஒருவர்
தோலார்   ஒத்தனர்   -   ஒருவருக்கு   ஒருவர்   பின்னடையாமல்
சமநிலையிலேயே  (இன்பப்  போர்   புரிதலில்)  இருந்தனர்; இருவரது
உயிரும் ஒன்றே உணர்வும் ஒன்றே என்ற போது யாவர் வெல்வர்-
ஏன்   எனில்   இருவருக்கும்    உயிரும்   உணர்ச்சியும்  ஒன்றேயாக
இருக்கையில் யார் வெல்ல இயலும்? (யார் தோற்க இயலும்)

உடல்     அன்றி  உயிர்  ஆற்றலும்   உணர்வாற்றலுமே   வெற்றி
தோல்வியை  நிர்ணயிப்பன;   அவை  இரண்டும் இவ்விருவர்க்கும் சமம்
ஆதலின்.  கலவிப்  போரில்   ஒருவர்க்கொருவர்  தோற்காமல்  போர்
புரிந்தனர்.  ஒருவரும்  தோற்க  இயலாத  போது   ஒருவரும்  வெற்றி
பெறலும்  இயலாது என்பார். “ஒருவருக்கு ஒருவர்  தோலார்  ஒத்தனர்”
என்றும்.  காரணம்.  “இருவரது  உயிரும்  ஒன்றே;  உணர்வும் ஒன்றே
என்றபோது யாவர் வெல்வார்?” என்றார்.                       58