இல்துமிஷின் தவமும், சம்சுதீனின் அருளும்
ஷாரஜாத் தனது கணவனிடம் தான் இப்போது சொல்லப் போகும் கதை இதற்கு முன்னாள் சொன்ன கதைகளை விட மிகவும் அற்புதமானது என்றாள். அதைக் கேட்ட ஷாரியர்," நீ சொல்லும் கதைகள் எல்லாமே மிக நன்றாகத் தான் இருக்கிறது. அத்துடன் இந்தக் கதையை நீ மிகவும் அற்புதமானது என்று சொல்வதால் நான் இதனை இன்னும் ஆர்வமுடன் கேட்க சித்தம் கொண்டு இருக்கிறேன். எனவே சீக்கிரம் சொல்லத் தொடங்கு" என்றார்.
ஷாரஜாத்தும் அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற அந்தக் கதையை கூறத் தொடங்கினாள்.
அது ஒரு பொல்லாத ஊர். அந்த ஊரில் இருக்கும் அனைவருமே மாந்திரிகத்தில் கைதேர்ந்தவர்கள். அப்படிப் பட்ட ஊரில் ஒரு பொல்லாத மந்திரவாதி வசித்து வந்தான். அவன் பெயர் தான் இல்துமிஷ். அவன் உலகத்தை எல்லாம் தனக்கு அடிமைப் படுத்த வேண்டும் என்று நினைத்தான். எண்ணற்ற அரசர்களை தனது காலடியில் விழ வைக்க வேண்டும் என்பது தான் அவனது ஒரே நோக்கமாக இருந்தது. அதற்காகத் தான் இரவும், பகலும் பாடு பட்டு கடும் தவங்களை மேற்கொண்டான் இல்துமிஷ். கிட்டத்தட்ட ஆயிரம் இரவுகள் கண் விழித்து சம்சுதீன் என்னும் பூதத்தை வசியம் செய்தான். அந்த பூதமும் அந்த மந்திர வாதியின் யாகத்தில் மகிழ்ந்து அவனுக்கு முன்னாள் தோன்றியது.
அப்படித் தோன்றிய பூதம் மந்திரவாதி இல்துமிஷிடம்," இல்துமிஷ்! உனது அரும் தவத்தால் நான் அகம் மகிழ்ந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும்" என்றான்.
அதைக் கேட்ட இல்துமிஷ், "சம்சுதீன் பூதங்களின் அமைச்சனே! நான் இந்த அகிலத்தை எல்லாம் ஆழ வேண்டும். எனக்குக் கேட்டதெல்லாம் கிடைக்க வேண்டும். அத்துடன் நான் பார்ப்பதை எல்லாம் அடைய வேண்டும். சுருங்கச் சொன்னால் நான் ஒட்டுமொத்த பூலோகத்தின் தலைவனாக இருக்க வேண்டும். அதற்கு எனக்கு நல்லதொரு வழியை நீ காட்டு" என்றான்.
அதைக் கேட்ட சம்சுதீன், "இல்துமிஷ்! நீ கேட்கும் வரம் உனது பேராசையை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளது. சுருங்கச் சொன்னால் உனது தவம் சுயநலத்தின் அடிப்படையில் அமைந்து உள்ளது. அத்துடன் அந்த வரத்தை என்னால் தர இயலாது" என்றான்.
"அப்போது நான் உன்னை நோக்கி இத்தனை காலங்களாக செய்த தவம் வீணா?" என்று கேட்டான் இல்துமிஷ்.
"நிச்சயம் வீணில்லை. தெரிந்தோ, தெரியாமலோ என்னை வணங்கும் மார்க்கத்தை நீ அறிந்து கொண்டு இத்தனை இரவுகளாக நீ என்னை பூஜித்ததால் உனது லட்சியத்தை அடைய ஒரு மார்கத்தை நான் உனக்குக் கூறுகிறேன்" என்றான் சம்சுதீன்.
அதைக் கேட்ட இல்துமிஷ் சந்தோஷத்துடன் "உடனே கூறுங்கள் சம்சுதீன்" என்றான்.
"பொறு இல்துமிஷ். அது அவ்வளவு சுலபம் அல்ல"
"எத்தனை கடினமான செயலாக இருந்தாலும் நான் அதனை நடத்தி முடிக்கிறேன். இந்த இல்துமிஷால் முடியாதது ஒன்றும் இல்லை" என்றான் இல்துமிஷ்.
"ஒ அப்படியா? எனில் கேள். இதோ எனது கைகளில் தெரிகிற காட்சியைப் பார். இந்த நகரத்தின் பெயர் "அல்-கலாஸ்". இது ஒரு சபிக்கப்பட்ட நகரம். இந்த நகரத்தின் எல்லையின் அடியில் ஒரு குகை புதைந்து உள்ளது. நான் உனக்கு சொல்லித் தரும் மந்திரங்களை நீ வாசனை திரவியங்களை நெருப்பில் போட்டபடி சொல்ல பூமி இரண்டாகப் பிளக்கும். அதற்குள் ஒரு குகையின் வழி காணப்படும். அந்த குகைக்குள் நீ நடந்து சென்றால். அதன் மறு முனையில் ஒரு விளக்கு இருக்கும். அந்த விளக்கு சாதாரண விளக்கு அல்ல. எங்கள் பூதங்களின் சக்கரவர்த்தி அந்த விளக்கிற்குள் சிறைபட்டு இருக்கிறார். அந்த விளக்கை எடுத்து யார் உரசுகிறார்களோ அப்போது அந்த விளக்கில் இருந்து எங்கள் பூதங்களின் சக்கரவர்த்தி விடுபடுவார். அத்துடன் அந்த விளக்கை வைத்து இருப்பவர்களுக்கு அவர் கட்டுப்பட்டு இருப்பார். அவர்கள் என்ன கேட்டாலும் நிறைவேற்றுவார்" என்று கூறினான் பூதங்களின் அமைச்சன் சம்சுதீன்.
அதைக் கேட்ட இல்துமிஷ்," இவ்வளவு தானா? இப்போதே நான் சென்று அந்த பூதங்களின் சக்கரவர்த்தியை விடுவித்து அத்துடன் அந்த விளக்கையும் நான் கைப்பற்றுகிறேன்" என்றான்.
"கொஞ்சம் பொறு. உன்னால் அது முடியாது. காரணம் அந்த விளக்கிற்கு இன்றைய கால கட்டத்தில் நீ உடமை உள்ளவன் அல்ல. அதனை எடுக்க அலாவுதீன் என்பவனால் தான் இயலும். அவனே அதற்கு உரியவன்" என்றான் சம்சுதீன்.
"அந்த அலாவுதீன் யார். அவன் எங்கு இருக்கிறான்?" என்று கேட்டான் இல்துமிஷ்.
"அவன் இப்போது பாக்தாத் நகரத்தில் இருக்கிறான். காலம் சென்ற முகம்மது என்ற ஏழைத் தையல் காரனின் மகன் தான் இந்த அலாவுதீன்" என்று பதில் அளித்தான் சம்சுதீன்.
"எனில் அவனை இப்போதே எனக்குக் காட்டிக் கொடு" என்று கேட்டான் இல்துமிஷ்.
"இதோ பார்" என்று தனது கைகளை நீட்ட, சம்சுதீனின் கைகளில் அலாவுதீனையும் அவனது இருப்பிடத்தையும் கண்டு கொண்டான் இல்துமிஷ். அதைக் கண்ட மாத்திரத்தில் தனக்கே அந்த அபூர்வ விளக்கு சொந்தம் என்று தீர்மானித்தும் விட்டான்.
அந்தத் தீர்மானத்துக்கு வலு சேர்க்கும் விதத்தில் சம்சுதீன் ஒரு மோதிரத்தை இல்துமிஷிடம் கொடுத்து, "இல்துமிஷ்! இத்தனை காலங்கள் நீ என்னை நோக்கிக் கடும் தவம் செய்ததன் பலனாக இந்த மோதிரத்தை வைத்துக் கொள். இந்த மோதிரத்தை யார் வைத்து இருக்கிறார்களோ அவர்களுக்கு நான் அடிமை. அவர்கள் என்னை அழைக்க விரும்பினால் இந்த மோதிரத்தை உரச நான் வெளிப்படுவேன். அத்துடன் எனது சக்திக்கு உட்பட்டு அவர்கள் கேட்பதை நான் நிறைவேற்றித் தருவேன்" என்று கூறினான் சம்சுதீன்.
இல்துமிஷ் அந்த மோதிரத்தை பய பக்தியுடன் வாங்கிக் கொண்டான். பிறகு சம்சுதீன் என்ற அந்த பூதத்திடம்,"சம்சுதீன் முன் பின் அறிமுகமே இல்லாத நான் அலாவுதீனை அழைத்தால் அவன் எப்படி வருவான். அவனது வீட்டில் அவனை எப்படி என்னுடன் நம்பி அனுப்புவார்கள். இதற்கும் தாங்கள் தான் ஒரு யோசனையை சொல்ல வேண்டும். ஏனெனில் உங்களைப் போன்ற பூதங்கள் அனைவரும் காலத்தை கடந்தவர்கள்" என்று கூறினான்.
இல்துமிஷ் கூறியதைக் கேட்ட சம்சுதீன் சற்று யோசித்து விட்டு, இல்துமிஷிடம்," தாங்கள் அதற்கெல்லாம் கவலைப் பட வேண்டாம். நான் இதற்கு ஒரு அற்புதமான வழியை சொல்கிறேன் கேளுங்கள்! அலாவுதீனுக்கு அப்துல்லா என்ற சிறிய தந்தை இருந்தார். அவர் வெளிநாட்டுக்கு வேலை விஷயமாய் சென்ற சமயத்தில் ஒரு கப்பல் விபத்தில் இறந்து போனார். அப்போது அலாவுதீன் சிறு பிள்ளையாக இருந்தான். ஆனால், அவனது தாய்க்கு அப்துல்லாவைத் தெரியும். அதனால், அப்துல்லாவின் வடிவத்தை நான் தங்களுக்குத் தருகிறேன். நீங்கள் அந்த வடிவத்தில் சென்று அலாவுதீனை அழைக்க அவன் நிச்சயம் தங்களுடன் வருவான். இதனால் யாருக்கும் சந்தேகம் வராது. அப்படியே யாராவது கேட்டாலும் கூட, 'நான் தான் அப்துல்லா' என்று சாதியுங்கள்" என்றான்.
சம்சுதீனின் இந்த யோசனை இல்துமிஷுக்கு மகவும் பிடித்து இருந்தது. அதன் படியே சம்சுதீனின் துணையுடன் அலாவுதீனின் சிற்றப்பாவான அப்துல்லாவின் உருவத்தை எடுத்துக் கொண்டு பாக்தாத் நகரத்தை நோக்கியத் தனது பயணத்தை தொடர்ந்தான் இல்துமிஷ்.
