ஆற்றுப் படலம் - 26
சரயுவெள்ளம் முல்லையில் புக்குக்
கண்ணனை ஒத்தமை
26.
செறிநறுந் தயிரும், பாலும்,
வெண்ணெயும், சேந்த நெய்யும்,
உறியொடு வாரி உண்டு,
குருந்தொடு மருதம் உந்தி,
மறிவிழி ஆயர் மாதர்
வனைதுகில் வாரும் நீரால்,
பொறிவரி அரவின் ஆடும்
புனிதனும் போலும் அன்றே.
செறி நறுந்தயிரும்- தொய்ந்து இறுகிய மணம் மிக்க தயிரையும்;
பாலும், வெண்ணெயும், சேந்த நெய்யும்- பால், வெண்ணெய், சிவந்த
நெய் ஆகியவற்றையும்; உறியொடு வாரி உண்டு- அவற்றைத்
தாங்கியிருந்த உறிகளொடு கவர்ந்து உண்டு; குருந்தொடு மருதம்
உந்தி- குருந்த மரத்தோடு மருத மரத்தையும் முறித்துத் தள்ளி; மறி
விழி ஆயர் மாதர்- மானின் விழி போன்ற விழிகள் உடைய
இடைக்குலப் பெண்கள்; வனை துகில்- உடுத்துகின்ற ஆடைகளை;
வாரும் நீரால்- ஈர்க்கின்ற (தண்ணீரால்) தன்மையால்; பொறி வரி
அரவின் ஆடும்- புள்ளிகளையு வரிகளையும் கொண்ட (காளியன்கன்
என்ற) பாம்பின்மேல் ஆடிய; புனிதனை மானும்- தூய கண்ண
பெருமானை (அந்த சரயு வெள்ளம்) ஒத்திருக்கும்.
செறி தயிர், நறுந்தயிர் எனப் பிரித்துக் கூட்டுக. செறி
தயிர்-வினைத்தொகை; நறுந்தயிர்- பண்புத் தொகை. உறியிலிருந்து
தனித்தனியாக எடுக்காமல் உறியோடு மொத்தமாகக் கவர்ந்த செயலை
‘உறியொடு’ என்ற சொல்லாட்சி குறித்தது. மறிவிழி மருளுதலைக்
குறித்தது. வனை துகில்; வினைத்தொகை. வனைதல் அழகுற
அணிதல். அரவின் ஆடியது- காளிங்க நர்த்தனக் கதை குறித்தது.
‘இயல்பிலேயே’ குற்றத்தின் நீங்கியவனாதலின் கண்ணனைப் புனிதன்
என்றார்.
புராணச் செய்திகளைக் கற்பனை உத்தியாகக் கொள்வதை இக்காலத்
திறனாய்வாளர் ‘தொன்மம்’ என்பர். 15
