உண்டாட்டுப் படலம் - 1102
காதலர் கலவிக்காகக் கலன் கழித்தல்
ஊடலும் கூடலும்
1102.
நறை கமழ் அலங்கல் மாலை
நளிர் நறுங் குஞ்சி மைந்தர்.
துறை அறி கலவிச் செவ்வித்
தோகையர் தூசு வீசி.
நிறை அகல் அல்குல் புல்கும்
கலன் கழித்து அகல நீத்தார்;-
அறை பறை அனைய நீரார்
அரு மறைக்கு ஆவரோதான்?
நறைகமழ் அலங்கல் மாலை நளிர் நறும் குஞ்சி மைந்தர்- தேன்
மணம் மிகுந்து அசைகின்ற மலர் மாலை சூடிச் செறிந்து மணம் வீசும்
குடுமியினையுடைய ஆடவர்கள்; துறை அறி கலவி செவ்வித்
தோகையர் தூசு வீசி - இன்பக் கலவையின் துறைகளையறிந்து
பக்குவமற்ற மகளிரின் ஆடைகளை அப்பால் எறிந்துவிட்டு; நிறை
அகல் அல்குல் புல்கும் கலன் கழிந்து அகல நீத்தார் - (மேலும்)
நிறைந்து அகன்ற இடைப் பகுதியைத் தழுவியிருந்த
மேகலையென்னும் அணியையும் வெறுத்து அப்பால் வீசினர்;
அறைபறை யனைய நீரார் - (ஏன் எனில்) (செய்திகளைக் கூவி)
அறைகின்ற பறை போன்று (எப்போதும் வாய்விட்டுக் கத்தும்)
தன்மையினர்; அருமறைக்கு ஆவரோ? - வெளிப்படுத்தக் கூடாத
இரகசியச் செயல் நிகழ்கையில் உடன் இருக்கும் தகுதியுடையார்
ஆவாரோ? (ஆகார்)
தான் - அசை. “தாம் கேட்ட மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான்
அறைபறை யன்னர் கயவர்” என்னும் திருவள்ளுவப் பெருந்தகையின்
திருக்குறள் (1076) கருத்தை. பொன்னணியில் பதித்த நல் மணியாய்ப்
பொதிந்து ஒளிரச் செய்துள்ளார் - வேற்றுப்பொருள் வைப்பணி. 56
