இல்துமிஷ் மீண்டும் அலாவுதீன் வாழ்க்கையில் வருதல்

bookmark

ஆம்! இல்துமிஷ், "அற்புத விளக்கை தவற விட்டு விட்டோமே! எவ்வளவு முயற்சி செய்தும் கூட அதனைத் தன்னால் பெற முடியவில்லையே" என்று பெரிதும் வருந்திய வண்ணம் இருந்தான்.  எனினும் அவனது மனதில் எப்படியும் அந்த அபூர்வ விளக்கை அடைந்தே ஆக வேண்டும் என்ற ஆசை வேரூன்றி இருந்தது. மறுபக்கம் அலாவுதீன் தான் அந்த விளக்கை எடுக்க முடியும் என்று விதி இருக்கும் பட்சத்தில் அலாவுதீன் அந்தக் குகைக்குள் மடிந்து இருப்பானா? இல்லைப் பிழைத்து இருப்பானா? என்ற கேள்வியும் கூட இல்துமிஷ் இன் மனதில் எழுந்தது.

உடனே தனது மந்திர சக்திகளை ஒன்று திரட்டினான். அதனைக் கொண்டு ஒரு பூதக் கண்ணாடியை உருவாக்கினான். அது உள்ளதை உள்ளபடி சொல்லக் கூடிய பூதக்கண்ணாடி. அதில் நடந்ததையும், நடப்பதையும் காணமுடியும். அவ்வளவு வல்லமை கொண்டது அந்தக் கண்ணாடி. ஆனால், நடக்கப் போவதை அந்தக் கண்ணாடி காட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பூதக் கண்ணாடியிடம் அலாவுதீன் உயிருடன் இருக்கிறானா? இல்லையா? என்று இல்துமிஷ் கேட்க. அந்தக் கண்ணாடி அலாவுதீன் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் காண்பிக்கத் தொடங்கியது. அதனைக் கொண்டு அலாவுதீன் பூதத்தின் உதவியுடன் மரண குகையில் இருந்து தப்பித்து தற்போது அவனது நாட்டின் இளவரசியையே மணந்து சுகமாக வாழ்ந்து கொண்டு இருப்பதை அறிந்து வயிறு எறிந்தான் இல்துமிஷ்.

எனினும் அலாவுதீனிடம் இருந்து எப்படியேனும் விளக்கை தட்டிப் பறித்து விடலாம் என்ற எண்ணம் கொண்டான் இல்துமிஷ். அப்படி அவன் கொண்ட எண்ணத்தால் மகிழ்ந்தான். பிறகு நம்பிக்கையுடன் பாக்தாத் நகரத்தை அடைந்தான். அங்கு தான் அலாவுதீன் அந்நாட்டு இளவரசியை மணந்து கொண்டு ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தான்.

பாக்தாத் நகரத்தை அடைந்த மந்திரவாதி ஒரு சொகுசு சத்திரத்தில் தங்கினான். அங்கு வந்து போகின்றவர்களை சிநேகம் பிடித்துக் கொண்டு அலாவுதீன் பற்றி தினம் ஒரு செய்தியை அறிந்து கொண்டான். அவனுக்கு அலாவுதீன் பற்றி அவன் எதிர்பார்த்ததை விட நிறையத் தகவல்கள் கிடைத்தது. பாக்தாத் நகரம் முழுவதுமே அலாவுதீனின் புகழ் தான் பாடப்பட்டது.

பிறகு அந்த ஊர் மக்களை விசாரித்து, அவர்களின் உதவியுடன் அலாவுதீன் கட்டிய மாளிகைக்கு செல்லும் மார்க்கத்தையும் அறிந்து கொண்டான் அந்த மந்திரவாதி இல்துமிஷ். அத்துடன் அவன் அந்த மாளிகையை அடைந்த மாத்திரத்தில் அவன் அதன் அழகில் பிரமித்துப் போனான். இதெல்லாம் அற்புத விளக்கின் மகிமை தான் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டான். உடனே அந்த விளக்கை எவ்வாறு கைப்பற்றுவது என்று இரவு பகலாக திட்டம் வகுத்தான் அந்தத் தீய மந்திரவாதி. அத்துடன் தனது மந்திர சக்தியால் அந்த விளக்கு மாளிகையில் தான் உள்ளது என்பதையும் அறிந்து கொண்டான் அவன்.

பின்னர் பித்தளைப் பாத்திரங்கள் தயாரிக்கும் பட்டறைக்குச் சென்றான். அற்புத விளக்கின் மாதிரியைக் காட்டி அதைப் போலவே ஐம்பது விளக்குகளை தயார் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அதுவும் அவை அனைத்தும் இரண்டு தினங்களுக்குள் கிடைக்க வேண்டும் என்றும் கூறினான். மேலும் அந்தப் பட்டறையை நடத்துபவர் கேட்ட கூலியை விட இரண்டு மடங்கு கூலியை தருவதாகக் கூறி அதிகத் தொகையை முன்பணமாக அவரிடம் கொடுத்தான் அந்த மந்திரவாதி. அதனை வாங்கிக் கொண்டு இரண்டே நாட்களில் அந்த மந்திரவாதி தன்னிடம் காட்டியே அதே மாதிரியான வகையைச் சேர்ந்த ஐம்பது விளக்குகளை செய்து கொடுத்து விட்டார் பட்டறையின் உரிமையாளர். இப்படியாக அந்த ஐம்பது போலி விளக்குகளை பெற்றுக் கொண்ட மந்திரவாதி விளக்கு விற்பவன் போலத் தனது கோலத்தை மாற்றிக் கொண்டான். அலாவுதீன் வேட்டைக்குச் சென்ற சமயத்தில் அவனது மாளிகையை சுற்றி, சுற்றி வந்து "பழைய விளக்குகளை கொடுங்கள். புது விளக்குகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்றபடி கூவிக் கொண்டே வந்தான்.

அதனைக் கேட்ட சிலர் "என்ன பைத்தியக்காரன் இவன் யாராவது பழைய விளக்குகளுக்கு புது விளக்குகளைத் தருவார்களா?" என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். விஷயம் அப்படியே பரவி இளவரசியின் காதுகளை வந்து அடைந்தது. இளவரசி தனது தோழிகளிடம்," நமது அரண்மனையில் ஏதேனும் பழைய விளக்கு இருக்கிறதா?" என்று கேட்டாள்.

"ஆம் ஓரிடத்தில் நாங்கள் சுத்தம் செய்யும் சமயத்தில் ஒரு பழைய விளக்கைக் கண்டோம். அது தூசி படிந்து தேய்ந்து போய் இருந்தது" என்றனர் இளவரசியின் தோழிகள்.

"அப்படியா சந்தோஷம். அந்த ஒன்றுக்கும் உதவாத விளக்கை கொண்டு போய் அந்த விளக்கு விற்பவரிடம் கொடுத்து அதற்கு ஈடாக உடனுக்குடன் புது விளக்கை பெற்றுக் கொண்டு வாருங்கள்" என்று இளவரசி ஆணையிட. அதன் படியே அவளது தோழிகள் அந்த அபூர்வ விளக்கின் மகிமையை அறியாது அதனைப் பழைய உதவாத விளக்கு என்று கருதி அந்த விளக்கு வியாபாரியிடம் (மாறுவடத்தில் இருந்த மந்திரவாதி இல்துமிஷிடம்) கொடுத்தனர். இப்படியாக அந்த அபூர்வ விளக்கு அந்த மந்திரவாதியின் கைக்கு மாறியது.

மந்திரவாதியும் இதற்காகத் தானே ஆசைப்பட்டான். அவனது இத்தனை ஆண்டு காலத் தவம் நிறைவேறியதை நினைத்து சந்தோஷம் அடைந்தான். அலாவுதீனின் கவனக் குறைவு இப்போது மந்திரவாதியின் நல்ல காலத்துக்கு வழி வகுத்து விட்டது. எல்லாம் உண்மையில் அலாவுதீனின் போறாத காலம் தான். இன்னும் சொல்லப் போனால் அவனது பெரும் தவறு தான். ஆம்! பத்திரமாக பாதுக்காத்து வைக்க வேண்டிய பொக்கிஷத்தை வசதி வாய்ப்புகள் வந்த பிறகு அலட்சியமாக எல்லோர் கைகளிலும் சிக்குமாறு வைத்தது உண்மையில் யாருடைய தவறு? அலாவுதீனின் தவறு தானே!

அலாவுதீன் செய்த இந்தத் தவறு அவன் வாழ்க்கையையே அதல பாதாளத்துக்கு கொண்டு செல்லப் போகும் தவறு என்பதை காலம் அவனுக்கு உணர்த்தக் காத்துக் கொண்டு இருந்த நிலையில் தனது கைகளுக்கு வந்து சேர்ந்த அந்த அதிசய விளக்கை அந்த மந்திரவாதி பத்திரமாகத் தனது சட்டைப் பையில் வைத்துக் கொண்டான்.

அபூர்வ விளக்கு கிடைத்த பிறகு இன்னும் எதற்கு விளக்கு வியாபாரம்? ஆம்! அவன் விளக்குகள் வைக்கப்பட்டு இருந்த வண்டியை நடு ரோட்டிலேயே வைத்து விட்டு. சத்திரத்தையும் காலி செய்தான்.

பிறகு சிறிது தூரம் சென்ற பிறகு அந்த விளக்கை தேய்த்து பூதத்தை வரவழைத்தான். உடனுக்குடன் பூதமும் முன்பு அலாவுதீனுக்கு முன்னாள் தோன்றியது போல அந்த மந்திரவாதியின் முன்னாலும் தோன்றியது. இப்போது அந்த பூதத்தின் சட்டப்படி விளக்கு மந்திரவாதியின் கைகளில் இருப்பதால் அந்த மந்திரவாதி தான் அந்த பூதத்தின் புது எஜமானன். அலாவுதீன் அல்ல. அதனால் அந்த மந்திரவாதி என்ன சொல்கிறானோ அதனை அந்தப் பூதம் கேட்டுத் தான் ஆக வேண்டும். அந்த வகையில் அந்த மந்திரவாதியின் ஆணைக்காகக் காத்துக் கொண்டு இருந்தது அந்தப் பூதம்.

உடனே அந்த மந்திரவாதி பூதத்திற்கு இவ்வாறு ஆணையைப் பிறப்பித்தான்.

"ஏ பூதமே, அலாவுதீனுடைய மாளிகையை அப்படியே இருந்த இடம் தெரியாமல் பெயர்த்து எடுத்துச் சென்று என்னுடைய நாட்டில் என்னுடைய நகரத்தில் உள்ள பெரிய தோப்பில் கொண்டு வைக்க வேண்டும். அத்துடன் அந்த மாளிகையுடன் அதில் இருப்பவர்கள் அனைவரையும் கொண்டு போய்விட வேண்டும். யாரையும் விட்டு வைக்கக் கூடாது; என்னையும் பிறகு அந்த இடத்திற்கு கொண்டு சென்று விட வேண்டும்" என்றான்.

பூதத்திடம் இல்துமிஷ் என்ற அந்த மந்திரவாதி கட்டளையிட்ட ஒரு சில நிமிடங்களில் பூதம் அந்தக் கட்டளையை நிறைவேற்றத் தொடங்கியது. அதன் படி அலாவுதீனின் அந்த மாளிகையை பெயர்த்து எடுத்து அதனைப் பத்திரமாக அதில் உள்ளவர்களுடன் அப்படியே கொண்டு போய் மந்திரவாதி வசிக்கும் ஆப்கானிய பிரதேசத்தின் காந்தகார நகரத்தில் உள்ள அவனது பெரிய தோப்பில் ஒரு சரியான இடத்தில் வைத்து விட்டது. அதன் பிறகு அந்த மந்திரவாதியையும் அங்கு கொண்டு போய் சேர்த்து விட்டது. இப்படியாக அலாவுதீன் கட்டிய அந்த மாளிகை ஒரு கணத்தில் அவனது அலட்சியத்தால் இடம் பெயர்ந்தது.

ஒவ்வொரு நாள் காலையிலும் சுல்தான் எழுந்ததும் எழும்பாததுமாக முதல் வேலையாகத் தனது மகளின் மாளிகையைப் பார்த்து மகிழ்வது வழக்கம். அன்றைய தினமும் அவர் கண் விழித்தபடி மாளிகை இருக்கும் திசையை நோக்கி நடந்தார். அந்த இடம் வெற்று இடமாக இருந்தது. ஒரு வேளைத் தான் கண்டது கனவோ என்று நினைத்தபடி மீண்டும், மீண்டும் கண்களை கசக்கிப் பார்த்தார். பிறகு தான் சுல்தானுக்குப் புரிந்தது அவர் கண்டது அனைத்தும் நிஜமே. ஆம்! உண்மையில் அந்த மாளிகை மறைந்து தான் போயிருந்தது. இன்னும் சொல்லப் போனால் அது இருந்த சுவடு கூடத் தெரியவில்லை. அதைக் கண்ட மன்னர் மயங்கி விழுந்தார். பிறகு சிறிது நேரத்தில் அவராகவே மயக்கம் தெளிந்து "தனது மகளின் நிலை என்ன ஆனதோ?" என்று புலம்பித் தவித்தார். அவர் கண்களில் இருந்து கண்ணீர் அருவி போலப் பெருக்கெடுத்து ஓடியது. அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்போது மன்னருக்கு அவருடைய முக்கிய மந்திரின் நினைவு வரவே உடனே அவரை அழைத்து வருமாறு தனது சேவகர்களுக்கு கட்டளை பிறப்பித்தார். அதன் படியே அந்த சேவகர்கள் சென்று முக்கிய மந்திரியை உடனுக்குடன் அழைத்து வந்தனர். அவர் ஓடோடி வந்து மன்னரின் நிலையைக் கண்டார். மனம் கலங்கி அந்த நிலைக்கான காரணத்தைக் கேட்டார். அப்போது மன்னர் முக்கிய மந்திரியிடம்," தாங்கள் அலாவுதீனின் மாளிகை பக்கம் சென்று பார்த்தீர்களா?" என்று கேட்டார்.

"இல்லை அரசே. அங்கு போக வேண்டிய அவசியம் எனக்கு ஏதும் இல்லையே!" என்றார்.

அப்போது மன்னர்," தாங்கள் ஒருவேளை அந்தப் பக்கம் போய் இருந்தால் தங்களுக்கே தெரிந்து இருக்கும்" என்றார் அரசர்.

"ஏன்?என்ன?" என்று கேட்டபடி உடனே முக்கிய மந்திரி அலாவுதீனின் மாளிகை இருந்த திசை பக்கமாக ஓடிச் சென்று பார்த்தார். அந்த மாளிகை இருந்த சுவடு கூடத் தெரியவில்லை. அதனைக் கண்ட மாத்திரத்தில் அதிர்ந்தார். அரசர் சோகமாக அழுது கொண்டு இருக்கும் காரணத்தை இப்படியாக அறிந்தார்.

பின்னர் அரசருக்கு ஆறுதல் சொல்லத் தெரியாமல் மெளனமாக இருந்த முக்கிய மந்திரியின் மனதில் அலாவுதீனை பலி வாங்க இது ஒரு நல்ல வாய்ப்பு என்று பட்டது. உடனே அரசரிடம், "வேந்தே! முன்பே இந்த மாளிகை பற்றிய விஷயத்தை நான் உங்களிடம் மாயா ஜாலம் என்று கூறிய போதெல்லாம் ஏதோ நான் பொறாமையால் கூறியதாக எண்ணிக் கொண்டு என் மீது கோபப்பட்டீர்கள். இப்போதாதவது நான் சொன்னது அனைத்தும் உண்மை என்று தங்களுக்குப் புரிகிறதா?" என்றார்.

"ஆம்! மந்திரியாரே தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான். அலாவுதீன் மோசக்காரன். ஏதேதோ மந்திர ஜாலங்கள் செய்து என்னை ஏமாற்றி இருக்கிறான். இப்போது அந்த அயோக்கியன் எங்கு சென்று இருக்கிறான்?" என்று கேட்டார்.

"அந்த மோசக்காரன் வேட்டைக்குச் சென்று இருக்கிறான் அரசே. அவனை நாம் விடக் கூடாது" என்று கூறினார் முக்கிய மந்திரி.

உடனே சுல்தான் தலைமைத் தளபதியை அழைத்து வரச் செய்து, "அலாவுதீன் வேட்டைக்குச் சென்று இருக்கிறானாம், உடனே சென்று அவன் கைகளைப் பின்புறமாகச் சேர்த்துக் கட்டிச் சங்கிலியால் அவனை பிணைத்து வீதி வழியாக ஊர்வலமாக இழுத்து வாருங்கள்" என்று ஆணை பிறப்பித்தார்.

அதன் படியே தலைமைத் தளபதிகள் அலாவுதீனைத் தேடிக் கானகம் சென்றனர். அத்துடன் அலாவுதீனைக் கண்ட மாத்திரத்தில் அவனிடம் தயங்கித் தயங்கி சுல்தானின் ஆணையைக் கூறினார்கள். அவன் மீது அவர்கள் பேரன்பு கொண்டு இருந்ததால் தாங்கள் செய்யப் போகும் செயலுக்காக அவனிடம் மன்னிப்பும் வேண்டி நின்றனர்.

தலைமைத் தளபதிகள் அனைவரும் சுல்தானின் ஆணையைத் தன்னிடம் கூறிய மாத்திரத்தில் அதிர்ந்து போனான் அலாவுதீன். பின்னர் தன்னைக் கைது செய்ய வந்திருந்த தளபதிகளிடம், "என்ன காரணத்திற்காக என்னை இவ்விதம் சங்கிலியால் பிணைத்து வீதி வழியாக ஊர்வலமாக கொண்டு செல்ல வேண்டும் என்று சுல்தான் கூறினார் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.

அவர்கள், "பிரபுவே அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. சுல்தான் எங்களிடம் தங்கள் கைகளைப் பின்புறமாக சேர்த்துக் கட்டிச் சங்கிலியால் பிணைத்து வீதி வழியாக ஊர்வலமாக இழுத்து வருமாறு ஆணையிட்டு உள்ளார். அதனை நாங்கள் நிறைவேற்றாவிட்டால் எங்கள் தலைக்கு ஆபத்து வந்த சேரும்" என்றனர்.

தலைமைத் தளபதிகளின் நிலைமையை புரிந்து கொண்ட அலாவுதீன், "நான் மன சாட்சியுடன் சொல்கிறேன். நான் எந்த ஒரு ராஜ துரோக குற்றத்தையும் செய்யவில்லை. அப்படி நான் ஏதேனும் ராஜத் துரோக குற்றங்களை செய்திருந்தால் தானே எனக்கு இது போன்ற தண்டனையை மன்னர் வழங்கி இருக்க வேண்டும். சரி, நீங்கள் பாவம் என்ன செய்வீர்கள். மன்னரின் கட்டளை எதுவாயினும் அதனைத் தாங்கள் நிறைவேற்றித் தான் ஆக வேண்டும். உங்களுக்கு அளிக்கப்பட்ட ஆணையை நிறைவேற்றுங்கள்" என்று கூறவும்.

அதன் படியே அலாவுதீனின் கைகளை பின்புறமாகக் கட்டி வீதி வழியாக ஊர்வலமாக அரண்மனை நோக்கி இழுத்துச் சென்றனர். அலாவுதீனின் கரங்கள் பின்புறமாக சங்கிலியால் கட்டப் பட்டு இருப்பதைக் கண்ட பொதுமக்கள் அனைவரும் அவன் மீது தாங்கள் கொண்ட அன்பினால் கொதித்துப் போனார்கள். அத்துடன் தத்தமது ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அலாவுதீனை மன்னர் கொலை செய்து விடுவாரோ என்ற பயத்தில் அரண்மனையை நோக்கி பொதுமக்கள் விரைந்தனர். அரண்மனையை ஏரளாமான காவலர்கள் பாதுகாத்து நின்றனர். இதனால் சுல்தானின் காவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மறுபுறம் அலாவதீனுடன் அரண்மனையை அடைந்த படைத் தளபதிகள் மன்னருக்கு அலாவுதீனை கைது செய்த விவரத்தைச் சொன்னார்கள். உடனே அரச தர்பாருக்கு வந்த சுல்தான் கோபத்துடன் அலாவுதீனைப் பார்த்த மட்டில் அவனைக் கண்டம் துண்டமாக வெட்டிப் போடும் படியாக அரண்மனை ஆஸ்தான  கொலையாளிகளுக்கு ஆணையிட்டார்.

இந்தச் செய்தியை சில நொடியில் எப்படியோ அறிந்து கொண்ட அரண்மனை வாயிலில் இருந்த பொதுமக்கள் அரண்மனையை தாக்க முற்பட்டார்கள்.

"அலாவுதீன் மீது ஒரு சிறு துரும்பு பட்டாலும் அரண்மனையை தகர்த்து எறிந்து விடுவோம்" என்று கூறி ஆவேசம் அடைந்தார்கள். அத்துடன் அரண்மனை மீது கற்களை வீசினார்கள். அரண்மனைக் காவலாளிகளாலும், தளபதிகளாலும் மக்களைக் கட்டுப் படுத்த முடியவில்லை. ஒரு புரட்சியே வெடிக்கும் சூழல் உருவானது. அதனைக் கண்டு பீதி அடைந்த முக்கிய மந்திரி அரசரிடம் ஓடிச் சென்று, "அரசே, தங்களது ஆணையைத் திரும்பப் பெறுங்கள்; நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அலாவுதீனுக்காக தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்து விட்டார்கள் மக்கள். அத்துடன் அலாவுதீனுக்கு ஏதேனும் நேர்ந்தால் இந்த அரண்மனை மட்டும் அல்ல இந்த நாடே குழப்பத்தில் அழியும் போல் இருக்கிறது. மக்கள் ஒவ்வொருவரும் வெறி பிடித்தபடி இருக்கிறார்கள். ஒருவேளை புரட்சி வெடித்தால் தங்கள் சிம்மாசனத்துக்கே அது ஆபத்தைத் தரும். எனவே காலம் தாழ்த்தாமல் அலாவுதீன் விஷயத்தில் தங்கள் ஆணையைத் திரும்பப் பெறுங்கள்" என்று கூறினார்.

முக்கிய மந்திரியின் வார்த்தைகளைக் கேட்ட மன்னர் நிலைமையைப் புரிந்து கொண்டார். அலாவுதீனுக்காக தன்னையும் தூக்கி ஏறிய மக்கள் தயார் என்பதை அவர் அறிந்து கொண்டார். அதனை நினைத்த மாத்திரத்தில் பயம் அவரது மனதைக் கவ்வியது. அத்துடன் பயத்தில் வியர்வையால் குளித்தார் சுல்தான். அத்துடன் அலாவுதீனின் விஷயத்தில் கொஞ்சம் பணிந்து போக முன்வந்தார். மக்களை சமாதானப் படுத்தவும் தீர்மானித்தார்.

பிறகு மன்னரே சென்று மக்களிடம் பேசினார். அலாவுதீனுக்கு மரண தண்டனை அளிக்க மாட்டேன் என்று உறுதி கூறினார். அத்துடன் தான் அலாவுதீனைக் கைது செய்த காரணத்தையும் மக்களிடம் கூற வேண்டிய நிர்பந்தம் வந்ததால் அதையும் கூறினார்.

உடனே அலாவுதீன் மீதான வழக்கை மக்கள் முன்னாள் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் மக்கள். அதற்கு மன்னர் சம்மதம் தெரிவித்தார். மக்கள் முன்னாள் விசாரணை நடந்தது. அலாவுதீனோ, "அல்லாவின் மீது ஆணையாக சொல்கிறேன் என் மீது எந்தத் தவறும் இல்லை. நான் அப்பாவி. எனக்கு எதுவுமே தெரியாது" என்று கூறினான்.

அதைக் கேட்ட சுல்தான் வெகுண்டார். அவர் அலாவுதீனிடம்,"உண்மையிலேயே உனக்கு எதுவும் தெரியாதா? தெரியாதென்றால் இந்த ஜன்னல் வழியே உனது மாளிகை இருக்கிறதா என்று பார்!" என்று கூறவும். அவ்வாறே ஜன்னல் வெளியே பார்த்த அலாவுதீனுக்கு அப்போது தான் எல்லாமே புரிந்தது. மாளிகை இல்லை என்பதைப் பார்த்த அவன் என்ன நடந்து இருக்கும் என்பதை யூகித்துக் கொண்டான். எனினும், அதனை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தான். பிறகு சுல்தானிடம்," அரசே! மாளிகை காணாமல் போனதற்கும் எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. இதில் ஏதோ சதி நடந்து இருக்கிறது" என்றான்.

"அந்தச் சதி என்ன என்று உனக்குத் தெரியாதா?" என்று கேட்டார் சுல்தான்.

"மீண்டும் சொல்கிறேன் அல்லாவின் மீது ஆணையாக எனக்கு எதுவும் தெரியாது. அதனால் தான் நான் வேட்டைக்குச் சென்றேன். இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் நான் வேட்டைக்குச் சென்று இருப்பேனா?" என்று திருப்பிக் கேட்டான் அலாவுதீன்.

"அலாவுதீன் மேற்கொண்டு நாம் விவாதித்துப் பயன் இல்லை. மாளிகையை விடு. அதைப் போன்று ஆயிரம் மாளிகைகளை என்னால் கட்ட முடியும். ஆனால் எனது அன்பு மகளின் நிலை என்ன?" என்றார் சுல்தான்.

"சுல்தான் அவர்களே இளவரசி தங்கள் மகள் மட்டும் அல்ல எனது அன்புக்கு உரிய மனைவியும் கூட. அவளைக் கண்டு பிடிக்கும் மிகப் பெரிய பொறுப்பு எனக்கும் உண்டு. உங்களை விட நான் தங்களது மகளின் மீது அதிக அன்பை வைத்து இருக்கிறேன். அதனை அவளும் அறிவாள். என்னைத் தாங்கள் சற்று முன்னர் கண்டம் துண்டமாக வெட்டி எறியச் சொன்னீர்களே இதனை உங்கள் மகள் அறிந்தால் நிச்சயம் உங்களை அவள் மன்னிக்க மாட்டாள். காரணம் அவ்வளவு அன்பை அவள் என் மீது வைத்து இருக்கிறாள். இன்னும் முப்பது நாட்களுக்குள் எனது மனைவியை நான் எங்கு இருந்தாலும் அழைத்து வருவேன். அத்துடன் இன்று உங்களுடைய சுய ரூபத்தையும் நான் அறிந்து கொண்டேன். நேற்று வரையில் நீங்கள் என் மீது காட்டிய பாசம் எல்லாம் வெறும் வேஷம் என்பதை எனக்குத் தாங்கள் புரிய வைத்து விட்டீர்கள்" என்று கூறி முடித்த அலாவுதீன். அங்குக் கூடி இருந்த பொது மக்களிடம் தனது உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்தான். அத்துடன் தான் அரசுக்கோ அல்லது அந்த நாட்டுக்கோ எந்த வித துரோகத்தையும் செய்ய வில்லை என்பதை மீண்டும், மீண்டும் பொதுமக்கள் முன்னிலையில் சத்தியம் செய்து எடுத்துக் கூறினான். பிறகு பொதுமக்களிடம் விடை பெற்று சுல்தானிடமும் நான் வந்தால் தங்கள் மகளுடன் தான் வருவேன். இல்லையேல் அலாவுதீன் இறந்து விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினான்.

சுல்தானும் அலாவுதீன் கூறிய வார்த்தைகள் மீது நம்பிக்கை கொண்டார். அது மட்டும் அல்ல, அப்போது அவருக்கு இருந்த சூழ்நிலையில் தனது மகளின் உயிரைக் காக்க அவர் யாராவது ஒருவரை நம்பித் தான் ஆக வேண்டும். அலாவுதீனின் வீரத்தின் மீது சுல்தானுக்கு நம்பிக்கை இருந்தது. இருந்தாலும் முக்கிய மந்திரி சுல்தானின் காதுகளில் கிசு கிசுக்க உடனே அலாவுதீனை நிற்கச் சொல்லிய சுல்தான், "அலாவுதீன் நீ அவ்வளவு நல்லவன் என்றால் நீ திரும்பி வரும் வரையில் உனது தாயை என்னிடம் பணையமாக ஒப்படைத்து விடு" என்றார். அதன்படியே தனது தாயைக் கொண்டு வந்து ஒப்படைத்தான் அலாவுதீன்.

உடனே சுல்தான்," அலாவுதீன் எனது மகள் எனக்கு முக்கியம். ஒரு வேளை நீ முப்பது நாளைக்குள் திரும்பி வராவிட்டால் உனது தாயின் உயிருக்கு நான் பொறுப்பல்ல" என்றார்.

அதனைக் கேட்ட அலாவுதீன் கண் கலங்கி நின்றான். பிறகு என்ன செய்ய தனது ஆருயிர் மனைவியைத் தேடிப் புறப்பட்டான். அவன் அதீத புத்திசாலியாக இருந்ததால் எந்த ஒரு மாயக் கண்ணாடியின் துணையும் இல்லாமல் இவை அனைத்தும் அந்த மந்திரவாதியின் வேலை தான் என்பதைப் புரிந்து கொண்டான். அதற்கு வலு சேர்க்கும் விதத்தில் அக்கம் பக்கத்தினர் சிலர் அலாவுதீனிடம் ஒரு விளக்கு வியாபாரி அவனது மாளிகையை சுற்றி, சுற்றி வந்ததையும் மாளிகையில் இருந்த இளவரசியின் தோழிகள் ஒரு பழைய விளக்கை கொண்டு வந்து அந்த விளக்கு விற்பவனிடம் கொடுத்து அதற்கு ஈடாக ஒரு புது விளக்கை வாங்கிக் கொண்டு அரண்மனைக்குள் சென்றதையும் கூறினர். அதைக் கேட்ட அலாவுதீன் மேலும் தெளிவடைந்தான். அத்துடன் அவனது கவனக் குறைவால் வந்த வினை தான் இவை அனைத்தும் என்பதை அவன் புரிந்து கொண்டான்.

சுல்தான் கொடுத்த தவணை நாட்களான முப்பது நாட்களில் இரண்டாவது நாள் வந்தது. அலாவுதீனுக்கு தனது மனைவியை எங்கு சென்று தேடுவது என்றே தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவன் மந்திரவாதி விளக்கை மட்டும் எடுத்துக் கொண்டு போயிருந்தால் கூட இவ்வளவு பெரிதாகக் கவலைப் பட்டு இருக்க மாட்டான். ஆனால் துஷ்ட மந்திரவாதி தனது ஆருயிர் மனைவியையும் மாளிகையுடன் கவர்ந்து சென்றதால் அலாவுதீன் அதிக துக்கம் கொண்டான். அத்துடன் இந்தப் பிரச்சனையில் இருந்து அவனைக் காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவன் ஒருவனால் தான் முடியும் என்பதை உணர்ந்து கொண்டான் அலாவுதீன். அதனை உணர்ந்து கொண்டவனாக அல்லாவைத் தொழுது வழிபட வேண்டித் தனது கை கால்களைக் கழுவினான். அப்போது அவன் தன்னை அறியாமலேயே தனது கை விரலில் உள்ள மோதிரத்தை அழுத்தித் துடைத்தான் அதில் இருந்து சம்சுதீன் என்ற பூதம் வெளிவந்தது. அந்தப் பூதம் தான் முன்பு அலாவுதீனை அந்த இருண்ட குகைக்குள் இருந்து காப்பாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதும் அதே பூதம் தான் அலாவுதீனைக் காக்க முன் வந்தது. அது அவன் முன்னாள் தூண் போல நின்றபடி,"உசூர்! தங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள் உடனடியாக அதனை நான் செய்து முடிக்கிறேன்" என்று கேட்டு நின்றது.

"எனது அற்புத மாளிகையையும் அதில் இருந்த எனது மனைவியையும் மந்திரவாதி ஒருவன் அபகரித்துச் சென்று விட்டான். அவனிடம் இருந்து எனது மனைவியையும் எனது மாளிகையையும் மீட்டுத் தர வேண்டும்" என்று சம்சுதீன் என்ற அந்த பூதத்திடம் வேண்டுகோள் விடுத்தான் அலாவுதீன்.

அலாவுதீனின் வார்த்தைகளைக் கேட்ட சம்சுதீன் பூதம், "மன்னிக்க வேண்டும் உசூர். இது எனது சக்திக்கு மீறிய செயல். காரணம், அந்த மாளிகையை தூக்கிச் சென்றவர் எங்கள் பூத லோகத்தின் சக்கரவர்த்தி. மாய வித்தைகளில் அவர் முன்னாள் நான் சின்னப் பைய்யன். அவர் அந்த விளக்கின் கட்டுப்பாட்டில் உள்ளார். விளக்கோ மந்திரவாதியின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே தெரிந்தோ தெரியாமலோ அந்த மந்திரவாதியின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் எங்கள் பூத லோகத்தின் சக்கரவர்த்தி. அவரால் தான் மீண்டும் அந்த மாளிகையை தங்கள் மனைவியுடன் கொண்டு வந்து பழைய இடத்தில் வைக்க முடியும்" என்றது.

அதனைக் கேட்ட அலாவுதீன் மீண்டும் அந்த பூதத்திடம், "சம்சுதீன்! தாங்கள் என்னை அந்த மாளிகை தற்போது இருக்கும் இடத்துக்கு அருகாமையிலாவது கொண்டு சென்று சேர்க்க முடியுமா?" என்று கேட்டான்.

"அது என்னால் முடியும் உசூர். இது போன்ற சின்னச் சின்ன வேலைகளை செய்ய நான் காத்திருக்கிறேன். மற்றபடி அந்த அபூர்வ விளக்கில் இருந்து வெளிப்பட்ட அந்த பூதத்திடம் எதிர்பார்த்ததை எல்லாம் என்னிடம் தயை கூர்ந்து எதிர்பார்க்காதீர்கள்" என்றது சம்சுதீன் பூதம்.

அலாவுதீனும் அதற்கு ஒப்புக் கொண்டான். பிறகு பூதம் அலாவுதீனின் பழைய மாளிகைக்கு மிக அருகில் கொண்டு போய் அவனை பத்திரமாக இறக்கி விட்டது. அலாவுதீன் அந்த இடத்தைப் பற்றி பூதத்திடம் கேட்க. ஆப்கானிய பிரதேசத்தின் காந்தகார நகரத்தில் உள்ள மந்திரவாதியின் தோப்பில் தான் அந்த மாளிகை இருப்பதை அலாவுதீனிடம் கூறியது அந்தப் பூதம். பிறகு அந்தப் பூதம் அலாவுதீனிடம் இருந்து விடைபெற்றுச் சென்றது.

இப்படியாகத் தனது மனைவி எங்கு இருக்கிறாள் என்று கண்டு பிடித்ததில் அலாவுதீனுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி அத்துடன் தனக்கு சின்னச் சின்ன வேலைகளில் கை கொடுக்க சம்சுதீன் பூதம் இருப்பதை நினைக்கும் போது அவனது மனதில் இன்னும் கூட இறைவன் தனக்கு அருள் செய்து கொண்டு இருக்கிறார் என்பதை உணர்ந்தபடியாக எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றியைத் தெரிவித்தான். பிறகு தனது மாளிகை சற்று தூரத்தில் இருப்பதைக் கண்டான். எப்படியும் தனது மனைவியை பார்த்து விடலாம் என்ற நம்பிக்கை அலாவுதீனுக்கு அப்போது வந்தது. அந்த நம்பிக்கையிலேயே அன்றைய இரவுப் பொழுதை கழித்தான் அலாவுதீன். பின்னர் அடுத்த நாள் காலை விடிந்ததும் அந்த நகரத்தின் பக்கத்தில் ஓடிக் கொண்டு இருந்த நதிக் கரைக்குச் சென்று குளித்து முடித்துக் காலை வேலைத் தொழுகையைப் புரிந்து விட்டு அதன் பின்னர் துணிந்து சென்று இளவரசி வசித்து வந்த மாளிகையில் உள்ள அந்தப் புரத்தின் பக்கத்தில் உள்ள ஜன்னல் பக்கமாக வெளியே உள்ள தோட்டத்தில் அமர்ந்து கொண்டான்.