உடுமலை நாராயணகவி

உடுமலை நாராயணகவி

bookmark

வாழ்க்கை வரலாறு பிறப்பு உடுமலை நாராயணகவி, 25 செப்டம்பர் 1899 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள பூவிளைவாடி என்னும் பூளைவாடிச் சிற்றூரில் 24 மனைத் தெலுங்கு செட்டியார் இனத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி முத்தம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நாராயணசாமி என்பதாகும். இளம் வயதிலேயே தம் தாய் தந்தையரை இழந்த நாராயணசாமி வறுமையில் உழன்றார். நான்காம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்ட நாராயணசாமி, கிராமியக் கலைகளான புரவியாட்டம், சிக்குமேளம், தம்பட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில்கும்மி போன்ற கொங்கு மண்ணின் கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ஆர்வத்துடன் பங்கேற்றார். உடுமலை நாராயணகவி என்கிற நாராயணசாமி முன்னாள் தமிழ்த் திரைப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார். விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்; முத்துசாமிக்கவிராயரின் மாணவர்; ஆரம்பக் காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார். இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன. 1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தவர். நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர். ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப்பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு  கிந்தனார்  கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர். அண்ணாத்துரை எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற படங்களுக்கும் மு. கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா திரைப்படங்களுக்கும், பிரபாவதி, காவேரி, சொர்க்கவாசல், தூக்குத்தூக்கி, தெய்வப்பிறவி, மாங்கல்யபாக்கியம், சித்தி, எங்கள் வீட்டு மகாலட்சுமி, ரத்தக் கண்ணீர், ஆதிபராசக்தி, தேவதாஸ் போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர். ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர். நேர்மையும், சொல்திறமையும் மிக்கவர். எவ்வகையிலும் தலை வணங்காத உறுதி உடையவர். பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர். திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர். கவிராயரின் பாடல்கள் மக்கள் மனங்களை ஈர்த்து அவர்களின் உள்ளங்களில் தனியிடத்தைப் பெற்றன.  கலைமாமணி என்னும் பட்டம் பெற்றார். தமிழும் இசையும் உள்ளவரை சாகாவரம் பெற்ற பாடல்களை எழுதிய உடுமலை நாராயணகவி தம் 82வது வயதில், 23.5.1981 இல் மறைந்தார். இந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவை போற்றும் வகையில் 31.12.2008 இல் இந்திய அஞ்சல் துறை அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது.