உண்டாட்டுப் படலம் - 1098

bookmark

கணவன் வரவு நோக்கும் காரிகையின் செயல்

1098.

மறப்பிலள். கொழுநனை வரவு நோக்குவாள்.
பிறப்பினொடு இறப்பு எனப் பெயரும் சிந்தையாள்._
துறப்ப அரு முகிலிடைத் தோன்றும் மின் என.
புறப்படும். புகும்; - ஒரு பூத்த கொம்பு அனாள்.
 
கொழுநனை     மறப்பிலள் வரவு நோக்குவாள்  - (தன் காதற்)
கணவனைச்  சிறுபொழுதும்  மறக்க  இயலாதவளாய்.   அவன் வரவை
எதிர்நோக்கிய  வண்ணமே  இருப்பாள்  ஒரு  மங்கை;  பிறப்பினொடு
இறப்பு  எனப் பெயரும் சிந்தையாள் - பிறப்பும் இறப்பும் மாறி மாறி
வருவதுபோல.  அவன்  வருவான்  என  மகிழ்வும்  வாரானோ  எனத்
துயரமும் மாறிமாறி வரும் மனம் உடையவள் ஆனாள்; துறப்பு  அரும்
முகில் இடைத் தோன்றும் மின் என் - யாராலும்  நீக்கற்கு  இயலாத
மேகத்தினிடையே தோன்றித் தோன்றி  மறையும்  மின்னற் கொடிபோல;
ஒரு பூத்த கொடியன்னாள்  புறப்படும் புகும் - ஒப்பிலாப் பூங்கொடி
போன்ற   அவள்    (வந்திருப்பான்    என்று   இருப்பிடத்திலிருந்து)
வெளிப்படுவாள்;  (வரவில்லையென்று  உட்சென்று)  மறைவாள்  (ஆகி
ஆயினாள்).

பூத்த     கொடி  இப்போது  மின்னற் கொடியும் ஆயிற்று என்றபடி
“வருவார்   கொழுநர்   எனத்   திறந்தும்.    வாரார்  கொழுநர்  என
அடைத்தும்  திருகு  குடுமி  விடியளவும்   தேயும்”  (கலிங். கடை. 49)
என்பார்  சயங்கொண்டாரும்.  “ஒரு  பூத்த  கொம்பனாள். கொழுநனை
மறப்பிலள்;  வரவு  நோக்குவாள்;  பெயரும்  சிந்தையாள்;  மின் எனப்
புறப்படும்  புகும்”  எனக்  கூட்டுக.  மேகத்தே   மின்னல்   தோன்றிக்
கணந்தோறும்  மறைவது  போல. வீட்டின் முன்  இவளும்  கணந்தோறு
தோன்றி மறைதலால் மின்னலுக்கு உவைமயானாள்.               52