ஆற்றுப் படலம் - 22

bookmark

வெள்ளம் போர்ப்படை போன்றமை

கடலொடு போர் செய்ய...
 
22.

பணை முகக் களி யானை பல் மாக்களோடு
அணி வகுத்தென ஈர்த்து, இரைத்து ஆர்த்தலின்,
மணி உடைக் கொடி தோன்ற வந்து ஊன்றலான்,
புணரிமேல் பொரப் போவது போன்றதே.
 
பனை   முகக்  களி யானை- பருத்த முகமும் களிப்பும் கொண்ட
யானைகள்; பல   மாக்களோடு  அணி  வகுத்தென  ஈர்த்து-  பல
விலங்குகளோடு   அணிவகுத்தது  போல இழுத்துக் கொண்டு; இரைந்து
ஆர்த்தலின்-  ஆரவாரத்தோடு முழங்குதலாலும்; மணி உடைக் கொடி
தோன்ற- அழகான கொடிகள் தோன்றுமாறு; வந்து ஊன்றலால்- வந்து
தோன்றுதலாலும்;  புணரி  மேல்  பொர- கடலின்மீது படையெடுத்துப்
போர்  செய்ய  போவது  போன்றது-செல்வது போலச் சரயு வெள்ளம்
காணப்பட்டது.

பொருத்தம்     நோக்கிச் ‘சரயு வெள்ளம்’ என்ற எழுவய் வருவித்து
உரைக்கப்பட்டது. பொருதலை விளக்குவன யானை, பல்வகை   மாக்கள்
(குதிரைகள்)   முழக்கம்,   கொடி  ஆகியவை.  சரயுவின்    வெள்ளப்
பெருக்கில்   யானையும்   பல்வகை   விலங்குகளும்    ஆரவாரிக்கும்
ஒலியோடு   ஈர்க்கப்படுவதாக   விளங்கிக்  கொள்க;   இடையிடையே
தாவரக் கொடிகளும் காணப்படுவது இயற்கை.                     11