இரண்டாவது வழி:
சபரிமலைக்குச் செல்லும் இரண்டாவது வழியாக ‘இஞ்சிப்பாறைக்கோட்டை’ வழியைச் சொல்லலாம். இங்கும் ஒரு சாஸ்தா கோயில் உள்ளது. அக் கோயில் ‘கோட்டையில் சாஸ்தா’ கோயில் என அறியப்படுகின்றது. பக்தர்கள் இங்கும் வழிபாடுகள் நடத்துகின்றனர். வழுக்கலான இங்குள்ள பாதை ’கரிமலைத் தோட்டில்’ முடிவடைகிறது. இத் தோட்டின் ஒரு பக்கம் அழுதை குன்றும் இன்னொரு பக்கம் கரிமலைக் குன்றும் உள்ளன. கரிமலை யானைகள் நடமாட்டம் அதிகமான பகுதியாகும். அவை நீர் அருந்த கரிமலைத் தோட்டிற்கு வருவது வழக்கம். கடுமையான குளிரைத் தாங்குவதற்கும், யானைகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துகொள்வதற்கும் பக்தர்கள் சுற்றிலும் தீ மூட்டுவர். கரிமலை ஏழு அடுக்குகளைக் கொண்ட ஒரு மலையாகும். அதனால் கட்டம்கட்டமாகவே பக்தர்கள் பயணத்தை மேற்கொள்வர். ஐந்து கிலோமீட்டர் நீண்டு செல்லும் இப்பாதை பக்தர்களுக்கு மிகவும் கடினமாகவே இருக்கும். ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என சரண மந்திரத்தை உரக்கச் சொல்லிக்கொண்டு பக்தர்கள் தங்கள் களைப்பை மறப்பர். கரிமலையின் உச்சியில் பரப்பான ஒரு பகுதி உண்டு. பக்தர்கள் அங்கே ஓய்வெடுத்துக்கொள்வர். இங்கே ஒரு கிணற்றுக்குள் இன்னொரு கிணறு காணப்படுகிறது. அது ‘நாழிக்கிணறு’ என அறியப்படுகின்றது.மிகவும் சுத்தமான நீர் இங்கு ஊற்றெடுத்து வரக் காணலாம். பக்தர்கள் தங்கள் தாகத்தையும் களைப்பையும் அகற்ற இந்நீரைப் பயன்படுத்துவர். இங்கு பல்வேறு கடவுளர்க்கு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. கரிமலந்தன், கொச்சு கடுத்த சுவாமி, பகவதி ஆகியோர் முக்கிய தெய்வங்கள்.
