ஆழ்வார்கள்
ஆழ்வார்கள் என்போர் திருமாலின் அடியவர்கள் என்று கருதப்படுகின்றனர். வடமொழியிலும் தென்மொழியிலும் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் இவர்கள். இவர்கள் பன்னிருவரும் தமிழர்களே என்பது இன்னொரு சிறப்பு. எனினும், பெண் என்பதால் ஆண்டாளையும், நம்மாழ்வாரைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் விடுத்து ஆழ்வார்கள் 10 பேர் எனக் காட்டுவாரும் உண்டு. இவர்கள் அனைவரும் 7 முதல் 9 நூற்றாண்டுக் கால அளவில் வாழ்ந்தவர்கள்.
ஆழ்வார்கள் என்ற பெயர் வந்ததன் காரணம்:-
மரபுப்படி இறைவனின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்களை ஆழ்வார்கள் என்று சொற்பொருள் கூறுவர். ஆயினும் அறிவியல் ஆய்வின்படி இந்தச் சொல ஆள்வார் என்றுதான் முதலில் வழங்கினதாகவும் பிறகு ஆழ்வார் என்று ஆயினதாகவும் S. பழனியப்பன் என்ற இந்தியவியல்/மொழியியல் ஆய்வாளர் பதிப்பித்துள்ளார்.
ஆழ்வார்கள் எழுதிய நாலாயிரத்திவ்விய பிரபந்தம் ஒரு சிறு பார்வை:-
நாலாயிர திவ்விய பிரபந்தம் பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக, தமிழ்மறையாக கொண்டாடப்படுகிறது. கி.பி. 6-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வைணவம் புத்துயிர் பெறத் தொடங்கியது. திருமால் அழகிலும் குணத்திலும் ஆழ்ந்து நெஞ்சுருக ஆழ்வார்கள் பாடிய 4000 பாடல்களையும் (பாசுரங்கள்) 11-ஆம் நூற்றாண்டில் நாதமுனி என்பவர் நாலாயிரத்திவ்விய பிரபந்தம் என்னும் பெயரில் நூலாகத் தொகுத்தார். பன்னிரு ஆழ்வார்களின் நூல்களே வைணவப் பக்தி இலக்கியங்களாகும். அது காலத்திலும் சிறந்து விளங்குகிறது.
இந்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்னும் நூல். தமிழ் பேசும் வைணவர்கள் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் பேசும் வைணவர்களாலும் இன்றும் தினமும் படிக்கப்பட்டு வருகிறது என்பது இதன் இன்னொரு சிறப்பு.இது,
" முதலாயிரம்-----------947 பாடல்கள்
பெரிய திருமொழி----1134 பாடல்கள்
திருவாய்மொழி------1102 பாடல்கள்
இயற்பா---------------817 பாடல்கள்" என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஆழ்வார்கள் எழுதிய திவ்விய பிரபந்தங்கள் மொத்தம் 24 வகைப்படும். அவைகள் திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி, திருச்சந்தவிருத்தம், திருமாலை, திருப்பள்ளி எழுச்சி, அமலனாதிபிரான், கண்ணிநுண்சிறுத்தாம்பு, பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, நான்முகன் திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருஎழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், இராமானுச நூற்றந்தாதி ஆகியனவாகும்.
இந்தப் பாடல்கள் அனைத்தும் பெருமாளையும் , அவரது பல்வேறு அவதாரங்களையும் குறித்து அமைந்துள்ளன. பெரும்பாலான பாடல்கள் 108 திவ்ய தேசங்களில் பாடப்பட்டுள்ளன. இந்த தொகுப்பில், சுமார் 1100 பாடல்கள் நம்மாழ்வாரால் இயற்றப்பட்டதாகும். இப்பாசுரங்களின் மொத்த எண்ணிக்கை 3892 ஆகும். இராமானுசர் காலத்தில் வாழ்ந்த திருவரங்கத்து அமுதனார் இயற்றிய இராமானுசர் நூற்றந்தாதியையும் (108 பாசுரங்கள் கொண்டது) சேர்த்து நாலாயிரம் என்பர். இவற்றுள் பெரும்பாலானவை பண்ணுடன் பாடக்கூடிய இசைப்பாடல்களாகும்.
வாருங்கள் இனி பன்னிரு ஆழ்வார்களின் வரலாற்றை பற்றிப் பார்ப்போம் :-
பன்னிரு ஆழ்வார்கள் என்று அழைக்கப்படும் திருமாலின் அடியவர்களின் பட்டியல் பின்வருமாறு:-
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய இப்பெரியோர்கள் தான் பன்னிரு ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களைப் பற்றி சுருக்கமாகக் காண்போமாக
