ஆற்றுப் படலம் - 21

bookmark

வெள்ளம் கட்குடியரை ஒத்தமை

குடிகாரர் :வெள்ளம்
 
21.

ஈக்கள் வண்டொடு மொய்ப்ப, வரம்பு இகந்து
ஊக்கமே மிகுந்து, உள் தெளிவு இன்றியே,
தேக்கு எறிந்து வருதலின், - தீம் புனல் -
வாக்கு தேன் நுகர் மாக்களை மானுமே.
 
தீம்புனல் -   இனிய     நீர்ப்பெருக்கு;   ஈக்கள்    வண்டொடு
மொய்ப்ப-ஈக்கள்  வண்டுகளோடு சேர்ந்து மொய்த்திட; வரம்பு இகந்து
-  அணை  கடந்து  ஒழுகலாற்று  எல்லையை மீறி; ஊக்கம்  மிகுந்து-
எழுச்சி  பெருகி  (உற்சாகம்  மிகுந்து);  உள்  தெளிவு  இன்றியே  -
உள்ளிடத்து  (உள்ளத்திலே)  தெளிவே  இல்லாமல்;  தேக்கு  எறிந்து
வருதலின்-தேக்கு  மரங்களை மோதி இழுத்து வருதலால் /  ஏப்பமிட்டு
வருவதால்; தேன் நுகர் மாக்களை மானும்.

ஈக்களும்      வண்டுகளும்  மொய்ப்பது குடிகாரரிடத்து எழும் கள்
நாற்றம்  காரணமாக,  ஆற்று  வெள்ளம் கரை கடப்பதையும்,  குடிகாரர்
ஒழுக்க  எல்லையைக்    கடப்பதையும்  ‘வரம்பு இகந்த’ என்ற தொடர்
சுட்டிற்று.    ஊக்கம்:     வெள்ளத்துக்கு    வேகமும்     குடியருக்கு
எழுச்சியையும்   குறித்தது.    உள்  தெளிவு  இன்மை;  வெள்ளத்தின்
உட்புறம்  கலங்கியிருப்பது;    மனத்திலும்  அறிவிலும்   தெளிவின்மை
குடியரிடம்  இருப்பது.  தேக்கு    மரங்களை  வீழ்த்தி  இருத்திவருவது
வெள்ளம்;  ஏப்பமிட்டுக்  கொண்டு   வருவது. தேக்கெறிதல். தேன்-கள்.
வாக்கு தேன்-வினைத்தொகை.

‘மஞ்சுலாம்     சோலை’ என்று    தொடங்கும் பெரிய திருமொழிப்
பாசுரத்தின்     வியாக்கியானத்தில்         இப்பாடலின்     முதலடி
பெரியவாச்சான்பிள்ளையால் எடுத்தாளப்பட்டது.                  10