உண்டாட்டுப் படலம் - 1101

bookmark

மன்மதனும் மது அருந்துதல்

1101.

தனங்களின் இளையவர்தம்மின். மும் மடி;
கனம் கனம் இடை இடைக் களிக்கும் கள்வன் ஆய்.
மனங்களில் நுழைந்து. அவர் மாந்து தேறலை
அனங்கனும் அருந்தினான் ஆதல் வேண்டுமால்.
 
தனங்களின்   இளையவர் தம்மின் மும்மடி - தனங்களையுடைய
இள  மகளிர்களைக்  காட்டிலும்  மும்மடங்காக;  கனம்  கனம் இடை
இடைக்    களிக்கும்   கள்வன்   ஆய்    -    மிக   அதிகமாக
அவ்வவ்விடங்களில்   களிப்புக்   கொண்டு   (யார்க்கும்   தெரியாமல்)
கள்வனைப்  போல்;  மனங்களில்  நுழைந்து  -  (ஆடவர் பெண்டிர்
ஆகிய   இருபாலார்)   மனங்களுக்குள்ளே  புகுந்து;  அவர்  மாந்து
தேறலை  -  அவர்கள்  பருகின  மதுவின் தெளிவினை; அனங்கனும்
அருந்தினான்   ஆதல்  வேண்டும்  - மன்மதனும்  உண்டிருப்பான்
ஆதல் வேண்டும்.

ஆல்-அசை.     மன்மதன்  சித்தத்தில் உதிப்பவன் எனும் பொருள்
தரும் ‘சித்தசன்’ எனும் பெயருடையான்  ஆதலின்.  உள்வந்த மதுவை.
உள்ளே  உள்ள இவனும்  உண்டிருப்பானாதலினால்  அங்கிருப்பாரினும்
அவன் மும்மடங்கு (மகிழ்வில்) பொலிந்தான் என்றார்             55