உண்டாட்டுப் படலம் - 1094

bookmark

காதலர் இருவர் புல்லுதல்

1094.

கருத்து ஒரு தன்மையது; உயிரும் ஒன்று; தம்
அருத்தியும் அத் துணை ஆய நீரினார்;
ஒருத்தியும் ஒருத்தனும் உடம்பும் ஒன்று எனப்
பொருத்துவர் ஆம் எனப் புல்லினார் அரோ.
 
கருத்து     ஒரு தன்மையது - கருத்தை ஆராய்ந்தாலும் (இருவர்)
கருத்தும்  ஒன்றுக்கொன்று   சமமாம்;  உயிரும் ஒன்று - (இருவர்க்கும்
வெவ்வேறு   உடம்பில்  இருப்பினும்)   உயிரும்   ஒன்றேயாகும்;  தம்
அருத்தியும்  அத்துணை  ஆய  நீரினார் -  (ஒருவர்  மீது ஒருவர்
கொண்டுள்ள)     காதலும்     (அழகும்      உயிரும்போல)    ஒரு
தன்மையதேயாம்;  ஒருத்தியும்  ஒருத்தனும் உடம்பும்  ஒன்று எனப்
பொருத்துவர்  இவர்எனப்  புல்லினார்  - (இப்படி.  எல்லாம் ஒன்று
ஆகவே  இருப்பதால்.  உடல்மட்டும்  ஏன்   இரண்டாக  ஆவது என
நினைந்து)  அக்கணவனும்   மனைவியும்   உடலையும்   ஒன்றாக்கிவிட
என்ணுகின்றனரோ   என்று    (கண்டோர்)   நினைத்திடுமாறு  இறுகத்
தழுவினர்.

அரோ   - அசை “உருத்தெரி  தன்மையும் உயிரும் ஒன்று” என்பது
“கருத்தொரு  தன்மையது  உயிரும்   ஒன்று”   என்னும்   பாடத்திலும்
மோனைச் சிறப்புடைய பாடபேதம். “ஒன்றா  விதித்திலனே  உயிர்போல
உடம்பையுமே”  (தஞ்சை.  வா.கோ)  என  ஏங்குவர் காதலர். இவர்கள்
ஈருயிரை  ஓருயிர் ஆக்குவதில் வெற்றிகண்டவர்  ஆதலின்.  இப்போது
ஈருடலையும் ஓருடலாக்கும்  முயற்சியில்முனைந்துள்ளனர்     என்பார்.
“உடம்பும்  ஒன்றெனப் பொருத்துவர் ஆம்  எனப்புல்லினர்”   என்றார்.
உடம்பும்   என்ற    உம்மை    உயிரே   யன்றி   உடம்பும்   எனும்
பொருள்குறித்து நின்றது.                                    48